184 ஆண்டுகால வரலாற்றில் திருப்புமுனை - பச்சையப்பன் கல்லூரிக்கு 'இருபாலர்' (Co-Ed) அந்தஸ்து வழங்கி தமிழக அரசு உத்தரவு!
Dinamaalai June 18, 2026 09:48 PM

தமிழகத்தின் மிகப்பழமையான மற்றும் பெருமைமிக்க கல்வி நிறுவனங்களில் ஒன்றான சென்னை பச்சையப்பன் கல்லூரி, தனது 184 ஆண்டுகால வரலாற்றில் முதன்முறையாக இந்த ஆண்டு முதல் இருபாலர் பயிலும் கல்லூரியாக மாற்றப்பட்டுள்ளது. இதற்கான அதிகாரப்பூர்வ அனுமதியைத் தமிழ்நாடு அரசு  வழங்கியுள்ளது.

பேரறிஞர் அண்ணா, நாவலர் நெடுஞ்செழியன், பேராசிரியர் அன்பழகன், ஈ.வி.கே.சம்பத் மற்றும் கவிஞர் வைரமுத்து போன்ற தமிழகத்தின் எண்ணற்ற ஆளுமைகளை உருவாக்கிய இந்த வரலாற்றுச் சிறப்புமிக்க ஆடவர் கல்லூரி, இனி மாணவிகளும் பயிலும் வகையில் புதிய பரிமாணத்தைப் பெற்றுள்ளது.

சமீபகாலமாகத் தமிழ்நாட்டில் உள்ள தூய ஆடவர் கலை மற்றும் அறிவியல் கல்லூரிகளில் மாணவர் சேர்க்கை விகிதம் கணிசமாகக் குறைந்து வருகிறது. அதே வேளையில், இருபாலர் பயிலும் கல்லூரிகளில் சேர மாணவர், மாணவியர் என இருதரப்பிலுமே ஆர்வம் அதிகரித்து வருகிறது. இதன் காரணமாக இருபாலர் கல்லூரிகளில் சேர்க்கை இடங்கள் மிக வேகமாக நிரம்பி விடுகின்றன.

இதனைக் கருத்தில் கொண்டும், உயர்கல்வியில் பாலினச் சமத்துவத்தை ஊக்குவிக்கும் நோக்கிலும் தமிழ்நாடு அரசு இந்த முடிவை எடுத்துள்ளது. ஏற்கனவே சென்னை நந்தனத்தில் இயங்கி வந்த ஆடவர் அரசு கலைக் கல்லூரி சில ஆண்டுகளுக்கு முன்பு இருபாலர் கல்லூரியாக வெற்றிகரமாக மாற்றம் செய்யப்பட்டதைத் தொடர்ந்து, அமைந்தகரையில் அமைந்துள்ள வரலாற்றுச் சிறப்புமிக்க பச்சையப்பன் கல்லூரிக்கும் இந்த அந்தஸ்து நீட்டிக்கப்பட்டுள்ளது.

இந்த வரலாற்றுச் சிறப்புமிக்க மாற்றம் குறித்துப் பச்சையப்பன் கல்லூரியின் முதல்வர் பேபி குல்னாஸ் வெளியிட்டுள்ள அதிகாரப்பூர்வ அறிக்கையில், "1842 ஆம் ஆண்டு நிறுவப்பட்ட பச்சையப்பன் கல்லூரி, பல தலைமுறைகளாகக் கல்விச் சிறப்பு மற்றும் சமூகப் பொறுப்பின் அடையாளமாக விளங்கி வருகிறது. தற்போது வழங்கப்பட்டுள்ள இருபாலர் அந்தஸ்து, கல்லூரியின் வரலாற்றில் ஒரு முக்கிய திருப்புமுனையாகும். இந்த முடிவு மாணவிகளுக்கும் தரமான உயர்கல்வி பெறுவதற்கான அதிக வாய்ப்புகளை உருவாக்குவதோடு, பன்முகத்தன்மை கொண்ட உயிர்ப்பான கல்விச் சூழலை ஏற்படுத்தும்."

மேலும், கல்லூரியின் பாரம்பரியத்தையும் பெருமைமிகு மரபையும் பாதுகாத்தபடியே, நவீன கல்வி மதிப்புகளுக்கு இம்முயற்சி உறுதுணையாக அமையும் என்றும், நீண்டகாலமாக எதிர்பார்க்கப்பட்ட இந்த அனுமதியை வழங்கிய தமிழ்நாடு அரசு மற்றும் உயர்கல்வித் துறைக்குக் கல்லூரி நிர்வாகம், பேராசிரியர்கள், மாணவர்கள் மற்றும் முன்னாள் மாணவர்கள் சார்பில் மனமார்ந்த நன்றியைத் தெரிவித்துக் கொள்வதாகவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.

இரண்டு நூற்றாண்டுகளாகச் சமூகத்திற்குச் சிறப்பாகச் சேவை செய்து வரும் பச்சையப்பன் கல்லூரியின் இந்த அடுத்தகட்டப் பாய்ச்சல், கொங்கு மற்றும் வட தமிழகப் பகுதிகளில் இருந்து சென்னைக்கு உயர்கல்வி பயில வரும் மாணவிகளுக்குப் புதிய மற்றும் பாதுகாப்பான கல்வி வாய்ப்புகளைத் திறந்துவிட்டுள்ளது.

© Copyright @2026 LIDEA. All Rights Reserved.