உலகின் புற்றுநோய்க்கான முக்கிய அறிவியல் மாநாட்டில் சமீபத்திய ஆண்டுகளில் சந்தைப்படுத்தப்பட்ட, நன்கு அறியப்பட்ட மருந்துகளை முன்னிலைப்படுத்தியுள்ளனர். பல தொழில்நுட்ப கண்டுபிடிப்புகளுக்கு மத்தியில் இந்த மருந்துகள் முக்கியத்துவம் பெற்றிருக்கின்றன.
அமெரிக்காவின் சிகாகோவில் நடைபெற்ற அமெரிக்கன் சொசைட்டி அமெரிக்கப் புற்றுநோய் மருத்துவக் கழகம் (ஆஃப் கிளினிக்கல் ஆன்காலஜி - American Society of Clinical Oncology - ASCO), 2024-ஆம் ஆண்டு ஆண்டு மாநாட்டில் பல்லாயிரக்கணக்கான மருத்துவர்கள் கலந்து கொண்டனர். இதில் புற்றுநோய்க்கான புதிய சிகிச்சை முறைகளை பற்றி விவாதிக்கப்பட்டது.
இந்த முக்கிய நிகழ்வில் முன்வைக்கப்பட்ட ஆராய்ச்சி வரைவுகள், உணவுக்குழாய் புற்றுநோய் மற்றும் தீவிர தோல் புற்றுநோயான மெலனோமாவை சரிசெய்வதற்கான வெவ்வேறு அணுகுமுறைகளை முன்மொழிந்தன. நுரையீரல் புற்றுநோயால் பாதிக்கப்பட்டவர்களின் சில பூர்த்தி செய்யப்படாத பிரச்னைகளுக்கு அவை தீர்வுகளை வழங்குகின்றன.
பிபிசி நியூஸ் பிரேசிலுக்கு பேட்டியளித்த மருத்துவர்கள், இவை இனி கிளினிக்குகள் மற்றும் மருத்துவமனைகளில் இந்த நோய்களுக்கான சிகிச்சை முறைகளை மாற்றியமைக்கும் என்றனர்.
வல்லுநர்கள் சிலர் ஆணுறுப்பு புற்றுநோய்கான சிகிச்சை சில முன்மொழிவுகளை முன்வைத்தனர். பிரேசிலில் நடத்தப்பட்ட ஒரு பரிசோதனை, பொதுவெளியில் தவறாகப் புரிந்துகொள்ளப்பட்டிருக்கும் ஆணுறுப்புப் புற்று நோய்க்கான புதிய சிகிச்சை முறையை பரிந்துரைக்கிறது.
பிபிசி நியூஸ் பிரேசில் 'ASCO 2024’ மாநாட்டில் பங்குபெற்ற மருத்துவர்களிடம் பேசியது. மாநாட்டில் விவாதிக்கப்பட்ட புற்றுநோய் பற்றிய நான்கு முக்கிய தகவல்கள் பற்றி கீழே சுருக்கமாக விவரிக்கப்பட்டுள்ளது.
பிபிசி தமிழ் வாட்ஸ்ஆப் சேனலில் இணைய இங்கே கிளிக் செய்யவும்.
நுரையீரல் புற்றுநோயின் மிகவும் பொதுவான வகையால் பாதிக்கப்பட்டவர்கள், ஏற்கனவே நிலை 3-ல் இருந்தாலும், நோய்த் தொற்று உடலின் மற்ற பகுதிகளுக்கு இன்னும் பரவவில்லை என்றால், அவர்களுக்கு அறுவை சிகிச்சை செய்ய வேண்டிய தேவை மிகவும் குறைவு.
இந்தச் சந்தர்ப்பங்களில், வழக்கமான சிகிச்சை முறைகளான கீமோதெரபி மற்றும் கதிரியக்க சிகிச்சை பரிந்துரைக்கப்படும்.
2017-ஆம் ஆண்டு, உலகெங்கிலும் பல நிறுவனங்களால் நடத்தப்பட்ட ஓர் ஆய்வில், நுரையீரல் புற்றுநோயின் மூன்றாவது நிலையில் இருக்கும் நோயாளிகளுக்கு, நோய் எதிர்ப்பு சிகிச்சை ( immunotherapy) அளித்தால், அவர்களின் ஆயுட்காலம் கணிசமாக அதிகரிப்பது தெரிய வந்தது.
'இம்யூனோதெரபி' என்பது ஒப்பீட்டளவில் புதிய சிகிச்சை முறையாகும், இது புற்றுநோய்க் கட்டியை நேரடியாக தாக்காது, மாறாக நோயாளியின் சொந்த நோய் எதிர்ப்பு மண்டலமே நோயுற்ற செல்களை அடையாளம் கண்டு அழிக்க தூண்டுகிறது. அப்போதிருந்து, நோய் எதிர்ப்பு சிகிச்சை, கதிர்வீச்சு சிகிச்சை மற்றும் கீமோதெரபி ஆகியவை வழக்கமான சிகிச்சைத் திட்டமாக ஒன்றாகப் பயன்படுத்தப்படுகின்றன.
