ஜனநாயகன் பட தயாரிப்பாளர் கர்நாடகாவை சேர்ந்தவர் அல்ல…! “உண்மையை உடைத்த அமைச்சர் நிர்மல் குமார்”… அரசு பதவி கொடுத்ததன் சீக்ரெட் வெளியீடு…!!
SeithiSolai Tamil June 27, 2026 10:48 PM

தமிழக சட்டசபை தேர்தலில் தனிப்பெரும்பான்மை பெற்று, காங்கிரஸ், விசிக, இடதுசாரிகள் மற்றும் முஸ்லிம் லீக் ஆகிய கட்சிகளின் ஆதரவுடன் ஆட்சி அமைத்துள்ள தமிழக வெற்றிக் கழக அரசுக்கு, புதிய நியமனங்கள் தொடர்பாக அடுத்தடுத்து அரசியல் ரீதியான எதிர்ப்புகள் கிளம்பி வருகின்றன. முதலமைச்சர் விஜய் ஆட்சிக்கு வந்தவுடன் அவரது ஜோதிடருக்கு அரசு பதவி வழங்கப்பட்டு, பின்னர் எதிர்க்கட்சிகளின் கடும் கண்டனம் காரணமாக அந்த உத்தரவு திரும்பப் பெறப்பட்டது.

இந்தச் பரபரப்பு அடங்குவதற்குள், தற்போது ஜனநாயகன் பட தயாரிப்பாளர்  வெங்கட நாராயணா என்பவரை தமிழ்நாடு அரசுக்கான டெல்லி பிரதிநியாக தமிழக அரசு நியமித்துள்ளது புதிய சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது. மத்திய அரசுக்கும் மாநில அரசுக்கும் பாலமாகச் செயல்பட வேண்டிய இந்த முக்கிய பதவிக்கு, மேகதாது அணை விவகாரத்தில் கர்நாடகாவுடன் ஏற்கனவே பிரச்சினை இருக்கும் சூழலில், அம்மாநிலத்தைச் சேர்ந்த ஒருவரை நியமிக்க வேண்டுமா என எதிர்க்கட்சிகள் கேள்வி எழுப்பியுள்ளன. தமிழ்நாட்டில் இதற்கு தகுதியான நபர் இல்லையா என்று நாடாளுமன்ற உறுப்பினர் கனிமொழியும் கண்டனம் தெரிந்துள்ளது குறிப்பிடத்தக்கது.

இந்த சர்ச்சைகள் மற்றும் விமர்சனங்கள் குறித்து அமைச்சர் நிர்மல் குமார் செய்தியாளர்களிடம் விளக்கம் அளித்துள்ளார். வெங்கட நாராயணா குறித்துப் பலரும் தவறாகப் புரிந்து கொண்டுள்ளதாகக் குறிப்பிட்ட அமைச்சர், அவர் கர்நாடக மாநிலத்தைச் சேர்ந்தவர் அல்ல என்றும், ஆந்திராவைச் சேர்ந்த அவர் கர்நாடகாவில் தொழில் மட்டுமே செய்து வருவதாகவும் தெளிவுபடுத்தியுள்ளார். மேலும், டெல்லி பிரதிநிதி என்பவர் பெரிய முடிவுகளையோ அல்லது ஒப்புதல்களையோ வழங்கப் போவதில்லை என்றும், மத்திய அரசுக்கும் தமிழ்நாட்டுக்கும் இடையே ஒரு ஒருங்கிணைப்பாளராக மட்டுமே செயல்படுவார் என்றும் அவர் கூறியுள்ளார்.

கடந்த காலத்தில் தவெக தலைவர் விஜய் மற்றும் கட்சி மீது தவறான குற்றச்சாட்டுகளைக் கூற பல அழுத்தங்கள் வந்தபோதும், மிகவும் உறுதியாகவும் நம்பிக்கையாகவும் நின்றவர் வெங்கட நாராயணா என்றும், கடந்த காலங்களில் தேர்தலில் தோற்றவர்களுக்கு அலங்காரப் பதவியாக வழங்கப்பட்ட இந்த பொறுப்பு, தற்போது தகுதியான மற்றும் நம்பிக்கையான நபருக்கு வழங்கப்பட்டுள்ளதாகவும் அமைச்சர் நிர்மல் குமார் தெரிவித்துள்ளார்.

© Copyright @2026 LIDEA. All Rights Reserved.