சென்னை: இங்கிலாந்து பல்கலைக்கழகங்களில் சேரும் இந்திய மாணவர்களுக்கு ஆங்கில பேச்சு பயிற்சி, திறன் மேம்பாட்டு பயிற்சிகள் அளிக்கப்படும் என்று ஆக்ஸ்ஃபோர்டு சர்வதேச கல்வி சேவைகள் மையம் தெரிவித்துள்ளது.
இங்கிலாந்தில் உயர்கல்வி படிக்க விரும்பும் இந்திய மாணவர்களுக்கு ஆக்ஸ்ஃபோர்டு சர்வதேச கல்வி சேவைகள் மையம் (ஓஐஇஎஸ்) சார்பில் திறன் பயிற்சி அளிக்கப்படுகிறது. சென்னையில் இதன் அறிமுக நிகழ்ச்சி நேற்று நடந்தது. ஆக்ஸ்ஃபோர்டு சர்வதேச கல்வி குழுமத்தின் நிர்வாக இயக்குநர் மோஹித் கம்பீர், தலைமை வணிக அதிகாரி ஆண்டி கால்டுவெல், சர்வதேச விற்பனை பிரிவு (இங்கிலாந்து - ஐரோப்பா) இயக்குநர் ஷெர்வுட் வான் உள்ளிட்டோர் பங்கேற்றனர்.
செய்தியாளர்களிடம் அவர்கள் கூறியதாவது: வெளிநாட்டில் உயர்கல்வி கற்க இந்திய மாணவர்கள் பலர் மிகுந்த ஆர்வத்துடன் உள்ளனர். ஆனால், அதன் அணுகுமுறை பற்றிய விழிப்புணர்வு இல்லை. சர்வதேச போட்டியை சமாளிக்கும் அளவுக்கு தங்கள் திறன்களை வளர்த்துக் கொள்வதிலும் சிரமப்படுகின்றனர். தவிர, இந்திய கல்வி முறையில் இருந்து, இங்கிலாந்து கல்வி முறை வேறுபட்டிருக்கும். அதுபற்றி மாணவர்கள் தெரிந்துகொள்ள நாம் ஊக்குவிக்க வேண்டும்.
இங்கிலாந்தில் உயர்கல்வியை தொடர விரும்பும் இந்திய மாணவர்கள் சந்திக்கும் சவால்களை எதிர்கொள்ளும் வகையில், ஒருங்கிணைந்த பயிற்சி திட்டம் வடிவமைக்கப்பட்டுள்ளது. இது 12 மாத பாடத் திட்டம். இதில், பாடம் சார்ந்த திறன் பயிற்சி, திறமைகளை வளர்த்துக் கொள்ள ஏதுவாக மொழி பயிற்சி, ஆங்கில பேச்சு பயிற்சி உள்ளிட்டவை வழங்கப்படும்.