தமிழ்நாட்டில் நடந்து முடிந்த சட்டமன்ற தேர்தல் முடிவுகள் திராவிட கட்சிகளான திமுக மற்றும் அதிமுக-வை ஸ்தம்பிக்க வைத்துள்ளது. முதல் தேர்தலிலே விஜய் தனது தனிப்பட்ட செல்வாக்கு மூலமாக தமிழக வெற்றிக் கழகத்தை ஆட்சிக்கட்டிலில் அமர்த்தியுள்ளார்.
தவெக ஆட்சி அமைந்தது மட்டுமின்றி காங்கிரஸ், விசிக, இந்திய யூனியன் முஸ்லீம் லீக் கட்சி ஆகிய கட்சிகளுக்கு அமைச்சரவையில் இடமளித்துள்ளது. இது கூட்டணி ஆட்சிக்கு தொடர்ந்து மறுப்பு தெரிவித்து வந்த திமுக மற்றும் அதிமுக-விற்கு மிகப்பெரிய அதிர்ச்சியையும் ஏற்படுத்தியது.
தவெக ஆட்சி அமைத்தது மட்டுமின்றி திமுக-வின் தலைவரும், முன்னாள் முதலமைச்சருமான மு.க.ஸ்டாலின் கொளத்தூர் தொகுதியிலே தோல்வி அடைந்தது திமுக-வினருக்கு கடுமையான மன உளைச்சலை ஏற்படுத்தியது. இந்த சூழலில், தமிழ்நாட்டில் விரைவில் நடைபெற உள்ள சட்டமன்ற இடைத்தேர்தலில் வெற்றி பெற்றாக வேண்டிய வைராக்கியத்துடன் திமுக செயலாற்றி வருகிறது.
அதேசமயம், தவெக எம்எல்ஏ-க்களை தங்கள் பக்கம் இழுக்கவும் திமுக முயற்சித்து வருவதாக ஒரு தரப்பினர் குற்றம் சாட்டி வருகின்றனர். இந்த சூழலில், வானகரத்தில் நடந்த திமுக கூட்டத்தில் பேசிய அக்கட்சியின் தலைவர் மு.க.ஸ்டாலின், ஏதோ ஒரு தேர்தலில் வெற்றி வாய்ப்பை இழப்பது என்பது ஏதோ ஒரு பெரிய வீழ்ச்சி அல்ல. எத்தனையோ வெற்றிகளைப் பார்த்திருக்கும். எத்தனையோ தோல்விகளைப் பார்த்திருக்கிறோம்.
திமுக போல வெற்றி பெற்ற கட்சியும் இல்லை. தோல்வி அடைந்த கட்சியும் இல்லை. இரண்டுமே ஒன்றுதான். இடைத்தேர்தல் வரலாம். 3 மாதம் கழித்து தேர்தல் வரலாம். 6 மாதம் கழித்தும் வரலாம். ஆட்சி என்பது மெஜாரிட்டியுடன் வெற்றி பெறவில்லை. 234ல் பாதி என்ன? 118 பெற்றிருக்க வேண்டும். எவ்வளவு வெற்றி பெற்றார்கள்? 108.
நீங்கள் திமுகதான் வெற்றி பெற வேண்டும், மு.க.ஸ்டாலின்தான் முதலமைச்சராக வேண்டும் என்று வாக்களித்தீர்களே, நம்மோடு இருந்த கூட்டணி கட்சியினர் ஆதரவோடு வண்டி ஓடிகிட்டு இருக்கிறது. ஓடும் வண்டி எங்கே சென்று நிற்கப்போகிறது என்று தெரியவில்லை. ஆனால், எது நடந்தாலும் நாம் தயாராக இருக்க வேண்டும்.
எந்த நேரத்திலும் தேர்தல் வரலாம். எந்த சூழலிலும் தேர்தல் வரலாம். 100 சதவீதம் தயாராக இருக்க வேண்டும். திமுக வெற்றிக்கு இந்த நிமிடம் முதல் பாடுபடுவோம்.
இவ்வாறு அவர் பேசினார்.
தவெக கூட்டணி கட்சிகள் ஆதரவுடன் ஆட்சி நடத்தி வரும் சூழலில், திமுக மீது தவெக எம்எல்ஏ-க்களை தங்கள் பக்கம் இழுக்க முயற்சிப்பதாக குற்றச்சாட்டுகளை சிலர் தெரிவித்து வரும் சூழலில் மு.க.ஸ்டாலினின் இந்த பேச்சு பெரும் எதிர்பார்ப்பையும், அதிர்வலையையும் உண்டாக்கியுள்ளது.