நீட் தேர்வு: ஒரே மையத்தில் 8 பேர் முழு மதிப்பெண் பெற்றது எப்படி? தொடரும் சர்ச்சை
BBC Tamil June 07, 2024 09:48 PM
Getty Images

2024-ஆம் ஆண்டுக்கான நீட் தேர்வில் நாடு முழுவதும் 67 பேர் முழு மதிப்பெண்கள் பெற்றுள்ளனர். இது வரை பொதுவாக இரண்டு அல்லது மூன்று பேர் மட்டுமே முழு மதிப்பெண்கள் எடுத்து வந்தனர். 'இந்த முறை எப்படி 67 பேர் முழு மதிப்பெண்கள் எடுத்தனர்?' என்று இது பலரிடமும் ஆச்சரியத்தைக் கிளப்பியுள்ளது. கடந்த ஆண்டு தமிழ்நாட்டிலிருந்து ஒரு மாணவரும் ஆந்திராவிலிருந்து ஒரு மாணவரும் முழு மதிப்பெண்கள் எடுத்திருந்தனர்.

ஒரே தேர்வு மையத்திலிருந்து ஏழு அல்லது எட்டு மாணவர்கள் முழு மதிப்பெண்கள் பெறுவது எப்படி சாத்தியமாகும் என்று கல்வியாளர்கள் உட்பட பலர் புகார்கள் எழுப்பி வருகின்றனர்.

மதிப்பெண்களில் குளறுபடிகள் இருக்கின்றன என புகார்கள் எழுப்பப்பட்ட பிறகு, 'சிலருக்குக் கருணை மதிப்பெண்கள் வழங்கப்பட்டன' என்ற தகவலை தேசிய தேர்வு முகமை வெளியிட்டது. இவை எல்லாம், சந்தேகங்களை எழுப்புவதாகவும், வெளிப்படைத்தன்மை இல்லை எனவும் குற்றம் சாட்டப்படுகிறது.

Getty Images 2023-ஆம் ஆண்டில், நீட் தேர்வுக்குப் பதிவு செய்தவர்களின் எண்ணிக்கை, அதற்குய முந்தைய நான்கு ஆண்டுகளை விட குறிப்பிடத்தக்க வகையில் அதிகரித்து, 20,87,462 ஆக உயர்ந்தது 'ஓரே தேர்வு மையத்தில் 8 பேர் முழு மதிப்பெண்'

மருத்துவ இளைநிலை படிப்புகளுக்காக நாடு முழுவதும் பொதுவாக நீட் தேர்வு நடத்தப்படுகிறது. இதனை தேசிய தேர்வு முகமை 2019ம் ஆண்டு முதல் நடத்தி வருகிறது. இந்த ஆண்டு நீட் தேர்வை 24 லட்சத்துக்கும் அதிகமான மாணவர்கள், இந்தியாவில் 571 நகரங்களிலும் வெளிநாடுகளில் 14 நகரங்களிலும் எழுதியுள்ளனர். நீட் தேர்வு இந்த ஆண்டு தமிழ் ஆங்கிலம் உட்பட 13 மொழிகளில் நடத்தப்பட்டது.

இது வரை இல்லாத வகையில் நாடு முழுவதும் இந்த முறை 67 மாணவர்கள் முதல் ரேங்க் பெற்றுள்ளனர். இவர்கள், ஆந்திர பிரதேசம், பிகார், சண்டிகர், டெல்லி, குஜராத், அரியாணா, இமாச்சலப் பிரதேசம், ஜார்க்கண்ட், கர்நாடகா, கேரளா, மகாராஷ்ட்ரா, பஞ்சாப், ராஜஸ்தான், தமிழ்நாடு, திரிபுரா, உத்தர பிரதேசம், உத்தராகண்ட், மேற்கு வங்கம் ஆகிய 18 மாநிலங்களைச் சேர்ந்தவர்கள். ராஜஸ்தானில் 11 பேரும், தமிழ்நாட்டில் 8 பேரும், மகாராஷ்ட்ராவில் ஏழு பேரும் முதல் ரேங்க் பெற்றுள்ளனர்.

