புதுச்சேரியியில் வீட்டின் கழிவறையில் 3 பெண்கள் மயங்கி விழுந்து உயிரிழப்பு - என்ன நடந்தது?
BBC Tamil June 12, 2024 05:48 PM
BBC

புதுச்சேரி மாநிலத்தில் கழிவறைக்குச் சென்ற இரண்டு பெண்கள் உள்பட 3 பேர் மயங்கி இறந்துள்ள சம்பவம் அதிர்வலையை உருவாக்கியுள்ளது. அவர்கள் விஷ வாயு கசிவால் இறந்திருக்கலாம் என்று சந்தேகிக்கப்படுகிறது.

நேரில் ஆய்வு செய்த, முதல்வர் பாதாள சாக்கடைகளில் ஏதேனும் சேதம் ஏற்பட்டுள்ளதா என்பது குறித்து அதிகாரிகள் ஆய்வு நடத்தி வருவதாக தெரிவித்தார்.

BBC என்ன நடந்தது?

புதுச்சேரி மாநிலத்தில் உள்ள ரெட்டியார்பாளையம், புதுநகர் பகுதியில் வசித்து வருபவர் செந்தாமரை (வயது 72). இவர் செவ்வாய்கிழமை காலை கழிவறைக்கு சென்றபோது, மயங்கி விழுந்துள்ளார். கழிவறைக்குச் சென்றவர் நீண்ட நேரம் ஆகியும் வராததால் அவரது மகள் காமாட்சி (வயது 55) கழிவறைக்குச் சென்று பார்த்துள்ளார். தாயை தேடிச்சென்ற அவரும் அலறல் சத்தத்துடன் தாய் அருகில் மயங்கி விழுந்துள்ளார்.

கழிவறைக்குச் சென்றவர்கள் சத்தம் போட்டதை கேட்ட பக்கத்து வீட்டுக்காரர்கள் வேகமாக வந்து மயங்கி கிடந்த அவர்களை ஆம்புலன்ஸ் வரவழைத்து மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.

இதேபோல் அந்த பகுதியைச் சேர்ந்த மற்றொரு வீட்டில் கழிவறைக்குச் சென்ற சிறுமி செல்வராணி (வயது 16) அலறியபடி மயங்கி விழுந்துள்ளார். மேலும் அதே பகுதியைச் சேர்ந்த பாலகிருஷ்ணன் மற்றும் பாக்கியலட்சுமி வீட்டில் கழிவறைக்கு சென்ற போது மயங்கி விழுந்துள்ளனர். இவர்களும் மீட்கப்பட்டு மருத்துவமனையில் சேர்க்கப்பட்டனர்.

மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்ட செந்தாமரை மற்றும் காமாட்சி முன்பே இறந்தது மருத்துவர்களால் உறுதி செய்யப்பட்டது. சிறுமி செல்வராணி புதுச்சேரி அரசு மருத்துவமனையில் சேர்க்கப்பட்டார். அங்கு சிறுமிக்கு நடந்த தீவிர சிகிச்சைப் பலனின்றி அவரும் உயிரிழந்தார். கழிவறையில் மயங்கி விழுந்த பாலகிருஷ்ணன், பாக்கியலட்சுமி சிகிச்சை பெற்று வருகின்றனர்.

BBC விஷ வாயுக் கசிவா?

இதனிடையே, கழிவறை பாதாள சாக்கடையுடன் இணைக்கப்பட்டு இருந்த காரணத்தால், விஷ வாயு தாக்கி உயிரிழப்பு நடந்திருக்கலாம் என சந்தேகிக்கப்பட்டது. சம்பவ இடத்தில் மாநகராட்சி, சுகாதாரத்துறை, காவல்துறை, தீயணைப்பு துறை அதிகாரிகளும் முகாமிட்டு விசாரணை நடத்தினர்.

இதனையடுத்து, முதற்கட்டமாக அப்பகுதியில் குடியிருக்கும் மக்கள் அனைவரும் வீடுகளில் இருந்து வெளியேற உத்தரவிட்ட அதிகாரிகள், கழிவுநீர் வாய்க்கால்களை உடைத்து வாயு மற்றும் கழிவுகளை வெளியேற்றிறனர்.