"இருப்பினும், உலகம் முழுவதும், நோய்திர்ப்பு சிகிச்சை மூலம் பயனடையாத நோயாளிகள் உள்ளனர். அவர்கள் உடலில் இந்த சிகிச்சை முறையால் எவ்வித மாற்றமும் ஏற்படவில்லை," என்று 'Oncoclínicas & Co’ நிறுவனத்தின் தொழில்நுட்ப மருத்துவ இயக்குநர் மரியானா லலோனி எடுத்துரைக்கிறார்.
EGFR மரபணுவில் பிறழ்வு உள்ளவர்களுக்கு, இந்தச் சிகிச்சை முறையில் எந்த முன்னேற்றமும் ஏற்படவில்லை என்று மருத்துவர் குறிப்பிடுகிறார். EGFR மரபணுவில் பிறழ்வு என்பது நுரையீரல் புற்றுநோயால் பாதிக்கப்பட்டவர்களில் 15% முதல் 25% சதவீதத்தினரின் டி.என்.ஏ-வில் காணப்படும் ஒரு நிலை ஆகும்.
அமெரிக்கன் சொசைட்டி ஆஃப் கிளினிக்கல் ஆன்காலஜி (ASCO) மாநாட்டில் பகிரப்பட்ட ஓர் ஆய்வு, EGFR மரபணுவில் பிறழ்வு உள்ள நோயாளிகளுக்கு துல்லியமானத் தீர்வுகளைக் கண்டறிய முயன்றது.
அஸ்ட்ராஜெனெகா நிறுவனத்தின் மருந்தான 'ஓசிமெர்டினிப்' (Osimertinib) மூலம், EGFR மரபணுவில் உள்ள பிறழ்வுடன் மூன்றாவது நிலை நுரையீரல் புற்றுநோயால் பாதிக்கப்பட்ட நோயாளிகளின் ஆயுளை நீட்டிக்க முடியுமா என்பதை ஆராய்ச்சியாளர்கள் மதிப்பீடு செய்தனர்.
இந்த ஆய்வு முடிவுகள் ஊக்கமளிப்பதாகவும் எதிர்கால ஆராய்ச்சிகளுக்கு நல்ல வாய்ப்புகளை வழங்குவதாகவும் லலோனி நம்புகிறார். இருப்பினும், இன்னும் பதிலளிக்க வேண்டிய கேள்விகள் உள்ளன என்று அவர் நம்புகிறார்.
"கீமோதெரபி மற்றும் கதிரியக்க சிகிச்சையுடன் ஆரம்ப சிகிச்சைக்குப் பிறகு அல்லது நோய் முன்னேற்றம் அடையும் போது உடனடியாக இந்த மருந்தைப் பயன்படுத்துவது சிறந்ததா என்பதை பற்றி நாங்கள் ஆய்வு செய்து தெரிந்து கொள்ள வேண்டும்," என்று அவர் கூறினார்.
'உணவுக்குழாய் அடினோகார்சினோமா' எனப்படும் உணவுக்குழாயில் ஏற்படும் புற்றுநோய்க்கான சிகிச்சை முறைகளைப் பற்றிய விவாதங்கள் அந்த மாநாட்டில் நடந்தன.
ஒருபுறம், மருத்துவர்கள் குழு 'நியோட்ஜுவண்ட்' (neoadjuvant) எனப்படும் சிகிச்சை முறையைப் பரிந்துரைத்தது. புற்றுநோய்க் கட்டியை அகற்றுவதற்காக நோயாளியை அறுவை சிகிச்சைக்கு உட்படுத்துவதற்கு முன், கீமோதெரபி மற்றும் கதிரியக்க சிகிச்சை மேற்கொள்வதை இந்தத் திட்டம் கொண்டுள்ளது.
மறுபுறம், சில நிபுணர்கள் பெரியோபரேடிவ் (perioperative) சிகிச்சையை பரிந்துரைக்கின்றனர். இது அறுவை சிகிச்சைக்கு முன்னும் பின்னும் கீமோதெரபி செய்யும் செயல்முறையை உள்ளடக்கியது.
"எங்களிடம் இருந்த தரவுகள் இரண்டு சிகிச்சை முறைகளில் எது சிறந்தது என்பதை வரையறுக்கவில்லை. எனவே ஒன்று அல்லது மற்றொன்றைத் தேர்ந்தெடுப்பது அந்தந்தமருத்துவ நிறுவனத்தின் முடிவைப் பொறுத்தது," என்கிறார் ஆன்கோலாஜியா டி'ஓர் மையத்தின் தலைவர் டாக்டர் பாலோ ஹாஃப்.