ராஜஸ்தானில் முழு மதிப்பெண் பெற்ற 11 பேரில் எட்டு பேர் ஒரே தேர்வு மையத்தைச் சேர்ந்தவர்கள் என்று புகார்கள் எழுப்பப்படுகின்றன. தேசிய தேர்வு முகமை வெளியிட்ட தரவுகள் படி, அவர்களின் தேர்வு எண்கள் அடுத்தடுத்து உள்ளன. எனவே அவர்கள் ஒரே தேர்வு மையத்தில் தேர்வு எழுதியிருக்கலாம் என்று சந்தேகங்கள் எழுப்பப்படுகின்றன. இது குறித்த விரிவாக பேசிய கல்வியாளர் மகேஷ்வர் பெரி, “நாடு முழுவதும் 4,000-க்கும் மேற்பட்ட தேர்வு மையங்கள் இருக்கின்றன. எப்படி ஒரு மையத்திலிருந்து எட்டு பேர் முழு மதிப்பெண்கள் பெற்றனர்? அவர்களின் பெயர்கள் முழுமையாக இல்லை என்பதை கவனிக்க வேண்டும்,” என்றார்.

மதிப்பெண் குளறுபடிகள் மட்டுமல்லாமல், மாணவர்களுக்கு சீட் கிடைக்கும் வாய்ப்பும் இந்த வருடம் மாற்றம் இருக்கும் என்கிறார் மகேஷ்வர். “கடந்த முறை 600 மதிப்பெண்கள் எடுத்த மாணவர்களுக்கு அரசு மருத்துவக் கல்லூரிகளில் இடம் கிடைத்தது. ஆனால் இந்த முறை 660 மதிப்பெண்கள் எடுத்தவருக்கு கூட இடம் கிடைக்கும் வாய்ப்புகள் குறைவு," என்கிறார்.

Getty Images ராஜஸ்தானில் முழு மதிப்பெண் பெற்ற 11 பேரில் எட்டு பேர் ஒரே தேர்வு மையத்தைச் சேர்ந்தவர்கள் என்று புகார்கள் எழுப்பப்படுகின்றன முதலிடம் பிடித்த தமிழக மாணவர்கள்

தமிழ்நாட்டில் சையத் ஆரிஃபின் யூசஃப், ஷைலஜா எஸ், ஆதித்ய குமார் பாண்டா, ஶ்ரீராம் பி, ரஜனீஷ் பி, ஜெயதி பூர்வஜா எம், ரோஹித் ஆர், சபரீசன் எஸ் ஆகியோ முதல் ரேங்க் பெற்றுள்ளனர்.

விழுப்புரம் மாவட்டத்தைச் சேர்ந்த ரஜனீஷ் என்ற மாணவர் பன்னிரண்டாம் வகுப்பு முடித்து முதல் முறையாக நீட் தேர்வு எழுதி அகில இந்திய அளவில் முதல் ரேங்க் பெற்றுள்ளார். அவர் பள்ளியில் 11-ஆம் மற்றும் 12-ஆம் வகுப்பு படிக்கும் போது பள்ளியிலேயே நீட் தேர்வுக்கான பயிற்சியை மேற்கொண்டுள்ளார்.

“நீட் தேர்வு எழுதுவதற்கு முன்பாக 20-க்கும் மேற்பட்ட மாதிரித் தேர்வுகளை எழுதியுள்ளேன். கடைசியாக எழுதிய மாதிரி தேர்வில் 710 மதிப்பெண்கள் எடுத்திருந்தேன். எனவே அகில இந்திய அளவில் ரேங்க் கிடைக்கும் என்று எதிர்ப்பார்த்திருந்தேன்,” என்று பிபிசி தமிழிடம் பேசும் போது அவர் கூறினார்.

ரயில்வேயில் மூத்த பொறியாளராக இருக்கும் அவரது தந்தையும், அரசுக் கல்லூரியில் இணை பேராசிரியராக இருக்கும் தாயும், குடும்பத்தில் முதல் மருத்துவர் வர போவதை நினைத்து மகிழ்ச்சி அடைந்ததாகவும் அவர் தெரிவித்தார்.

