டிடர்ஜெண்ட் பவுடர் மற்றும் பாமாயில் கலந்த பால்.. 2 லட்சம் கிலோ தரமற்ற பால் பவுடர் – மகாராஷ்டிராவில் நடந்த அதிர்ச்சி சம்பவம்..
TV9 Tamil News July 14, 2026 09:48 PM

ஜூலை 14, 2026: மகாராஷ்டிர மாநிலம் தாராஷிவ் மாவட்டத்தின் பூம் தாலுகாவில் நடைபெற்ற பிரபல பால் கலப்பட வழக்கில், காவல்துறையும் உணவு மற்றும் மருந்து நிர்வாகமும் இணைந்து மேற்கொண்ட விசாரணையில் அதிர்ச்சி தரும் தகவல்கள் வெளியாகியுள்ளன. கைது செய்யப்பட்ட குற்றவாளிகளிடமிருந்து பறிமுதல் செய்யப்பட்ட விற்பனைப் பதிவேடுகளை ஆய்வு செய்ததில், கடந்த ஆறு மாதங்களில் சுமார் 2,30,470 கிலோ தரமற்ற பால் பவுடர் கலப்படத்திற்காக பயன்படுத்தப்பட்டிருப்பது தெரியவந்துள்ளது.

2 லட்சம் கிலோ தரமற்ற பால் பவுடர்:

இந்த அளவிலான பால் பவுடரை பயன்படுத்தி சுமார் 23,04,070 லிட்டர் செயற்கை பால் தயாரிக்கப்பட்டதாகவும், அதன் மதிப்பு ரூ.9 கோடியே 21 லட்சத்து 62 ஆயிரத்து 800 என மதிப்பிடப்பட்டுள்ளதாகவும் அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். விசாரணையில் வெளியாகியுள்ள மிகவும் அதிர்ச்சி தரும் தகவலின்படி, 100 லிட்டர் தூய பாலில் 10 லிட்டர் செயற்கை பாலை (10 சதவீதம்) கலந்து விற்பனை செய்துள்ளனர்.

இந்த 10 சதவீத கலவை விகிதத்தின் அடிப்படையில், பூம் பகுதியிலுள்ள பால் சேகரிப்பு மையங்களிலிருந்து மகாராஷ்டிராவின் பல்வேறு பகுதிகளுக்கு 2.3 கோடிக்கும் (23 மில்லியன்) அதிகமான லிட்டர் கலப்பட பால் விநியோகிக்கப்பட்டிருக்கலாம் என அதிகாரிகள் சந்தேகம் தெரிவித்துள்ளனர்.

டிடர்ஜெண்ட் பவுடர் மற்றும் பாமாயில் கலந்த பால்:

செயற்கை பால் உண்மையான பாலைப் போல தோற்றமளிக்கவும், தேவையான கொழுப்பு சத்தை உருவாக்கவும், நிர்மா டிடர்ஜென்ட் பவுடர், பாமாயில் மற்றும் மிகவும் தரமற்ற ரசாயனப் பொடிகள் பயன்படுத்தப்பட்டதாக விசாரணையில் தெரியவந்துள்ளது. இந்த வழக்கில் ஏழு பேர் மீது கடுமையான சட்டப்பிரிவுகளின் கீழ் வழக்குப் பதிவு செய்யப்பட்டிருந்தாலும், வழக்குப் பதிவு செய்யப்பட்டு எட்டு நாட்கள் ஆகியும் குற்றம்சாட்டப்பட்ட அனைவரும் தலைமறைவாக உள்ளனர்.

தலைமறைவாக உள்ளவர்களை கைது செய்ய காவல் ஆய்வாளர் தலைமையில் சிறப்பு விசாரணைக் குழு அமைக்கப்பட்டு, அவர்கள் பதுங்கியிருப்பதாக சந்தேகிக்கப்படும் இடங்களில் தொடர்ந்து சோதனைகள் நடத்தப்பட்டு வருகின்றன.

உயிருக்கு ஆபத்தான விளைவுகள் – மருத்துவர்கள் எச்சரிக்கை:

மருத்துவ நிபுணர்களின் எச்சரிக்கையின்படி, டிடர்ஜென்ட் மற்றும் பாமாயில் போன்ற ரசாயனங்கள் கலந்த இந்த செயற்கை பாலை தொடர்ந்து அருந்துவதால் கல்லீரல், சிறுநீரகம் மற்றும் செரிமான மண்டலம் கடுமையாக பாதிக்கப்படலாம். குறிப்பாக குழந்தைகள், கர்ப்பிணிப் பெண்கள் மற்றும் முதியோருக்கு இது உயிருக்கு ஆபத்தான விளைவுகளை ஏற்படுத்தக்கூடும் என எச்சரிக்கப்பட்டுள்ளது.

மேலும் படிக்க: கலப்பட உணவு முதல் தவறான லேபிள் வரை… FSSAI செயலியில் புகார் அளிப்பது எப்படி?

உணவு பாதுகாப்புச் சட்டத்தின் கீழ், உயிருக்கு ஆபத்தை ஏற்படுத்தும் வகையிலான பால் கலப்படத்தில் குற்றவாளிகள் என நிரூபிக்கப்பட்டால், ரூ.10 லட்சம் வரை அபராதமும், ஆயுள் தண்டனையும் விதிக்கப்படலாம்.

61 மூட்டைகள் கலப்பட பால் பவுடர் பறிமுதல்:

இதுகுறித்து பூம் காவல் நிலைய காவல் ஆய்வாளர் ஸ்ரீகணேஷ் கனகுடே கூறுகையில், “சோதனையின்போது 61 மூட்டைகள் கலப்பட பால் பவுடர் பறிமுதல் செய்யப்பட்டன. ஆரம்பகட்ட விசாரணையில், பாலாசாகேப் கோட்கே என்பவர் பூம் பகுதியில் உள்ள பல பால் உற்பத்தி நிலையங்களுக்கு கலப்பட பால் தயாரிக்க இந்த தரமற்ற பால் பவுடரை விநியோகித்து வந்தது தெரியவந்துள்ளது.

மேலும், இந்த மோசடியில் பல பால் சேகரிப்பு மையங்களுக்கும் தொடர்பு இருப்பது கண்டறியப்பட்டுள்ளது. ஆனால், இந்த பவுடரை பயன்படுத்தி தயாரிக்கப்பட்ட ஆயிரக்கணக்கான லிட்டர் கலப்பட பாலை வாங்கியவர்கள் யார் என்பது இன்னும் கண்டறியப்படவில்லை; அவர்களும் கைது செய்யப்படவில்லை.

© Copyright @2026 LIDEA. All Rights Reserved.