எம்பிபிஎஸ், பிடிஎஸ் மாணவர் சேர்க்கை: 715 மாணவர்களுக்கு ஒதுக்கீட்டு ஆணை
GH News August 23, 2024 07:12 PM

சென்னை: எம்பிபிஎஸ், பிடிஎஸ் படிப்புகளுக்கான சிறப்பு பிரிவு மற்றும் அரசுப் பள்ளி மாணவர்களுக்கான 7.5 சதவீத உள் இட ஒதுக்கீட்டுக்கான கலந்தாய்வில் 715 பேருக்கு ஆணைகளை சுகாதாரத்துறை அமைச்சர் மா.சுப்பிரமணியன் வழங்கினார்.

எம்பிபிஎஸ், பிடிஎஸ் படிப்புகளில் மாற்றுத்திறனாளி, முன்னாள்ராணுவ வீரர்களின் வாரிசு,விளையாட்டு வீரர் ஆகியோருக்கான சிறப்பு பிரிவு கலந்தாய்வு மற்றும் 7.5 சதவீத உள் இட ஒதுக்கீட்டு இடங்களுக்கு அரசு பள்ளிமாணவர்களுக்கான கலந்தாய்வு ஆகியவை சென்னை அண்ணாசாலையில் உள்ள அரசு பன்னோக்கு உயர் சிறப்பு மருத்துவமனை வளாகத்தில் நேற்று நடைபெற்றது. கலந்தாய்வில் சிறப்பு பிரிவு மற்றும் உள் இட ஒதுக்கீட்டில் மொத்தம் 715 மாணவர்களுக்கான ஒதுக்கீட்டு ஆணைகளை சுகாதாரத்துறை அமைச்சர் மா.சுப்பிரமணியன் வழங்கினார்.

பின்னர் செய்தியாளர்களிடம் அவர் கூறியதாவது: வழக்கமாக மருத்துவ படிப்புகளுக்கான கலந்தாய்வு ஜூலை மாதமே முடிவுபெற்றிருக்க வேண்டும். ஆனால் நீட் தேர்வில் ஏற்பட்ட குழப்பங்கள், குளறுபடிகளின் காரணமாக ஒரு மாதகாலதாமதத்துக்கு பிறகு இந்தமருத்துவ கலந்தாய்வு தொடங்கி உள்ளது. அதன்படி ஜூலை 31-ம் தேதி முதல் ஆக.9-ம் தேதி வரை விருப்ப மனுக்கள் பெறப்பட்டு, கடந்த 19-ம் தேதி தகுதி படைத்தவர்களுக்கான (மெரிட்) பட்டியல் வெளியிடப்பட்டன.

அதனடிப்படையில் மாணவர்கள் தங்களுக்கான இடங்களை ஆன்லைன் வாயிலாக தேர்வு செய்யும் பணி ஆக.21-ம் தேதி தொடங்கியது. தொடர்ந்து இன்றைக்கு (நேற்று) 7.5 சதவீத உள் ஒதுக்கீடு மற்றும் சிறப்பு பிரிவில் விளையாட்டு பிரிவு மாணவர்கள், முன்னாள் படைவீரர்களின் வாரிசுகள், மாற்றுத்திறனாளி மாணவர்கள் ஆகியோருக்கு கலந்தாய்வு நடத்தப்பட்டு மொத்தம் 715 பேருக்கு ஆணைகள் வழங்கப்பட்டுள்ளன.

© Copyright @2024 LIDEA. All Rights Reserved.