Getty Images மதிப்பெண் குளறுபடிகள் மட்டுமல்லாமல், மாணவர்களுக்கு சீட் கிடைக்கும் வாய்ப்பும் இந்த வருடம் மாற்றம் இருக்கும் என்கின்றனர் கல்வியாளர்கள் அதிகரித்து வரும் மாணவர்களின் எண்ணிக்கை

2023-ஆம் ஆண்டில், நீட் தேர்வுக்குப் பதிவு செய்தவர்களின் எண்ணிக்கை, அதற்குய முந்தைய நான்கு ஆண்டுகளை விட குறிப்பிடத்தக்க வகையில் அதிகரித்து, 20,87,462 ஆக உயர்ந்தது.

2024-இல் விண்ணப்பங்களின் எண்ணிக்கை மேலும் அதிகரித்து 24,06,079-ஐ எட்டியது. தேர்வெழுதிய மாணவர்களின் எண்ணிக்கை இரண்டு ஆண்டுகளிலும் அதிகரித்திருந்தது. 2023-இல் 20,38,596 தேர்வாளர்கள் இருந்தனர். 2024-இல் சுமார் 3 லட்சம் மாணவர்கள் அதிகமாக தேர்வு எழுதினர். இந்தியாவில் இந்த ஆண்டு நீட் தேர்வு எழுதியவர்களின் எண்ணிக்கை 23,33,297 ஆக உயர்ந்தது. கடந்த ஆண்டு 11,45,976 மாணவர்களும், இந்த ஆண்டு 13,16,268 மாணவர்களும் தேர்ச்சி பெற்றுள்ளனர்.

நாடு முழுவதும் இருப்பது போலவே, தமிழ்நாட்டிலும், தேர்வு எழுதும் மாணவர்களில் சரசாரியாக் 50% மாணவர்கள் தேர்ச்சி பெறுகின்றனர். கடந்த ஆண்டு, 1,44,516 மாணவர்கள் தேர்வு எழுதியதில் 78,693 மாணவர்கள் தேர்ச்சி பெற்றிருந்தனர். இந்த ஆண்டு 1,52,920 தமிழ்நாட்டு மாணவர்கள் தேர்வு எழுதியதில், 89,426 மாணவர்கள் தேர்ச்சி பெற்றுள்ளனர். அதிக மாணவர்கள் தேர்ச்சி பெற்ற முதல் ஐந்து மாநிலங்களில் தமிழ்நாடு நான்காவது இடத்தில் உள்ளது.

Getty Images 180 கேள்விகளில் ஒரு மாணவர் ஒரு கேள்விக்கு தவறாக பதில் அளித்திருந்தால், அவருக்கு 179 கேள்விகளுக்கான 716 மதிப்பெண்களில் ஒரு மதிப்பெண் குறைக்கப்பட்டு 715 மதிப்பெண்கள் வழங்கப்படும் நீட் தேர்வில் 719 மதிப்பெண்கள் எடுப்பது சாத்தியமா?

தேர்வு முடிவுகளில் குறிப்பிடப்படும் மற்றொரு குழப்பம், மதிப்பெண்கள் குறித்தது. நீட் தேர்வில் நான்கு மதிப்பெண்கள் கொண்ட 180 கேள்விகளுக்கு மாணவர்கள் விடையளிக்க வேண்டும். எல்லா கேள்விகளுக்கும் சரியான பதில்களைக் கொடுக்கும் மாணவர் 720 மதிப்பெண்கள் பெற முடியும். இந்தத் தேர்வில் ஒரு கேள்விக்குத் தவறாக பதிலளித்தால், ஒரு மதிப்பெண் கழிக்கப்படும். எனவே 180 கேள்விகளில் ஒரு மாணவர் ஒரு கேள்விக்கு தவறாக பதில் அளித்திருந்தால், அவருக்கு 179 கேள்விகளுக்கான 716 மதிப்பெண்களில் ஒரு மதிப்பெண் குறைக்கப்பட்டு 715 மதிப்பெண்கள் வழங்கப்படும். ஆனால் இந்த ஆண்டு தேர்வு முடிவுகளில் சில மாணவர்கள் 719 மதிப்பெண்கள் எடுத்துள்ளது தெரியவந்துள்ளது. இது எப்படி சாத்தியமாகும் என்று பலரும் கேள்வி எழுப்புகின்றனர்.

