தமிழக சட்டமன்ற தேர்தலில் ஆளுங்கட்சியாக இருந்த திமுக வீழ்த்தப்பட்ட நிலையில், தவெக வெற்றி பெற்று ஆட்சியை அமைத்துள்ளது. இதனையடுத்து அதிமுக, பாஜக உள்ளிட்ட கட்சிகளில் இருந்து முன்னாள் அமைச்சர்கள், மூத்த தலைவர்கள், எம்எல்ஏக்கள் அடுத்தடுத்து இணைந்து வருகிறார்கள். இந்த நிலையில் யாரும் எதிர்பார்க்காத வகையில் திடீர் திருப்பமாக இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் மூத்த தலைவர்களில் ஒருவரான சி.மகேந்திரன் தவெகவில் இன்று இணைந்திருப்பது அரசியல் வட்டாரத்தை பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
அந்த வகையில் தவெகவின் பனையூர் அலுவலகத்தில் நடைபெற்ற நிகழ்வில் தவெக பொதுச்செயலாளரும், அமைச்சருமான ஆனந்த் முன்னிலையில் சி.மகேந்திரன் தவெகவில் இணைந்தார்.
இதனை தொடர்ந்து நிகழ்ச்சியில் பேசிய சி.மகேந்திரன் தவெகவில் இணைவதற்கான காரணத்தை கூறினார். அந்த வகையில்,அரசியலில் நான் வித்தியாசமானவர். தமிழகத்தில் உள்ள பல சிறைச்சாலைகளில் போராட்டங்களில் பங்கேற்று சிறையில் இருந்தவன் நான். 18 வயது முதல் இன்று வரை கம்யூனிஸ்ட் இயக்கத்திற்காக போராடி வருகிறேன். இந்த நிலையில் நான் ஏன் தவெகவிற்கு வந்தேன் என்பது முக்கியமானது. அதிலும் சிகப்பு துண்டை போட்டுக்கொண்டு வந்துள்ளேன். என்னுடைய சிகப்பு துண்டை எடுக்காமல் இங்கு செயல்பட வேண்டும்.
என்னுடைய வாழ்நாள் முழுவதும் சிந்தித்து நிறைவேற்ற முடியாத ஒரு பிரச்சனை என்றவென்றால் ஊழல் ஒழிப்பு தான், அதனை ஒழிக்க முடியும் என்ற நம்பிக்கையை தமிழக முதலமைச்சர் விஜய் தந்துள்ளார். இரண்டாவது இந்த சமூகமானது மேல் தட்டு மக்களுக்கான ஆதிக்ககாரர்களுக்கான வசதியை தந்துள்ளது. ஒடுக்கப்பட்ட மக்களுக்கு அரசின் பணம், அரசாங்கத்தின் உணர்வுகளை சாதாரணமான ஒருவருக்கு கொண்டு சேர்த்ததற்கான சாத்தியங்களை இந்த தேர்தல் விஜய் தலைமையில் துவக்கி வைத்துள்ளது. இது தமிழகத்தின் வெற்றி மடுமல்ல இந்தியாவின் வெற்றியாக கருதுகிறேன். இப்படிப்பட்ட வெற்றியை எங்குமே பார்க்க முடியாது.
எனது அரசியலில் நான் வியந்து பார்த்தது என்னவென்றால் இந்த தேர்தல் ஜாதியை ஒழித்துள்ளது. மதத்தை ஒழித்து காட்டியுள்ளது. ஏழை பணக்காரன் என்ற வேறுபாட்டை ஒழித்து இந்திய ஜனநாயகத்தில் சராசரி குடிமகனும் தேர்தலில் நின்று வெற்றி பெற்று வர முடியும் என்பதை தலைவர் தளபதி நிரூபித்து காட்டியுள்ளார். இந்த தேர்தல் பணம் இல்லாதவர், காசு இல்லாதவர் தேர்தலில் வெற்றி பெற்று செல்ல முடியும் என்பதை காட்டியுள்ளது.
ஜனநாயகத்தின் புரட்சியாக கருதுகிறேன். அதனால் தான் கட்சியை கடந்து, நம்முறையை வேறுபாடுகளை கடந்து பெரியார் இருந்தது போல அம்பேத்கர் இருந்தது போல பெரிய இயக்கமாக வளர வேண்டும். இதற்கான விதை தூவப்பட்டுள்ளது. எல்லாரும் இணைந்து செயல்பட வேண்டும் என்ற முறையில் இந்த இயக்கத்தில் இணைந்துள்ளதாக சி.மகேந்திரன் தெரிவித்தார்.