உடல் உழைப்பு சிறிதளவும் இல்லாமல் நீண்டநேரம் உட்கார்ந்திருக்கும் வாழ்க்கை முறை உடல்நலத்தில் எந்த மாதிரியான விளைவுகளை ஏற்படுத்தும் என்பதை வங்கிப் பணியாளர் அர்ச்சனா பதக் வலிகளை அனுபவித்த பின்னர் புரிந்துகொண்டார்.
வங்கியின் கேஷ் கவுன்டரில் அமர்ந்திருந்த அர்ச்சனா பதக், தேநீர் அருந்துவதற்கு எழுந்திருக்கையில், வயதான பெண் ஒருவர் பணத்தை டெபாசிட் செய்ய வந்துவிட்டார்.
இந்த வரிசை அப்படியே தொடர்ந்தது, ஒவ்வொரு வாடிக்கையாளர்களாக கவுன்டருக்கு வந்துகொண்டே இருந்தனர். தேநீர் அருந்தச் சென்றால், வரிசை நீண்டுவிடும் என்று நினைத்துக்கொண்டே மதிய உணவு இடைவேளை வரை அமர்ந்திருந்தார்.
அர்ச்சனா பதக் 10 ஆண்டுகளுக்கும் மேலாக வங்கியில் பணிபுரிந்து வருகிறார். பெரும்பாலான வேலைகள் உட்கார்ந்த நிலையில் செய்யும் சூழலில் அவர் உள்ளார்.
பிபிசி தமிழ் வாட்ஸ்ஆப் சேனலில் இணைய இங்கே கிளிக் செய்யவும்.
மாலையில் காரை ஓட்டிக்கொண்டு வீட்டை அடைந்தவர், வீட்டு வேலைகளில் தனக்கு உதவி செய்பவர்களை எண்ணி நன்றியுணர்வுடன் நிம்மதிப் பெருமூச்சுவிட்டார். வீட்டுக்கு வந்ததும் குழந்தைகள் வீட்டுப் பாடம் செய்வதை மேற்பார்வையிட்டார். அதற்குள் இரவு 8:30 ஆகிவிட்டது. இப்படி அமர்ந்தபடியே அன்றைய நாள் கழிந்தது.
இதுதான் அவரது அன்றாட வழக்கம். ஆனால் ஒரு நாள் இந்த வழக்கம் சீர்குலைந்தது.
``என் கால்கள் வீங்கியது, முதுகு வலியால் உட்காரவோ நடக்கவோ முடியாமல் அவதிப்பட்டேன்” என்கிறார் அர்ச்சனா.
முதுகில் பெல்ட் அணிந்திருக்க, குஷன் இல்லாமல் உட்கார முடியாத அளவுக்கு வலியில் இருந்தார் அர்ச்சனா. இந்த வலியை அவர் எப்போதுமே உணரும் நிலைக்குத் தள்ளப்பட்டார். வலியுடன் நாட்களைக் கழித்தார்.
அர்ச்சனா ஒரு கட்டத்தில் வலியைத் தாங்க முடியாமல் மருத்துவரிடம் செல்ல முடிவு செய்தார். மருத்துவர் அவரிடம் தொடர்ந்து ரத்த அழுத்தத்தைப் பரிசோதிக்குமாறு அறிவுறுத்தியுள்ளார்.
நிபுணர்களின் கூற்றுப்படி, இந்த நிலைமை நம்மில் யாருக்கும் ஏற்படலாம். குறிப்பாக நீண்டநேரம் உட்கார்ந்திருக்க வேண்டிய பணியில் ஈடுபடுபவர்களுக்கு அதிக வாய்ப்புகள் உள்ளது.
அவர்கள் அலுவலக ஊழியர்களாகவோ, கடைக்காரர்களாகவோ, ஓட்டுநர்களாகவோ அல்லது வேறு வணிகத்துடன் தொடர்புடையவர்களாகவோ இருக்கலாம்.