இதனிடையே, தகவல் அறிந்து வந்த புதுச்சேரி மாவட்ட ஆட்சியர் குலோத்துங்கன் சம்பவ இடத்தை பார்வையிட்டு ஆய்வு செய்தார். சுத்திகரிப்பு நிலையத்தில் இருந்து விஷவாயு கழிவறைக்கு சென்று இருக்கலாம் எனவும் சந்தேகிக்கப்படும் நிலையில் சம்பவ இடத்தில் நேரில் ஆய்வு மேற்கொண்ட மாவட்ட ஆட்சியர் குலோத்துங்கன், காலை 11 மணி வரையில் நடத்தப்பட்ட சோதனையில், பாதாள சாக்கடையில் எங்கும் விஷ வாயு கசிவு இல்லை என தெரிய வந்துள்ளதாக தெரிவித்துள்ளார்.

இந்நிலையில், புதுநகர் பகுதி மக்கள் தற்காலிகமாக தங்களின் குடியிருப்புகளில் இருந்து வெளியேற ஆட்சியர் குலோத்துங்கன் அறிவுறுத்தினார். சம்பவ இடத்தில் காவல்துறையினர் ஒலிபெருக்கி மூலமாக சூழ்நிலையை விளக்கி கூறி மக்களை வீடுகளிலிருந்து உடனடியாக வெளியேற்றினர்.

BBC சுத்திகரிப்பு நிலையத்தின் ஒப்பந்தம் ரத்து

சாக்கடை கழிவு நீர் சுத்திகரிப்பு நிலையத்தின் ஒப்பந்தத்தை ரத்து செய்து உத்தரவிடுவதாக பொதுப்பணித் துறை அமைச்சர் லட்சுமி நாராயணன் தெரிவித்தார். வீடு வீடாக அதிகாரிகள் சென்று ஆய்வு செய்த பின்னரே விஷவாயு வெளியேற்றம் அல்லது பிற காரணம் தெரியவரும் என்றும், இந்த விவகாரம் தொடர்பாக விசாரணை நடத்த மாவட்ட ஆட்சியர் தலைமையில் ஒரு குழுவும் தலைமை பொறியாளர் தலைமையில் ஒரு குழுவும் அமைக்கப்பட்டுள்ளதாகவும் அவர் தெரிவித்துள்ளார்.

இதுகுறித்து தகவலறிந்த சட்டமன்ற எதிர்க்கட்சித் தலைவர் இரா. சிவா, மக்களவை உறுப்பினர் வைத்திலிங்கம் ஆகியோர் சம்பவ இடத்திற்கு நேரில் சென்று பார்வையிட்டு பாதிக்கப்பட்ட மக்களிடம் நடந்த சம்பவம் குறித்து விசாரித்தனர்.

பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய எதிர்க்கட்சித் தலைவர் இரா. சிவா, கழிவுநீர் சுத்திகரிப்பு நிலையத்தில் போதிய பராமரிப்பு இல்லை என்று குற்றம் சாட்டினார். “புதுநகர் பகுதியில் புதியதாக அமைக்கப்பட்ட பாதாள சாக்கடைகளில் நச்சு வாயு வெளியேறுவதற்கு தனியாக பைப் லைன் அமைக்கப்படுவதாக அதிகாரிகள் தெரிவிக்கின்றனர். அப்படி அமைக்கப்பட்ட பைப்–லைன்களிலிருந்து பல இடங்களில் கசிவு ஏற்படுவதாக மக்கள் புகார் கூறுகின்றனர். அதை அதிகாரிகள் அப்போதே கண்காணித்து இருக்க வேண்டும்” என்றார்.

BBC இறந்தவரின் குடும்பங்களுக்கு ரூ.70 லட்சம் நிவாரணம்

விஷ வாயு தாக்கி உயிரிழந்த ஒரே குடும்பத்தை சேர்ந்த 2 பெண்களுக்கு தலா ரூ.20 லட்சம் நிவாரணமும், 15 வயது சிறுமியின் குடும்பத்திற்கு ரூ.30 லட்சம் நிவாரணமும் அரசு சார்பில் வழங்கப்படும் என்று நேரில் ஆய்வு செய்த முதலமைச்சர் ரங்கசாமி அறிவித்தார். தொடர்ந்து செய்தியாளரிடம் அவர் கூறும் போது, “பாதாளசாக்கடை இணைப்பு கொடுத்ததில் தவறு நடந்துள்ளதாக தெரிகிறது. இது குறித்து அனைத்து இடங்களிலும் ஆய்வு செய்ய உத்தரவிடப்பட்டதுள்ளது. இது போன்ற சம்பவங்கள் நிகழாமல் அரசு துரித நடவடிக்கைகளை எடுத்து வருகிறது” என்றார்.

