அமெரிக்காவிற்கும் ஈரானுக்கும் இடையிலான பதற்றம் மீண்டும் அதிகரித்துள்ளது. அமெரிக்க ராணுவம் ஈரானிய இலக்குகள் மீது தாக்குதல் நடத்தியுள்ளதால், மத்திய கிழக்கில் நிலைமை மேலும் மோசமடைந்துள்ளது. ஹார்முஸ் ஜலசந்தியில் ஒரு சரக்குக் கப்பல் மீது நடத்தப்பட்ட தாக்குதலைத் தொடர்ந்து, ஈரான் போர் நிறுத்தத்தை கண்மூடித்தனமாக மீறிவிட்டதாக அமெரிக்க அதிபர் டொனால்ட் ட்ரம்ப் குற்றம் சாட்டியுள்ள நிலையில், இந்த தாக்குதல் நடைபெற்றுள்ளது.
அமெரிக்க மத்திய கட்டளைப் பிரிவின் (CENTCOM) கூற்றுப்படி, நேற்று நடந்த இந்த தாக்குதல், ஈரானிய ஏவுகணை மற்றும் ஆளில்லா விமான சேமிப்புக் கிடங்குகளையும், கடலோர ரேடார் நிலைகளையும் குறிவைத்து நடத்தப்பட்டுள்ளது. கடந்த வியாழக்கிழமை ஒரு சரக்கு கப்பல் மீது நடத்தப்பட்ட ஆளில்லா விமான தாக்குதலுக்கு பதிலடியாகவே இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டதாக அமெரிக்கா கூறியது. அந்த தாக்குதல், அப்பகுதியில் சிக்கியிருந்த மாலுமிகளை வெளியேற்றும் திட்டங்களையும் சீர்குலைத்தது. அந்த சரக்குக் கப்பல், வளைகுடா நீர்வழியை கடக்க அங்கீகரிக்கப்படாத பாதையை பயன்படுத்தியதாகக் கூறி, ஈரான் இந்த தாக்குதலை நியாயப்படுத்தியது.
அமெரிக்க தாக்குதலைத் தொடர்ந்து, ஈரான் பதிலடி கொடுத்ததுடன், அமெரிக்கா இடைக்கால ஒப்பந்தத்தை மீறிவிட்டதாக குற்றம் சாட்டியது. பதிலடியாக அமெரிக்க ராணுவத் தளங்களை தாக்கியதாக ஈரான் கூறியது. ஒரு நாள் முன்னதாக நடந்த ஆளில்லா விமானத் தாக்குதலுக்கு வலுவான பதிலடியாகவே அமெரிக்காவின் தாக்குதல்கள் இருந்தன என்று சென்ட்காம் (CENTCOM) ஒரு அறிக்கையை வெளியிட்டது. வர்த்தகக் கப்பல்கள் மீதான ஈரானிய ராணுவத்தின் தாக்குதல், போர் நிறுத்தத்தின் தெளிவான மீறல் என்று அமெரிக்கா கூறியது.
மேலும், ஈரானின் ஆக்கிரமிப்பு நடவடிக்கைகள் கடல்வழி வர்த்தகத்திற்கும் கப்பல் போக்குவரத்தின் சுதந்திரத்திற்கும் அச்சுறுத்தலாக இருந்ததாகவும், ஹார்முஸ் ஜலசந்தியை கடந்து செல்லும் வர்த்தகக் கப்பல்களுக்கு தொடர்ந்து பாதுகாப்பான பயணத்தை வழங்குவோம் என்றும் அமெரிக்கா கூறியது.
அமெரிக்கா ஒப்பந்தத்தை மீறிவிட்டதாக ஈரானின் வெளியுறவு அமைச்சகம் இன்று காலை ஒரு அறிக்கையை வெளியிட்டது. இந்த முழு நெருக்கடிக்கும் அமெரிக்காவே காரணம் என்று ஈரான் குற்றம் சாட்டியது. தனது கடற்படை, அமெரிக்க ராணுவத் தளங்களை தாக்கியதாக ஐ.ஆர்.ஜி.சி (IRGC) கூறியது.
அமெரிக்காவும் ஈரானும் ஜூன் 17 அன்று 14 அம்ச ஒப்பந்தத்தில் உடன்பட்டன. இதில், வர்த்தகக் கப்பல்கள் 60 நாட்களுக்கு பாதுகாப்பாக செல்வதை உறுதி செய்வதாக ஈரான் உறுதியளித்தது. இந்த ஒப்பந்தத்தை செயல்படுத்துவதில் ஈரானுக்கு ஏதேனும் ஆட்சேபனைகள் இருந்தால், பேச்சுவார்த்தைக்கான கதவு திறந்தே உள்ளது. ஆனால், வன்முறைக்கு வன்முறையே பதிலடி கொடுக்கப்படும் என்று அமெரிக்க துணை அதிபர் ஜே.டி. வான்ஸ் சமூக வலைதளத்தில் தெரிவித்தார்.
பேச்சுவார்த்தைகளுக்கு மத்தியில் அமெரிக்கா மீண்டும் தாக்குதல் நடத்தியுள்ளதாக ஈரான் நாடாளுமன்றத்தின் தேசிய பாதுகாப்புக் குழுவின் தலைவர் இப்ராஹிம் அஜிசி கூறினார். இது போர் நிறுத்தத்தின் கடுமையான மீறல் என்றும், இதற்கு பதிலடி கொடுக்கப்படும் என்றும் அவர் கூறினார். வெள்ளை மாளிகையில் செய்தியாளர்களிடம் பேசிய டொனால்ட் ட்ரம்ப் , ஈரானின் சமீபத்திய நடவடிக்கைகள் தனக்கு பிடிக்கவில்லை என்று கூறினார். ஈரான் இதை செய்திருக்கக் கூடாது என்றும் அவர் கூறினார்.