நீண்டநேரம் உட்கார்ந்திருப்பது அவர்களின் இடுப்புப் பகுதியையும் ஆரோக்கியத்தையும் பாதிக்கும் என்று மருத்துவர்கள் கூறுகிறார்கள்.
ஆஸ்திரேலியாவின் மெல்போர்னில் உள்ள டீக்கின் பல்கலைக்கழகத்தின் உடல் செயல்பாடு மற்றும் ஊட்டச்சத்துக்கான பிரிவின் உடலியல் நிபுணர் டேவிட் டன்ஸ்டன், நீண்டநேரம் உட்கார்ந்திருப்பது உடலில் ஏற்படுத்தும் விளைவுகள் குறித்து விரிவான ஆராய்ச்சி செய்தார்.
ஒருவர் 120-180 நிமிடங்கள் வரை மட்டுமே தொடர்ந்து ஓரிடத்தில் உட்கார வேண்டும் என்று ஆராய்ச்சியாளர்கள் தெரிவிக்கின்றனர்.
ஆரோக்கியமான நிலையில் இருக்கும் 21 உழைக்கும் இளைஞர்களிடம் இந்த ஆய்வை டேவிட் டன்ஸ்டன் மேற்கொண்டார். அவர்கள் இந்த இளைஞர்களின் வாழ்க்கை முறையை ஆய்வு செய்து, தொடர்ந்து இரண்டு மணிநேரம் உட்கார்ந்து பணிப்புரியும் அவர்களின் கெண்டைத்தசை (calf muscles) சுமார் 1 செமீ (0.04 அங்குலம்) அளவுக்கு வளர்ந்தது மற்றும் அவர்களின் கால்களுக்கு ரத்த ஓட்டம் குறைந்ததைக் கண்டறிந்தனர்.
தசைகளில் அதிக அளவு பாதிப்பு பதிவாகிறது"நீண்டநேரம் உட்கார்ந்திருப்பது தசை செயல்பாட்டைக் குறைப்பதாக," கூறுகிறார் டன்ஸ்டன்.
"தசை செயல்பாடுகள் குறைவது, செரிமானப் பிரச்னையையும், கால்களுக்கு ரத்த ஓட்டம் குறையும் அபாயம் போன்ற சிக்கல்களுக்கும் வழிவகுக்கிறது. இது கால் தசைகளில் ரத்தம் தேங்குவதற்கு வழிவகுக்கும்" என்கிறார்.
பிபிசி நிருபர் அன்னாபெல் பார்னின் கட்டுரைப்படி , தொடர்ச்சியாக உட்கார்ந்திருப்பது, தொடர்ச்சியாக டிவி பார்ப்பது, வீடியோ கேம்களை விளையாடுவது, வாகனம் ஓட்டுவது அல்லது உட்கார்ந்து வேலை செய்வது போன்ற வாழ்க்கை முறை பல்வேறு உடல்நலப் பிரச்னைகளுக்கு வழிவகுக்கும்.
கடந்த 2020ஆம் ஆண்டில், உலக சுகாதார அமைப்பு உடல் உழைப்பு இல்லாத வாழ்க்கை முறையைக் (sedentary lifestyle) குறைக்க சில பரிந்துரைகளை வழங்கியது.
கடந்த 2010ஆம் ஆண்டில் மேற்கொள்ளப்பட்ட ஆய்வைத் தொடர்ந்து, பகலில் நீங்கள் உடற்பயிற்சி போன்ற சில செயல்களைச் செய்தாலும், அதன் பிறகு நீங்கள் நீண்டநேரம் உட்கார்ந்த நிலையில் இருந்தால், சிக்கல்கள் ஏற்படலாம் என்பதை ஆராய்ச்சியாளர்கள் கூறி வருகின்றனர்.
இருப்பினும், சிறிதளவுகூட உடல் உழைப்பு இல்லாமல், உட்கார்ந்து வேலை செய்பவர்களைக் காட்டிலும் கொஞ்சம் உடற்பயிற்சி செய்து உட்கார்ந்தபடி வேலை செய்பவர்களுக்கு உடல்நல ஆபத்து குறைவாக உள்ளது.
