பொறியியல் படிப்புகளுக்கான கேட் நுழைவுத் தேர்வு விண்ணப்பப் பதிவு ஆகஸ்ட் 28-ம் தேதிக்கு ஒத்திவைப்பு
GH News August 24, 2024 07:10 PM

சென்னை: முதுநிலை பொறியியல் படிப்புகளில் சேருவதற்கான கேட் நுழைவுத் தேர்வுக்குரிய இணையதள விண்ணப்பப் பதிவு ஆகஸ்ட் 28-ம் தேதிக்கு ஒத்திவைக்கப்பட்டுள்ளது.

நாடு முழுவதுள்ள ஐஐடி உட்பட மத்திய உயர்கல்வி நிறுவனங்களில் முதுநிலை பொறியியல் படிப்புகளில் சேர கேட் (Graduate Aptitude Test in Engineering) எனும் தேசிய நுழைவுத் தேர்வு நடத்தப்படுகிறது. அதேபோல பல்வேறு பொதுத் துறை நிறுவனங்களும் கேட் தேர்வு மதிப்பெண் அடிப்படையில் பணிக்கு ஊழியர்களை தேர்வு செய்கின்றன. மேலும், கணிசமான தனியார் உயர்கல்வி நிறுவனங்களும் கேட் மதிப்பெண் மூலம் மாணவர் சேர்க்கையை நடத்துகின்றன. அதனால் இத்தேர்வானது பட்டதாரிகள் மத்தியில் முக்கியத்துவம் வாய்ந்ததாகும்.

இந்த கேட் நுழைவுத் தேர்வு இயந்திரவியல், கட்டிடவியல் உட்பட 30 பாடப்பிரிவுகளில் கணினி வழியில் நடத்தப்படும். மொத்தம் 100 மதிப்பெண்களுக்கு 3 மணி நேரம் வரை தேர்வு நடைபெறும். தேர்வு முடிவுகள் வெளியானதில் இருந்து 3 ஆண்டுக்கு இந்த மதிப்பெண் செல்லும். அதன்படி 2025-ம் ஆண்டுக்கான கேட் தேர்வு வரும் பிப்ரவரி 1, 2 மற்றும் 15, 16-ம் தேதிகளில் பாடப்பிரிவு வாரியாக காலை, மதியம் என இருவேளைகளிலும் நடைபெற உள்ளது. இந்த முறை கேட் தேர்வை ரூர்க்கி ஐஐடி நடத்தவுள்ளது. மேலும், தேர்வுக்கான மையங்கள் 8 மண்டலங்களாகப் பிரித்து அமைக்கப்பட இருக்கின்றன.

இதற்கான இணையதள விண்ணப்பப் பதிவு இன்று முதல் (ஆக.24) தொடங்கப்படும் என்று முதலில் அறிவிக்கப்பட்டது. அதன்படி பட்டதாரிகள் விண்ணப்பிக்க ஆர்வமுடன் இன்று வலைத்தளத்தில் காத்திருந்தனர். ஆனால், விண்ணப்பப் பதிவானது ஆகஸ்ட் 28-ம் தேதிக்கு ஒத்திவைக்கப்படுவதாக ரூர்க்கி ஐஐடி தற்போது அறிவிப்பு வெளியிட்டுள்ளது.

© Copyright @2024 LIDEA. All Rights Reserved.