அரசியலுக்கு அச்சாரம் போடும் சூர்யா? நற்பணி மன்ற நிர்வாகி பேச்சால் பரபரப்பு
ராகேஷ் தாரா June 29, 2026 12:14 AM
அகில இந்திய சூர்யா தலைமை நற்பணி இயக்க மாநில, மாவட்ட நிர்வாகிகள் ஆலோசனை கூட்டம் இன்று தலைமை அலுவலகத்தில் நடைபெற்றது. இதில் சூர்யா ரசிகர் மன்ற நிர்வாகி ஒருவர் சூர்யா அரசியலுக்கு வருவார் என்று பேசியுள்ளது ரசிகர்களிடையே பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது . 
 
நடிகர் விஜய் சட்டமன்ற தேர்தலில் வெற்றிப்பெற்று தமிழக முதல்வராக பொறுப்பேற்றுள்ளது தமிழக அரசியல் வரலாற்றில் மிகப்பெரிய திருப்பத்தை உருவாக்கியுள்ளது. விஜய் அரசியலில் களமிறங்கி வெற்றிக்கண்டுள்ளது மற்ற நடிகர்களின் ரசிகர்களுக்கும் பெரியளவில் உற்சாகத்தை கொடுத்துள்ளது. அஜித் , ரஜினி , சூர்யா , தனுஷ் உள்ளிட்ட நடிகர்களும் அரசியலில் களமிறங்க வேண்டும் என அவர்களின் ரசிகர்கள் தங்களது விருப்பத்தை சமூக வலைதளத்தில் பதிவு செய்து வருகிறார்கள். அந்த வகையில் பல வருடங்களாக மக்கள் பணியில் இருக்கும் நடிகர் சூர்யா அரசியலுக்கு வர இருப்பதாக தகவல் ஒன்று படுவேகமாக பரவி வருகிறது. சூர்யா நற்பணி மன்ற நிர்வாகி ஒருவர் பேச்சே இதற்கு முக்கிய காரணமாக அமைந்துள்ளது 

நற்பணி மன்ற நிர்வாகி பேச்சால் பரபரப்பு

அகில இந்திய சூர்யா தலைமை நற்பணி இயக்க மாநில, மாவட்ட நிர்வாகிகள் ஆலோசனை கூட்டம் இன்று தலைமை அலுவலகத்தில் நடைபெற்றது. இதில் பேசிய சூர்யா நற்பணி மன்ற நிர்வாகி " இங்கு இருக்கும் உங்கள் முகங்களைப் பார்க்கும்போது எனக்கு பல எம்.எல்.ஏக்கள் தெரிகிறார்கள். எம்.பி க்கள் தெரிகிறார்கள். காலமும் கடவுளும் நினைத்துவிட்டால் இது நடக்கும். சூர்யா நற்பணி மன்றம் என்கிற ஒரு அடி உயரமுள்ள இந்த மூங்கில் 130 அடி உயரத்திற்கு செல்லும். அதற்கு நீங்கள் ஒவ்வொருவரும் உழைக்க தயாராக இருக்க வேண்டும். சூர்யா அண்ணனுக்காக நீங்கள் உழைக்கத் தயாராக இருக்கிறீர்களா ? நீங்கள் ஒவ்வொருவரும் துடுப்பு போட்டால் தான் படகு முன்னோக்கி செல்லும். இங்கு நாம் நமக்கிடையில் உள்ள வேறுபாடுகளை மறந்து அண்ணன் ஒருவருக்காக எதையும் இழக்க நான் தயார் என்று நீங்கள் தயாராக இருக்கிறீர்களா " என அந்த நிர்வாகி பேசியுள்ளார். 

இந்த வீடியோ தற்போது சமூக வலைதளத்தில் வைரலாகி வரும் நிலையில் சூர்யாவுக்கு வரவேற்பும் எதிர்ப்பும் உருவாகி வருகிறது. ரசிகர் மன்ற நிர்வாகி சூர்யாவின் அனுமதியுடன் தான் அப்படி பேசினாரா என சில ரசிகர்கள் கேள்வி எழுப்பியுள்ளார்கள்.  இதுகுறித்து சூர்யா தரப்பில் இருந்து இதுவரை அதிகாரப்பூர்வமான எந்த விளக்கமோ மறுப்போ வெளியாகவில்லை. 

© Copyright @2026 LIDEA. All Rights Reserved.