ஆரோக்கியத்தில் பாதகமான விளைவுஒருவர் 120-180 நிமிடங்கள் தொடர்ந்து உட்கார்ந்திருப்பது பல்வேறு நோய்களுக்கு வழிவகுக்கும் என்பதை ஆராய்ச்சியாளர்கள் ஒப்புக் கொள்கிறார்கள். தொடர்ந்து உட்கார்ந்திருப்பது உடலில் பல விளைவுகளை ஏற்படுத்துகிறது. ரத்த ஓட்டம் குறைகிறது.
இதன் காரணமாக, உடலில் ரத்த அழுத்தம் அதிகரிக்கத் தொடங்குகிறது. இது இதய நோய்க்கு முக்கியக் காரணமாகும். இந்த விளைவுகள் அனைத்தையும் கருத்தில் கொண்டு, நாம் தொடர்ந்து நீண்டநேரம் உட்கார்ந்திருப்பதைத் தவிர்க்க வேண்டும். ஆனால் கேள்வி என்னவென்றால், இந்தப் பழக்கத்தை நம்மால் முறியடிக்க முடியுமா?
"இன்று பலரின் பணிச்சூழல் உட்கார்ந்தபடி வேலை செய்ய வேண்டிய வகையிலேயே உள்ளது. அதிக நேரம் உட்கார்ந்திருப்பது சமூகத்தில் சகஜமான செயலாகிவிட்டது. எனவே மக்கள் அதிக நேரம் தங்களை அறியாமல் உட்கார்ந்து விடுகிறார்கள் என்று நான் நினைக்கிறேன்" என்கிறார் சர்ரே பல்கலைக்கழகத்தில் பழக்க வழக்கத்தில் நிபுணத்துவம் பெற்ற சமூக உளவியலாளர் பெஞ்சமின் கார்ட்னர்.
பெஞ்சமின் கார்ட்னர் மக்கள் ஏன் நீண்டநேரம் அமர்ந்திருக்கின்றனர் என்று ஆராய்ச்சி செய்தார்.
"யாரும் வேண்டுமென்றே உட்கார்ந்திருப்பது இல்லை, வசதி வாய்ப்புகள் அதிகரிக்கும்போது, நாம் அதிகம் அலைய வேண்டியதில்லை என்னும் சூழல் ஏற்படுகிறது."
கடந்த 2018ஆம் ஆண்டில், கார்ட்னரும் சக ஊழியர்களும் அலுவலக மீட்டிங்கின் போது நின்று கொள்ளலாம் என்னும் செயல்முறையை முன்னெடுத்தனர். ஆனால் அப்படி நிற்பது சமூக இடையூறுகளுக்கு வழிவகுத்தது.
"நாங்கள் மூன்று வெவ்வேறு மீட்டிங்கில் ஊழியர்களை நின்றவாறு கலந்துகொள்ள வைக்க முயன்றோம். பின்னர் அவர்களை நேர்காணல் செய்தோம், அவர்கள் சொன்ன பதில்கள் சுவாரஸ்யமானவை" என்கிறார் கார்ட்னர்.
"ஒரு முறையான அலுவல் ரீதியான சந்திப்பின்போது, நின்று கொண்டிருப்பது சரியாக இருக்காது."
ஆனால் நீண்டநேரம் உட்கார்ந்திருப்பதால் ஏற்படும் பிரச்னைகளைச் சமாளிக்க சில விஷயங்களை நாம் கண்டிப்பாகச் செய்ய வேண்டும்.
உதாரணமாக, டிரெட்மில்லில் உடற்பயிற்சி செய்வது மற்றும் உங்கள் கால்களை நகர்த்தும் செயல்பாடுகளைச் செய்வது ரத்த ஓட்டத்தை அதிகரிக்கிறது. எப்போதாவது எழுந்து சிறிது நடைபயிற்சி செல்வது அல்லது சில படிக்கட்டுகளில் ஏறுவதுகூட பலனளிக்கிறது.