இதற்கு பதிலளித்துள்ள தேசிய தேர்வு முகமை, “05.05.2024 அன்று தேர்வு எழுதும் போது, தேர்வு நேரம் முழுவதுமாக ஒதுக்கப்படவில்லை என்று தேர்வெழுதிய மாணவர்களிடமிருந்து புகார்கள் தேசிய தேர்வு முகமைக்கு கிடைத்தன. மேலும் நீதிமன்ற வழக்குகளும் தொடுக்கப்பட்டன. இந்தப் புகார்களையும் வழக்குகளையும் தேசிய தேர்வு முகமை பரிசீலித்து, தேர்வு நேர இழப்பை உறுதி செய்து, அதற்கு ஈடான கருணை மதிப்பெண்கள் வழங்கப்பட்டுன. 13.06.2018 தேதியிட்ட உச்சநீதிமன்ற வழிகாட்டுதல் படி, இந்த மதிப்பெண்கள் ஈடு செய்யப்பட்டுள்ளன. எனவே தேர்வர்களின் மதிப்பெண்கள் 718 அல்லது 719 எனவும் இருக்கலாம்,” என்று தெரிவித்துள்ளது.

‘நீட் மீது நம்பிக்கை குறைகிறது’

இதுகுறித்து பிபிசி தமிழிடம் பேசிய கல்வியாளர் நெடுஞ்செழியன் நீட் தேர்வு மீதான நம்பகத்தன்மை குறைந்துக் கொண்டே வருகிறது என்கிறார்.

“எந்தத் தேர்விலும் ஒரே மையத்திலிருந்து இத்தனை மாணவர்கள் முழு மதிப்பெண்கள் பெற்றதில்லை. ஒரே பயிற்சி மையத்திலிருந்து வரும் மாணவர்களை வெவ்வேறு தேர்வு மையங்களில் தேர்வு எழுத வைக்க வேண்டும்,” என்றார்.

மேலும் பேசிய அவர், அண்ணா பல்கலைகழக முன்னாள் துணை வேந்தரும், ஐஐடி கான்பூரின் முன்னாள் தலைவருமான ஆனந்த கிருஷ்ணன் தலைமையிலான குழு, தமிழ்நாட்டில் நுழைவுத் தேர்வு ரத்துக்கான குழுவின் பரிந்துரைகளின் படி, நான்கு ஆண்டுகளுக்கு ஒரு முறை தேர்வு முறையை மாற்றியமைக்க வேண்டும், என்றார்.

"ஐ.ஐ.டி அப்படி தான் செய்கிறது. ஆனால் நீட் தேர்வில் இது வரை மாற்றமில்லை. ஐ.ஐ.டி-யில் தரத்தை குறைக்காத அரசு, நீட் தேர்வில் தரத்தை விட்டுக் கொடுப்பது ஏன்? கருணை மதிப்பெண்கள் எந்த அடிப்படையில், யாருக்கு வழங்கப்பட்டன என்ற விவரம் வெளிப்படையாகத் தெரிவிக்கப்படவில்லை. மேலும் நீட் தேர்வுகளின் முடிவுகளில் ஒவ்வொரு மாணவரும் எவ்வளவு மதிப்பெண் எடுத்துள்ளார், மாநிலத்தில் என்ன ரேங்க், இந்தியாவில் என்ன ரேங்க் என்று பொதுவாக வெளியிடுவதற்கு தேசிய தேர்வு முகமைக்கு என்ன தயக்கம்? சி.பி.எஸ்.இ இந்தத் தேர்வுகளை நடத்திய போது, அப்படி தானே முடிவுகள் வழங்கப்பட்டன?” என்று கேள்வி எழுப்புகிறார்.

