மீண்டும் ஹார்மூஸ் ஜலசந்தி முற்றுகை.. .ட்ரம்ப் அறிவிப்பால் உலக நாடுகளிடையே உச்சகட்டப் பதற்றம்!
Dinamaalai July 14, 2026 07:48 PM

ஈரான் மற்றும் அமெரிக்கா இடையேயான அமைதி பேச்சுவார்த்தை ஒப்பந்தம் தோல்வியில் முடிந்ததைத் தொடர்ந்து, இரு நாடுகளுக்கும் இடையே போர் மீண்டும் தீவிரமடைந்துள்ளது. வர்த்தகக் கப்பல்கள் மீது ஈரான் தொடர்ந்து நடத்தி வரும் தாக்குதலுக்குப் பதிலடியாக, அந்நாட்டின் இராணுவத் தளங்கள் மீது அமெரிக்கப் படைகள் குண்டுவீசி அழித்துள்ளதாக அதிபர் டொனால்ட் டிரம்ப் அறிவித்துள்ளார்.

இதன் தொடர்ச்சியாக, ஈரானை ஒடுக்கும் நோக்கில் உலகிலேயே மிக முக்கியக் கடல்வழிப் பாதையான ஹார்மூஸ் ஜலசந்தியை  அமெரிக்கக் கடற்படை மீண்டும் முற்றுகையிடும் என அவர் எச்சரித்துள்ளார். தமது சமூக வலைத்தளமான 'ட்ரூத் சோசியல்' பக்கத்தில் பதிவிட்டுள்ள அதிபர் டிரம்ப், "ஹார்மூஸ் ஜலசந்தி எப்போதும் திறந்தே இருக்கும். இனிமேல் இப்பகுதியின் பாதுகாப்பை அமெரிக்காவே முழுமையாக ஏற்கும். அமெரிக்கா இனி 'ஹார்மூஸ் ஜலசந்தியின் பாதுகாவலன்' என்று அழைக்கப்படும்" எனத் தெரிவித்துள்ளார்.

மேலும், இந்தப் பாதுகாப்புப் பணிக்கான செலவினங்களை ஈடுகட்ட, இந்த ஜலசந்தி வழியாகக் கடந்து செல்லும் பிற நாடுகளின் தகுதியுடைய வர்த்தகக் கப்பல்களின் சரக்கு மதிப்பில் 20% கட்டணம் வசூலிக்கப்படும் என்றும் டிரம்ப் ஒரு புதிய அறிவிப்பை வெளியிட்டுள்ளார்.

அமெரிக்க மத்தியக் கட்டளையகம் வெளியிட்டுள்ள தகவலின்படி, இந்த கடல்வழி முற்றுகையானது முழுக்க முழுக்க ஈரானியக் கப்பல்கள் மற்றும் ஈரானுடன் வர்த்தகம் செய்யும் வாடிக்கையாளர்களின் கப்பல்களை மட்டுமே இலக்காகக் கொண்டு செயல்படுத்தப்பட உள்ளது. ஈரானின் துறைமுகங்கள், எண்ணெய் முனையங்கள் மற்றும் கடலோரப் பகுதிகளை முற்றுகையிட்டு, ஈரானின் கடல்வழி வர்த்தகம் மற்றும் கச்சா எண்ணெய் ஏற்றுமதியை முற்றிலும் முடக்குவதே இதன் முக்கிய நோக்கமாகும்.

அதே நேரத்தில், ஈரான் அல்லாத பிற நாடுகளின் சர்வதேச வர்த்தகக் கப்பல்கள் எவ்விதத் தடையுமின்றி இந்த ஜலசந்தி வழியாகத் தொடர்ந்து பயணிக்க அனுமதிக்கப்படும் என்று அமெரிக்கா தெளிவுபடுத்தியுள்ளது. இருப்பினும், டிரம்ப் அறிவித்துள்ள 20% பாதுகாப்பு வரி சர்வதேச அளவில் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

கடந்த ஞாயிற்றுக்கிழமை ஹார்மூஸ் ஜலசந்தியில் பயணித்த சைப்ரஸ் நாட்டு வர்த்தகக் கப்பல் மீது ஈரான் இராணுவம் ஏவுகணைத் தாக்குதல் நடத்தியது. இதில் இந்தியாவைச் சேர்ந்த கப்பல் ஊழியர் ஒருவர் மாயமாகியுள்ளதாகக் கூறப்படுகிறது. இதனைத் தொடர்ந்து, கடந்த மூன்று நாட்களாக ஈரானின் முக்கிய இராணுவ இலக்குகள் மற்றும் ஏவுகணை ஏவுதளங்கள் மீது அமெரிக்கப் படைகள் தொடர்ச்சியாகக் வான்வழித் தாக்குதல்களை நடத்தி வருகின்றன.

ஈரானின் கடல்வழி வர்த்தகம் மற்றும் எண்ணெய் ஏற்றுமதியை இந்த முற்றுகை முழுமையாகப் பாதிக்கும் என்பதால், வளைகுடா மற்றும் மேற்காசியப் பகுதியில் மீண்டும் முழு அளவிலான போர் வெடிக்கும் அபாயம் ஏற்பட்டுள்ளது. இதனால் சர்வதேசச் சந்தையில் கச்சா எண்ணெய்யின் விலை கணிசமாக உயரத் தொடங்கியுள்ளது.

© Copyright @2026 LIDEA. All Rights Reserved.