இனியும் வேடிக்கை பார்த்துக்கொண்டிருக்க முடியாது.! தவெக அரசை எச்சரிக்கும் உதயநிதி
கு. அஜ்மல்கான் June 24, 2026 02:14 PM

திமுக நிர்வாகிகள் கைது

தவெக ஆட்சியின் செயல்பாடுகளை விமர்சித்து திமுக சார்பாக Gen Z கூட்டத்தை நடத்தி வந்த நிர்வாகிகளை தவெக அரசு கைது செய்து வருவதாக திமுக குற்றம் சாட்டியுள்ளது. இது தொடர்பாக எதிர்கட்சி தலைவரும், திமுக இளைஞர் அணி செயலாளருமான உதயநிதி வெளியிட்டுள்ள பதிவில், கழகத்தின் GenZ இளைஞர்களை ஒருங்கிணைத்துக் கூட்டங்கள் நடத்தி வந்த தம்பி அன்பானந்தன் அரியப்பனை, கிருஷ்ணகிரி ராயக்கோட்டையில் அவரது வீட்டுக்குள் நள்ளிரவில் அத்துமீறி நுழைந்து காவல்துறையினர் கைது செய்ய முயற்சி செய்ததை வன்மையாக கண்டிக்கிறேன். இதே போல சமீபத்தில், Gen Z கூட்டத்தில் பேசிய கனி எனும் தம்பி மீது த.வெ.க. ரவுடிகள் சைதாப்பேட்டையில் கொலைவெறி தாக்குதல் நடத்தியுள்ளனர்.

இது தான் மாற்றமா?

தம்பி கனியை தாக்கிய குற்றவாளிகள் மீது இதுவரை எந்த வழக்கும் பதிவு செய்யாத காவல்துறை, சிகிச்சைக்காக மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு இருந்த தம்பி கனியை மிரட்டி டிஸ்சார்ஜ் செய்ய வைத்தது. கழக இளைஞர்கள் ஆளுங்கட்சியையும் - அரசையும் எதிர்த்து பேசினால் காவல்துறையை அனுப்புவது, அதுவே, தாக்கியவர்கள் த.வெ.க.வினர் என்றால் வேடிக்கைப் பார்ப்பது… இது தான் மாற்றமா?

வேடிக்கை பார்த்து கொண்டிருக்க முடியாது - உதயநிதி

நிர்வாகத்திறனற்ற SofaModel அரசின் போலி பிம்பம், இளைஞர்கள் மத்தியில் சுக்குநூறாக நொறுங்கி வருவதைப் பொறுத்துக்கொள்ள முடியாமல் இந்த ஆட்சியாளர்கள் அடக்குமுறையை கையில் எடுத்து இருக்கிறார்கள்.கழக இளைஞர்களை காவல் துறையை ஏவி அச்சுறுத்தலாம் என்று ஆளும் அரசு நினைத்தால், கழகம் அதனை வேடிக்கைப் பார்த்துக் கொண்டிருக்காது என்று எச்சரிக்கிறேன் என உதயநிதி தனது பதிவில் குறிப்பிட்டுள்ளார். 

© Copyright @2026 LIDEA. All Rights Reserved.