இந்தக் குழப்பத்தைப் போக்க, ஜெர்மனியில் உள்ள பல மையங்களின் ஆராய்ச்சியாளர்கள் வெவ்வேறு அணுகுமுறைகளை ஒப்பிட முடிவு செய்தனர். பெறப்பட்ட முடிவுகள் பெரியோபரேடிவ் (perioperative) சிகிச்சையில் ஒரு குறிப்பிடத்தக்க முன்னேற்றத்தை பிரதிபலித்தன.
இந்த பெரியோபரேடிவ் சிகிச்சைக்கு உட்பட்ட நோயாளிகள் சராசரியாக 66 மாதங்கள் உயிர்வாழ்ந்தனர். நியோட்ஜுவண்ட் சிகிச்சைக்கு உட்படுத்தப்பட்டவர்கள் 37 மாதங்கள் உயிர் பிழைத்தனர். இந்த குழுக்களிடையே கிட்டத்தட்ட இரண்டரை ஆண்டுகள் வித்தியாசம் உள்ளது.
இதன் விளைவாக, நோய் ஏற்கனவே தீவிரமடைந்திருந்தாலும், உடலின் மற்ற பகுதிகளுக்கு இன்னும் பரவாமல் இருக்கும் போது, பெரியோபரேடிவ் (perioperative) சிகிச்சை மருத்துவர்களுக்கு முக்கியத் தேர்வாக உள்ளது.
மெலனோமா தோல் புற்றுநோயை (ஒரு வகை தோல் புற்றுநோய்) பொறுத்தவரை, சிகிச்சை முறையின் வரிசை பற்றிய விவாதம் முக்கியத்துவம் பெற்றுள்ளது. இது அரிதாக வரும் தோல் புற்றுநோய் என்றாலும், அதிக இறப்பு விகிதத்தைக் கொண்டுள்ளது.
பல டச்சு நிறுவனங்களைச் சேர்ந்த ஆராய்ச்சியாளர்கள், கிரேடு 3 மெலனோமாவிற்கு வெவ்வேறு சிகிச்சை முறைகளை சோதித்தனர், நோய் உடலின் மற்ற பகுதிகளுக்கு பரவவில்லை என்னும் சூழலில் அறுவை சிகிச்சை சாத்தியமாகும்.
இந்த சந்தர்ப்பங்களில், நிணநீர் முனைகளை (lymph nodes) அகற்றும் சிகிச்சை மேற்கொள்ளப்படுகிறது. புற்றுநோய்க் கட்டிகளைக் கொண்டிருக்கலாம் என்று சந்தேகிக்கப்படுவதால் அக்குள், கழுத்து அல்லது இடுப்பு பகுதியில் அமைந்துள்ள நிணநீர் மண்டலத்தின் கட்டமைப்புகளை அகற்றுகின்றனர்.
இந்த ஆய்வில் முன்வைக்கப்பட்ட பெரிய கேள்வி: அறுவை சிகிச்சைக்கு முன் அல்லது பின் மருந்து சிகிச்சையைத் தொடங்குவது சிறந்ததா? இந்தக் கேள்விக்கான விடையை கண்டுபிடிக்க, விஞ்ஞானிகள் இந்த நோயால் பாதிக்கப்பட்ட 423 பேரை இரண்டு குழுக்களாகப் பிரித்தனர்.
முதல் குழு ஐபிலிமுமாப் மற்றும் நிவோலுமாப் என்னும் இரண்டு இம்யூனோதெரபி சிகிச்சைகளைப் பெற்றனர். பின்னர் நோயாளிகள் அறுவை சிகிச்சைக்கு உட்படுத்தப்பட்டனர்.
இந்த செயல்முறைக்குப் பிறகு நல்ல முன்னேற்றத்தை கண்டவர்கள், அதாவது, 10%-க்கும் குறைவான சாத்தியமான நோயுற்ற செல்களைக் கொண்டிருந்தவர்கள் மேற்கொண்டு எந்த உயர் சிகிச்சையையும் பெற வேண்டியிருக்கவில்லை.
10%-க்கும் அதிகமான நோயுற்ற செல்களை கொண்டிருந்தவர்கள் மருந்துகளின் புதிய சுழற்சிகளுக்கு உட்படுத்தப்பட்டனர்.
இரண்டாவது குழு நிலையான சிகிச்சைக்கு உட்பட்டது: நோயாளிகள் உடனடியாக அறுவை சிகிச்சைக்கு உட்படுத்தப்பட்டனர், பின்னர் நிவோலுமாபின் என்னும் 12 மாத சுழற்சிகளுக்கு உட்படுத்தப்பட்டனர்.