ஒரே பயிற்சி மையத்தின் 4 மாணவர்கள் முழு மதிப்பெண்கள்

தமிழ்நாட்டில் முதல் ரேங்க் பெற்றுள்ள எட்டு மாணவர்களில் நான்கு பேர் நாமக்கல் கிரீன் பார்க் கேரியர் அகாடெமியில் பயின்றுள்ளனர். அந்தப் பயிற்சி மையத்தில் நான்கு பேர் ஒரே ஆண்டில் முழு மதிப்பெண் பெறுவது இதுவே முதல் முறையாகும்.

இது குறித்து கிரீன் பார்க் அகாடெமியின் தலைவர் டாக்டர் எஸ் என் பி ஷரவணன் கூறுகையில், “எங்கள் மாணவர்கள் யாரும் நேரம் குறைவாக இருந்தது பற்றிப் புகார் எழுப்பவில்லை. இயற்பியல் கேள்வித்தாளில் ஒரு வினாவுக்கு தேசிய தேர்வு முகமை குறிப்பிட்டிருந்த பதில் குறித்து மாணவர்கள் பலர் புகார்கள் எழுப்பிய பிறகு இரண்டு பதில்கள் சரியானவை என்று தேர்வு முகமை கூறியது. இதனால் தான் முழு மதிப்பெண்கள் பெற்றவர்களின் எண்ணிக்கை அதிகரித்துள்ளது, தேசியத் தேர்வு முகமை இந்த மாற்றத்தை வெளியிடுவதற்கு முன்பே எங்கள் மையத்திலிருந்து ஒரு மாணவர் முழு மதிப்பெண் பெற்றிருந்தார். அப்போது நாடு முழுவதுமே 20-க்கும் குறைவானவர்கள் தான் முழு மதிப்பெண்கள் எடுத்திருந்தனர். முழு மதிப்பெண் எடுத்த மாணவர்கள் 12-ஆம் வகுப்பில் மாவட்ட அளவில் ரேங்க வாங்கியவர்கள். எங்களிடம் ஒவ்வொரு வருடமும் சுமார் 5,000 பேர் பயிற்சி பெறுகின்றனர். அதில் 1000-க்கும் மேற்பட்டோர் அரசு கோட்டாவில் எம்.பி.பி.எஸ் இடம் பெறுகின்றனர்,” என்றார்.

கல்வியாளர் மகேஷ்வர் பெரி மேலும் பல சந்தேகங்களை எழுப்புகிறார். “இரண்டு பதில்களும் சரி என்று கூறினால், அனைவருக்கும் தானே மதிப்பெண்கள் கூட வேண்டும். நாடு முழுவதும் 24 லட்சம் பேர் 4000-க்கும் மேற்பட்ட மையங்களில் இந்தத் தேர்வை எழுதினர். எப்படி ஒரு சில மையங்களின் மாணவர்களுக்கு மட்டும் அதன் பலன் கிடைக்கிறது? நேரம் குறைவாக இருப்பதாக நீதிமன்றங்களில் வழக்கு தொடுத்தவர்களுக்குக் கருணை மதிப்பெண்கள் வழங்கப்பட்டதாகத் தேசிய தேர்வு முகமை கூறுகிறது. நீதிமன்றத்தை நாடாதவர்கள், நாட முடியாதவர்களின் நிலை என்ன? கருணை மதிப்பெண்கள் வழங்கப்பட்டுள்ளன என்பதை தேசிய தேர்வு முகமை, முடிவுகளை வெளியிடும் போதே சொல்லியிருக்க வேண்டும். எப்படி 718 மதிப்பெண்கள், 719 மதிப்பெண்கள் என்று மதிப்பெண்கள் வழங்கப்பட்டுள்ளன என்ற கேள்வி எழுப்பிய பிறகு, தேர்வு முகமை பதில் கூறுவது வெளிப்படைத்தன்மை இல்லை என்பதை காட்டுகிறது,” என்றார்.

© Copyright @2025 LIDEA. All Rights Reserved.