தமிழ்நாடு காங்கிரஸ் தலைவராக அறிவிக்கப்பட்டார் மாணிக்கம் தாகூர்.தமிழ்நாடு காங்கிரஸ் தலைவராக இருந்த செல்வப்பெருந்தகையை மாற்றி, புதிய தலைவரை அறிவித்தது காங்கிரஸ்.புதிய தலைவர் நியமனம் உடனே அமலுக்கு வருவதாக காங்கிரஸ் பொதுச்செயலாளர் கே.சி.வேணுகோபால் அறிவிப்பு வெளியிட்டுள்ளார்
தமிழக காங்கிரஸ் தலைவர் பதவியில் இருந்து கே.செல்வப்பெருந்தகை மாற்றப்பட்டு, அவருக்குப் பதிலாக விருதுநகர் நாடாளுமன்ற உறுப்பினர் மாணிக்கம் தாகூர் புதிய தலைவராக நியமிக்கப்பட உள்ளதாக டெல்லி காங்கிரஸ் மேலிடத் தகவல்கள் தெரிவித்து வந்த நிலையில் தற்போது அது அதிகாரபூர்வமாக அறிவித்துள்ளது காங்கிரஸ் மேலிடம்.
2026 சட்டமன்றத் தேர்தலுக்கு முன்னதாக, திமுகவுடன் காங்கிரஸ் கூட்டணி வைக்க வேண்டும் என்பதில் செல்வப்பெருந்தகை மிகவும் உறுதியாக இருந்தார். ஆனால், காங்கிரஸ் கட்சியின் மற்றொரு தரப்பான மாணிக்கம் தாகூர், ஜோதிமணி போன்ற தலைவர்கள், தவெக-வுடன் கூட்டணி வைக்க வேண்டும் என்ற டெல்லி மேலிடத்தின் விருப்பத்திற்கு ஆதரவாகச் செயல்பட்டனர்.
தேர்தல் முடிவுகளில் திமுக கூட்டணி தோல்வியைச் சந்தித்ததும், காங்கிரஸ் உடனடியாகத் தவெக ஆட்சிக்கு ஆதரவு தெரிவித்து, புதிய அரசில் இரண்டு அமைச்சர் பதவிகளையும் ஒரு ராஜ்யசபா சீட்டையும் கேட்டுப் பெற்றது. இந்த திடீர் கூட்டணி மாற்றத்தால், ஆரம்பம் முதலே திமுக ஆதரவு நிலைப்பாட்டை எடுத்த செல்வப்பெருந்தகை, கட்சிக்குள் ஓரங்கட்டப்பட்டதாகக் கூறப்படுகிறது.
சமீபத்தில் நடைபெற்ற செல்வப்பெருந்தகையின் மகள் திருமணத்திற்கு ராகுல் காந்தி, சோனியா காந்தி, மல்லிகார்ஜுன கார்கே உள்ளிட்ட காங்கிரஸ் டெல்லி தலைவர்கள் யாரும் வரவில்லை. ஆனால், திமுக தலைவர் மு.க.ஸ்டாலின், கனிமொழி ஆகியோர் நேரில் சென்று வாழ்த்தினர். இதுவே காங்கிரஸ் கட்சிக்குள் செல்வப்பெருந்தகையின் நிலை என்ன என்பதை வெட்டவெளிச்சமாக்கியது.
இதனைத் தொடர்ந்து, அண்மையில் பெங்களூரில் அகில இந்திய காங்கிரஸ் தலைவர் மல்லிகார்ஜுன கார்கேவை நேரில் சந்தித்த செல்வப்பெருந்தகை, தன்னை தலைவர் பொறுப்பில் இருந்து விடுவிக்குமாறு கடிதம் அளித்தார் என்பது குறிப்பிடத்தக்கது