அன்றாட வாழ்க்கையில் ஏற்பட்டுள்ள மாற்றம் குறித்து தேசிய முழங்கால் மற்றும் இடுப்பு மாற்று அறக்கட்டளை தலைவர் பேராசிரியர் சி.எஸ்.யாதவ் பேசுகையில், “தற்போதைய காலகட்டத்தில், எந்த வேலையாக இருந்தாலும், உட்கார்ந்து வேலை செய்து சம்பாதிக்க வேண்டிய கட்டாயத்தில் உள்ளனர். இது பொதுவான விஷயம் ஆகிவிட்டது” என்கிறார்.
நீண்டநேரம் உட்கார்ந்து வேலை செய்வதன் எதிர்மறை விளைவுகளை அவர் உறுதிப்படுத்துகிறார்.
பேராசிரியர் யாதவ் கூறுகையில் "முதுகு வலி, ரத்த அழுத்தம் அல்லது முழங்கால் பிரச்னைகள் நீண்ட நேரம் உட்காருவதால் ஏற்படும் பொதுவான பிரச்னைகள்."
"அலுவலகம் மற்றும் வீட்டு வேலைகளுக்கு மத்தியில் தங்களுக்கான நேரத்தை முன்னுரிமைப்படுத்துவது கடினம் என்பதால், உடல் உழைப்பு இல்லாததால் ஏற்படும் நோய்களால் பெண்கள் அதிகம் பாதிக்கப்படுகின்றனர்."
"எல்லா சூழ்நிலைகளையும் பொருட்படுத்தாமல், நீண்டநேரம் உட்காரும் வாழ்க்கை முறையைச் சரிசெய்து, எதிர்மறையான விளைவுகளைத் தவிர்க்க முடியும்" என்று அவர் விவரித்தார்.
சிக்கல்களைத் தவிர்ப்பது எப்படிபேராசிரியர் யாதவ் கூறுகையில், ”ஏரோபிக்ஸ் (Aerobics) மற்றும் வேறு சில பயிற்சிகள் உதவியாக இருக்கும். சைக்கிள் ஓட்டுதலும் சிறந்த உடற்பயிற்சி. தொடர்ந்து உட்காருவதால் தசைகளில் ஏற்படும் பாதிப்புகளைத் தடுக்கலாம்” என்றார்.
சைக்கிள் ஓட்டுவதற்கு வயது வரம்புகள் இருக்கிறதா என்று கேட்டதற்கு, நான்கு வயது குழந்தையாக இருந்தாலும் சரி, 70 முதல் 80 வயதுள்ள முதியவராக இருந்தாலும் சரி, சைக்கிள் ஓட்ட ஆரம்பிக்கலாம் என்றார்.
நீங்கள் சைக்கிள் ஓட்டுவதன் வேகம் மற்றும் எவ்வளவு நேரம் சைக்கிள் ஓட்டுகிறீர்கள் என்பதில் கவனம் செலுத்த வேண்டும்.
பேராசிரியர் யாதவ், "பெரும்பாலும் இந்த வாழ்க்கை முறையால் பாதிக்கப்பட்டிருக்கும் நோயாளிகள் பெல்ட் அல்லது பிற வசதிகளைப் பெற விரும்புகிறார்கள். ஆனால் நீண்ட நேரம் உட்காருவதால் ஏற்படும் பிரச்னைகளை பெல்ட் அணிவது போன்ற சிகிச்சைகள் முழுமையாகக் குணப்படுத்தாது. வாழ்க்கை முறை மாற்றங்களால் மட்டுமே ஆரோக்கியம் சாத்தியமாகும்" என்றார் தீர்க்கமாக.
(சமூக ஊடகங்களில் பிபிசி தமிழ் ஃபேஸ்புக், இன்ஸ்டாகிராம், எக்ஸ் (டிவிட்டர்) மற்றும் யூட்யூப் பக்கங்கள் மூலம் எங்களுடன் இணைந்திருங்கள்.)