"இனி நீயும் நானும் மட்டும்தான், அம்மா சொர்க்கத்திலிருந்து பார்ப்பார்" - வெனிசுலா நிலநடுக்கத்தில் மகளைக் காப்பாற்றி உயிரிழந்த மனைவி குறித்து கால்பந்து வீரரின் கண்ணீர் பதிவு!
Dinamaalai June 29, 2026 01:48 AM

"நம் மகளைக் காப்பாற்ற நீ உன் உயிரை எப்படித் தியாகம் செய்தாய் என்ற கதையை நான் அவளிடம் ஒவ்வொரு நாளும் சொல்வேன்; இறுதிவரை மகளைக் கைவிடாத துணிச்சலான பெண் நீ" என்று வெனிசுலாவில் ஏற்பட்ட நிலநடுக்கத்தில் தனது மனைவியைப் பறிகொடுத்த அந்நாட்டின் பிரபல கால்பந்து நட்சத்திர வீரர் ஹெக்டர் பெல்லோ இன்ஸ்டாகிராமில் வெளியிட்டுள்ள உருக்கமான கண்ணீர் பதிவு உலகெங்கிலும் உள்ள கோடிக்கணக்கான மக்களைக் கலங்கச் செய்துள்ளது.

தென் அமெரிக்க நாடான வெனிசுலாவில் கடந்த புதன்கிழமை மாலை சில நொடிகள் இடைவெளியில் 7.2 மற்றும் 7.5 ரிக்டர் அளவுகளில் அடுத்தடுத்து இரண்டு மிகச் சக்திவாய்ந்த இரட்டை நிலநடுக்கங்கள் ஏற்பட்டன. தலைநகர் காரகஸ் மற்றும் அதன் சுற்றுவட்டாரப் பகுதிகளில் நூற்றுக்கணக்கான அடுக்குமாடி குடியிருப்புகள் சீட்டுக்கட்டுகளைப் போலச் சரிந்து விழுந்தன.

தற்போது வரை இடிபாடுகளிலிருந்து மீட்கப்பட்டவர்களின் உயிரிழப்பு எண்ணிக்கை 1,430 ஆக உயர்ந்துள்ளது. மேலும் 3,360-க்கும் மேற்பட்டோர் காயமடைந்து சிகிச்சைப் பெற்று வருகின்றனர். இந்தக் கொடூர நிலநடுக்கப் பேரிடரில் தான், வெனிசுலாவின் புகழ்பெற்ற 'மார்டிமோ டி லா குயார்' கிளப் அணியின் கால்பந்து வீரரான ஹெக்டர் பெல்லோவின் மனைவி ஆண்ட்ரியா துரதிர்ஷ்டவசமாகக் கட்டிட இடிபாடுகளுக்குள் சிக்கி உயிரிழந்தார்.

தங்களது அடுக்குமாடி குடியிருப்பு சரிந்து விழும் கடைசி நொடியில், தனது 20 மாதக் குழந்தை அலானாவை எவ்விதப் பாதிப்பும் இன்றி ஆண்ட்ரியா தனது உடலால் மூடி அரண் போலக் காத்துள்ளார். மீட்புக் குழுவினர் தேடுதல் வேட்டை நடத்திய போது, ஆண்ட்ரியாவின் உடலுக்கு அடியில் இருந்து அக்குழந்தை அதிர்ஷ்டவசமாகக் காயங்களுடன் உயிருடன் மீட்கப்பட்டது. தாய் தனது உயிரைக் கொடுத்து மகளைக் காப்பாற்றியுள்ள விபரம் மீட்புக் குழுவினரையே நெகிழச் செய்துள்ளது.

தற்போது காரகஸ் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வரும் தனது 20 மாத மகளின் கையைப் பிடித்தபடி, ஹெக்டர் பெல்லோ இன்ஸ்டாகிராமில் பதிவிட்டுள்ள கடிதம் அனைவரையும் அழச் செய்துள்ளது. மகள் அலானா தன் உயிரைக் காத்த தாய்க்கு நன்றி சொல்வது போலத் தொடங்கும் அந்தப் பதிவில், "அம்மா, நீ தான் என்றும் எனக்குப் பிடித்தமான ஹீரோ" எனக் குறிப்பிடப்பட்டுள்ளது.

மேலும், தனது மறைந்த மனைவிக்காக அவர் எழுதியுள்ளதில், "நம் குழந்தைக்கு நீ எவ்வளவு அற்புதமான தாயாக இருந்தாய் என்றும், அவளுக்கு எவ்வளவு அன்பு கொடுத்தாய் என்றும் நான் அவளிடம் வளர்ந்ததும் சொல்வேன். அவளைக் காப்பாற்ற நீ உன் உயிரை எப்படித் தியாகம் செய்தாய் என்ற கதையை நான் அவளிடம் விவரிப்பேன். இறுதிவரை தன் மகளைக் கைவிடாத ஒரு துணிச்சலான பெண் நீ" என்றவர், தொடர்ந்து மருத்துவமனையில் தீவிரச் சிகிச்சை பிரிவில் போராடி வரும் தனது பிஞ்சு மகளைக் குறித்து பெல்லோ உருக்கமாக, "மகளே, நீ வலிமையாக இருக்க வேண்டும். இன்னும் சிறிது காலம் பொறுத்திரு. என் உடைந்த இதயத்தை உன்னால் மட்டுமே குணப்படுத்த முடியும். ஒரு மகிழ்ச்சியான தந்தையாக என்னை நீ மீண்டும் பார்க்க முடியாமல் போகலாம், ஆனால் உன்னை இந்த உலகின் மிக மகிழ்ச்சியான குழந்தையாக நான் வளர்ப்பேன் என்று உன் தாயின் மீது உறுதியளிக்கிறேன்.

இப்போது நீயும் நானும் மட்டும் தான், அம்மா சொர்க்கத்திலிருந்து நம்மைக் கவனித்துக் கொண்டிருப்பார். தனது கடைசி நிமிடத்தில் அவளால் என்னிடம் பேச முடிந்திருந்தால், அவள் செய்தது போலவே, நானும் என் உயிரைக் கொடுத்து உன்னைக் காப்பாற்றத்தான் சொல்லியிருப்பாள்" என்று பெல்லோ பதிவிட்டுள்ளார். விளையாட்டு உலகைக் கடந்து இத்துயரச் சம்பவம் ஒட்டுமொத்தப் பன்னாட்டுச் சமூகத்தையும் சோகத்தில் ஆழ்த்தியுள்ளது.

© Copyright @2026 LIDEA. All Rights Reserved.