12 மாத ஆய்வுக்குப் பிறகு, அறுவை சிகிச்சைக்கு முன் நோய் எதிர்ப்பு சிகிச்சைகளை மேற்கொண்டது சிறந்த பலன் தந்தது என்பதை நிபுணர்கள் கண்டறிந்தனர்.
ஒவ்வோர் ஆண்டும், உலகளவில் 35,000-க்கும் மேற்பட்ட ஆண்கள் ஆணுறுப்பு புற்றுநோயால் பாதிக்கப்படுகின்றனர்.
"இது பொதுவாக மிகவும் தாமதமான கட்டத்தில் கண்டறியப்படும் ஒரு நோயாகும், தவறான புரிதல் தான் இதற்கு முக்கிய காரணம்," என்று வென்சர் அல் கேன்சர் இன்ஸ்டிட்யூட்டின் நிறுவனரான புற்றுநோயியல் நிபுணர் பெர்னாண்டோ மாலுஃப் கூறுகிறார்.
இந்தப் புற்றுநோய்க் கட்டியின் வளர்ச்சிக்கு மோசமான சுகாதாரம் கொண்ட வாழ்க்கை முறை முக்கிய காரணங்களில் ஒன்று. மனித பாப்பிலோமா வைரஸுக்கு (HPV) தடுப்பூசி இல்லாதது மற்றொரு காரணம்.
பொதுவாக, இந்த சிகிச்சையில் ஆணுறுப்பு அறுவை சிகிச்சைகள் மற்றும் கீமோதெரபி மேற்கொள்ளப்படுகிறது என்று மருத்துவர்கள் கூறுகிகின்றனர். இது தனிநபரின் ஆயுளை கணிசமாக நீடிக்காது. மேலும் நோய்த்தொற்று பொதுவாக சிறிது காலத்தில் மீண்டும் தோன்றும்.
"ஆணுறுப்பு புற்றுநோய்க்கான சிகிச்சைகள் நீண்ட காலமாக உள்ளன. இந்த வழிமுறைகளை மாற்றியமைக்க எந்தச் சமீபத்திய முன்னேற்றமும் எங்களிடம் இல்லை," என்று மாலுஃப் கூறுகிறார்.
இந்தச் சூழ்நிலையை மாற்ற புதிய ஆய்வு மேற்கொள்ளப்பட்டது. பிரேசிலிய புற்றுநோயியல் நிபுணர் மாலுஃப், லத்தீன் அமெரிக்க கூட்டுறவு புற்றுநோயியல் குழுவின் (லாகோக்) ஆய்வுக்கு தலைமை தாங்கினார்.
கீமோதெரபி மற்றும் இம்யூனோதெரபி பயன்பாடுகளைக் கொண்ட ஒரு புதிய சிகிச்சை கலவையை சோதிப்பதே இதன் நோக்கம்.
ஆணுறுப்பு புற்றுநோய் கட்டியுள்ள 33 ஆண்களை ஆராய்ச்சியாளர்கள் ஆய்வுக்குட்படுத்தினர். ஒவ்வொரு ஒன்றரை மாதங்களுக்கும் இமேஜிங் சோதனைகள் மூலம் நோயின் தீவிரத்தை கண்காணித்தனர்.
ASCO 2024 மாநாட்டில் வழங்கப்பட்ட தரவு, 75% நோயாளிகள் மத்தியில் ஓரளவு கட்டி சுருங்குவது பதிவாகியுள்ளது. அவர்களில் 39.4% பேர் குறிப்பிடத்தக்கதாக பலனை அனுபவித்துள்ளனர்.
"நீண்ட கால நிவாரணத்தைப் பராமரிப்பதோடு மட்டுமல்லாமல், சிகிச்சை பெற்ற நோயாளிகள் சிறந்த வாழ்க்கைத் தரத்தைக் கொண்டிருந்தனர். கீமோதெரபி மற்றும் இம்யூனோதெரபி மருந்துகளின் கலவையை நன்கு பொறுத்துக் கொண்டனர்," என்று அவர் மேலும் கூறினார்.
புற்றுநோயியல் நிபுணரின் கூற்றுப்படி, பிரேசிலில் மேற்கொள்ளப்பட்ட ஆராய்ச்சி புதிய வழிகளை திறக்கிறது மற்றும் ஆணுறுப்பு புற்றுநோய்க்கான மருத்துவ நடைமுறையில் மாற்றங்களுக்கு வழிவகுக்கிறது.
(சமூக ஊடகங்களில் பிபிசி தமிழ் ஃபேஸ்புக், இன்ஸ்டாகிராம், எக்ஸ் (டிவிட்டர்) மற்றும் யூட்யூப் பக்கங்கள் மூலம் எங்களுடன் இணைந்திருங்கள்.)