இனி சிபிஎஸ்இ 9, 10ஆம் வகுப்புகளில் மூன்றாம் மொழி கட்டாயம்: வெளியான புதிய அறிவிப்பு
க.சே.ரமணி பிரபா தேவி July 14, 2026 08:44 PM

சிபிஎஸ்இ வாரியம் 9 மற்றும் 10ஆம் வகுப்பு மாணவர்களுக்கான பாடத்திட்டத்தில் மூன்றாம் மொழியை கட்டாயமாக்கியுள்ளது. தேசிய கல்விக் கொள்கை வலியுறுத்தும் பன்மொழி கற்றலை மாணவர்களிடையே ஊக்குவிக்கும் நோக்கில், 2027- 2028 கல்வியாண்டு முதல் இந்த புதிய நடைமுறை அமலுக்கு வரவுள்ளது.

தேர்வு முறை மற்றும் மதிப்பெண்கள்

இந்த மூன்றாம் மொழிப் பாடத்திற்கு சிபிஎஸ்இ பொதுத்தேர்வு நடத்தப்படாது. மாறாக, மாணவர் படிக்கும் பள்ளிகளிலேயே அகமதிப்பீடு முறையில் 100 மதிப்பெண்களுக்கு இப்பாடம் மதிப்பீடு செய்யப்படும். பள்ளிகள் நடத்தும் இந்தத் தேர்வில் மாணவர்கள் கட்டாயம் தேர்ச்சி பெற வேண்டும்.

மறு மதிப்பீடு

ஜூலை 10ஆம் தேதி சிபிஎஸ்இ வெளியிட்ட சுற்றறிக்கையின்படி, 10ஆம் வகுப்பின்போது 3ஆம் மொழி மதிப்பீட்டில் ஒரு மாணவர் தோல்வி அடைந்தால், இறுதித் தேர்வு முடிவுகள் வெளியாகும் முன், சம்பந்தப்பட்ட பள்ளி மீண்டும் மறு மதிப்பீடு நடத்த வேண்டியது கட்டாயம்.

9ஆம் வகுப்பு மாணவர்களுக்கு இந்த விதி அடுத்த கல்வியாண்டு முதல் அமலுக்கு வர உள்ளது. 9ஆம் வகுப்பு 3ஆம் மொழி மதிப்பீட்டில் தோல்வி அடைந்தாலும் அவர்கள் 10ஆம் வகுப்புத் தேர்ச்சி பெறுவர். ஆனாலும் 10ஆம் வகுப்பு படிக்கும்போது மீதமுள்ள மதிப்பீட்டில் தேர்ச்சி பெற வேண்டும்.

மொழித் தேர்வு விதிமுறைகள்

மாணவர்கள் இந்திய அரசியலமைப்பின் 8-வது அட்டவணையில் குறிப்பிடப்பட்டுள்ள மொழிகளில் ஒன்றை தங்களின் மூன்றாம் மொழியாகத் தேர்வு செய்து கொள்ளலாம். எனினும், அவர்கள் தேர்வு செய்யும் இந்த மூன்றாம் மொழியானது, அவர்கள் ஏற்கனவே படிக்கும் முதல் மற்றும் இரண்டாம் மொழிகளில் இருந்து முற்றிலும் மாறுபட்டதாக இருக்க வேண்டும்.

மதிப்பெண் சான்றிதழில் இடம்பெறும் விதம்

இந்த மூன்றாம் மொழி அகமதிப்பீட்டில் மாணவர்கள் பெறும் மதிப்பெண்கள், அவர்களின் ஒட்டுமொத்த தேர்ச்சி சதவீதத்தையோ அல்லது இறுதி மொத்த மதிப்பெண்களையோ கணக்கிட சேர்க்கப்படாது.

ஆனால், இப்பாடத் தேர்வில் தேர்ச்சி பெறுவது கட்டாயம் என்பதோடு, இதில் அவர்கள் பெறும் தரநிலைகள் மாணவர்களின் இறுதி மதிப்பெண் சான்றிதழில் பதிவு செய்யப்படும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

சிறப்பு மாணவர்களுக்கு விலக்கு

இந்தக் கட்டாய மூன்றாம் மொழி நடைமுறையில் இருந்து, சிறப்புத் தேவைகள் உள்ள குழந்தைகளுக்கு  முழுமையாக விலக்கு அளிக்கப்பட்டுள்ளது.

© Copyright @2026 LIDEA. All Rights Reserved.