BBC “துர்நாற்றம் வீசுவதை முன்பே புகாரளித்தோம்” - அதிகாரிகள் மீது குற்றம் சாட்டும் மக்கள்

ரெட்டியார் பாளையம் புதுநகர் பகுதியில் வசித்து வரும் ஜான்சிராணி, சில நாட்களாகவே,வீடுகளில் உள்ள கழிவறைகளில் துர்நாற்றம் வெளிவருவதாக கூறினார். “இதுதொடர்பாக கனகன் ஏரி கழிவுநீர் வாய்க்கால் சுத்திகரிப்பு நிலைய அதிகாரிகளிடம் முறையிட்டோம். ஆனால் அரசும், அதிகாரிகளும் எந்தவித நடவடிக்கையும் எடுக்கவில்லை . அதிகாலை நேரத்தில் இந்த பகுதியில் எப்பொழுதுமே துர்நாற்றம் வீசும். அதை தவிர்ப்பதற்கு வீடுகளில் ஸ்பிரே அடித்துக் கொள்வோம்” என்றார்

மேலும் கனகன் ஏரி அருகில் நடைபயிற்சிக்கு செல்லும் பொழுது மக்கள் சுவாசிக்க முடியாமல் அவதிப்படுவதாகவும் இனியாவது இது போன்ற நிகழ்வுகள் நடைபெறாமல் அரசு பார்த்துக் கொள்ள வேண்டும் என்றும் அப்பகுதி கோரிக்கை முன் வைத்தார்.

விஷ வாயு கசிவு எப்படி ஏற்படும்?

சமூக செயற்பாட்டாளர் பாடம் நாராயணன் புதுச்சேரி சம்பவம் தொடர்பாக பிபிசி தமிழிடம் பேசுகையில், “முறையாக அமைக்கப்படாத பாதாள சாக்கடைகளிலிருந்து மீத்தேன் உருவாகி குழாய் வழியாக வீட்டினுள் பயன்படுத்தப்படும் கழிவறைக்கு சென்று இருக்க வாய்ப்புள்ளது. மக்களிடமும், அரசிடமும் போதிய விழிப்புணர்வு இல்லை என்பதை இந்த நிகழ்வு காட்டுகின்றது” என்றார்.

தங்கள் வீட்டு குப்பைகளை மக்கும் குப்பை , மக்காத குப்பை என்று பிரித்து போடாமல், சில நேரங்களில் குழ்ந்தைகளின் டயபர், பெண்களில் நாப்கின் போன்றவற்றை கழிவுநீர் கால்வாய்களில் நேரடியாக போடுவது ஆபத்தானது என்று திடக் கழிவு மேலாண்மை நிபுணர்கள் கூறுகின்றனர். இவை கழிவு நீரில் கலந்து பல்வேறு உபாதைகளை ஏற்படுத்தும்.

இது குறித்து பேசிய பாடம் நாராயணன், “கழிவுகள் கலக்கும் போது, மிக எளிதாக ஆக்சிஜன் பற்றாக்குறை ஏற்பட்டு அந்த இடத்தில் மீத்தேன் உருவாக வாய்ப்பு உள்ளது. பாதாள சாக்கடை திட்டத்தில் பயன்படுத்தப்படும் பொருட்கள் அரிப்பு ஏற்படுத்தாமல் இருத்தல் அவசியம். சிமெண்ட் குழாய்களின் கட்டமைப்பு உடைதல், அரித்தல்,விரிசல் ஏற்பட வாய்ப்புள்ளது. கழிவறையில் துர்நாற்றமோ, மூச்சு திணறலோ ஏற்பட்டால் உடனடியாக கதவை திறந்து வெளியே வரவேண்டும்” என்றார்.

© Copyright @2025 LIDEA. All Rights Reserved.