மகாராஷ்டிரா மாநிலம் தானே நகரில் உள்ள வாக்லே எஸ்டேட் பகுதியில் அமைந்துள்ள கிணற்றிலிருந்து ஆபத்தான நிலையில் சிறு முதலைக் குஞ்சு ஒன்று மீட்கப்பட்டுள்ளது. இப்பகுதியில் வசிக்கும் மக்கள் கிணற்றுக்குள் முதலையை கண்டு அதிர்ச்சியடைந்து, உடனடியாக விலங்குகள் நலச் சங்கத்தின் (WWA) அவசர உதவி மையத்தைத் தொடர்பு கொண்டு தகவல் அளித்துள்ளனர்.
இதையடுத்து சம்பவ இடத்திற்குத் விரைந்து வந்த மீட்புக்குழுவினர், கிணற்றுக்குள் தத்தளித்துக் கொண்டிருந்த 32 சென்டிமீட்டர் நீளம் கொண்ட அந்த முதலைக் குஞ்சைப் பாதுகாப்பாக மீட்டனர். குடியிருப்புப் பகுதிக்கும் பள்ளிக்கும் மிக அருகில் இருந்த அந்த கிணறு முதலை வாழ்வதற்குரிய இயற்கையான வாழிடம் இல்லை என்பதால், எந்தவித காயமும் ஏற்படாமல் குழுவினர் அதனைச் சாதுரியமாகக் கையாள்து வெளியே கொண்டு வந்தனர்.
மீட்கப்பட்ட அந்தக் குட்டி முதலைக்குத் உடனடியாகத் தேவையான மருத்துவப் பரிசோதனைகள் டாக்டர் சிரியாரின் பெட் கிளினிக்கில் மேற்கொள்ளப்பட்டன. அதனைத் தொடர்ந்து அது விலங்குகள் நலச் சங்கத்தின் காப்பகத்திற்கு மாற்றப்பட்டுத் தீவிர கண்காணிப்பில் வைக்கப்பட்டுள்ளதாகவும், வனத்துறையினரின் முறையான அனுமதி கிடைத்த பிறகு அது மீண்டும் அதன் இயற்கையான வாழிடத்தில் விடப்படும் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.