தமிழ்நாட்டில் மாணவர்களுக்கு வழங்கப்பட இருக்கும் அடையாள அட்டை பேசுபொருளான நிலையில் என்னதான் நடந்தது என்று பார்ப்போம்.
முன்னதாக நேற்று வருவாய்த் துறை அமைச்சர் செங்கோட்டையன் செய்தியாளர்களிடம் கூறும்போது, ’’பள்ளி குழந்தைகள் அனைவருக்கும் சாதிச் சான்றிதழை வழங்குவதில் மாற்றத்தை உருவாக்க நடவடிக்கை மேற்கொண்டு இருக்கிறோம். ஐடி கார்டு என்று கூறப்படும் அடையாள அட்டையை வழங்க முடிவு செய்துள்ளோம்.
மாணவர்களின் முகவரி, சாதி, ரத்த வகை, ஆதார் அட்டை, தொலைபேசி அட்டை அனைத்தும் அதில் இணைக்கப்படும். நீங்கள் அடையாள அட்டையை வைத்திருப்பதைப் போல ஒவ்வொரு மாணவருக்கும் வழங்கப்படும்.
முதல்கட்டமாக 10, 12ஆம் வகுப்பு மாணவர்களுக்கு வழங்க நடவடிக்கை எடுத்து வருகிறோம்’’ என்று தெரிவித்து இருந்தார்.
இது பொதுச் சமூகத்தில் கடும் எதிர்ப்பலைகளை உருவாக்கியது. மாணவர்கள் அடையாள அட்டையில் சாதி அடையாளமா என்று எதிர் குரல் எழுந்தது.
இதுகுறித்து முன்னாள் அமைச்சர் அன்பில் மகேஸ் பொய்யாமொழி கூறும்போது, மாணவர்களின் அடிப்படை தகவல்கள் அடங்கிய ஒரு கார்டு வழங்கப் போகிறீர்களா? அப்படியென்றால் அதில் சாதி குறித்த தகவல்களும் இருக்குமென்றால் அது தேவையில்லாதது!
மாணவர்களின் ரத்த வகை, ஆதார் எண் போன்றவற்றை மட்டும் அறிய வேண்டிய இடத்தில், சாதி குறித்த அடையாளமும் தேவைதானா? இடஒதுக்கீடு மற்றும் அரசின் சமூகநீதி பயன்களை பெற வேண்டிய இடத்தில் மட்டும் சாதிச் சான்றிதழ் விவரங்களை வெளிப்படுத்திக் கொள்ளலாம். அமைச்சர் இதுகுறித்து விரிவான பதில் அளிக்க வேண்டும்.
ஒளிந்திருந்த பூனை இவ்வளவு சீக்கிரம் வெளியே வரும் என எதிர்பார்க்கவில்லை! தேசியக் கல்விக் கொள்கை - 2020ன் ஒரு அங்கமாக APAAR (Automated Permanent Academic Account Registry) Card வழங்கும் திட்டம் உள்ளது. அதாவது “ஒரே நாடு ஒரே அடையாள அட்டை” என்ற அடிப்படையில் நமது தமிழ்நாட்டு மாணவர்களின் சுயவிவரத்தை ஒன்றிய அரசிடம் (அதிகாரப்பூர்வமாக!) ஒப்படைக்கும் திட்டம்.
இதைத்தான் வேறு வடிவத்தில் அமல்படுத்த இருக்கிறார்கள் என்பது த.வெ.க. அரசின் அமைச்சர் பேசியிருப்பதில் இருந்து தெரியவருகிறது. தேசியக் கல்விக் கொள்கையை ஏற்கவே மாட்டோம் என்றவர்கள், இதுபோன்ற செயல்களில் இறங்கியுள்ளார்கள்’’ என்று சாடி இருந்தார்.
எனினும் இந்தத் தகவலை பள்ளிக் கல்வித்துறை அமைச்சர் ராஜ்மோகன் மறுத்துள்ளார். இதுகுறித்து செய்தியாளர்களிடம் அவர் கூறும்போது, ”அது தவறான செய்தி... மிஸ்கம்யூனிகேஷன் ஆகியுள்ளது. கட்டாயம் பள்ளி ஐ.டி. கார்டில் சாதிப் பெயர் இடம்பெறாது. சாதிகள் இல்லையடி பாப்பா என்பதுதான் தமிழ்நாடு அரசின் கொள்கை. பிறப்பொக்கும் எல்லா உயிர்க்கும் என்பதுதான் எங்கள் கோட்பாடு.
வழக்கமாக சாதிச் சான்றிதழை காகிதத்தில் தருவார்கள். அதை பாதுகாப்பாக வைத்திருக்க முடியாது என்பதால் அட்டையில் அளிக்க முயற்சிகள் எடுக்கப்பட்டு வருகின்றன.
கட்டாயமாக மாணவர்களுக்கு வழங்கப்படும் அடையாள அட்டையில் சாதி சான்றிதழை எப்போதும் இணைக்கப் போவதில்லை’’ என்று அமைச்சர் ராஜ்மோகன் விளக்கம் அளித்துள்ளார்.