சென்னை: எம்பிபிஎஸ், பிடிஎஸ் படிப்புகளுக்கான அகில இந்திய கலந்தாய்வு முதல் சுற்றில் இடஒதுக்கீடு பெற்றவர்களின் விவரங்கள் இன்று வெளியிடப்படுகிறது.
நாடு முழுவதும் அரசு மருத்துவம் மற்றும் பல் மருத்துவக் கல்லூரிகளில் இருந்து 15 சதவீதம் எம்பிபிஎஸ், பிடிஎஸ் இடங்கள், அகில இந்திய ஒதுக்கீட்டுக்கு வழங்கப்படுகிறது. இந்த இடங்கள் மற்றும் எய்ம்ஸ், ஜிப்மர், நிகர்நிலைப் பல்கலைக்கழகங்கள், மத்திய பல்கலைக்கழகங்களில் உள்ள எம்பிபிஎஸ், பிடிஎஸ் இடங்களுக்கான மாணவர் சேர்க்கை கலந்தாய்வை மத்திய அரசின் சுகாதார சேவைகளுக்கான தலைமை இயக்குநரகத்தின் (டிஜிஎச்எஸ்) மருத்துவக் கலந்தாய்வு குழு (எம்சிசி) ஆன்லைனில் நடத்தி வருகிறது.
இந்நிலையில், எம்பிபிஎஸ், பிடிஎஸ் படிப்புகளுக்கு 2024 - 25-ம் கல்வி ஆண்டு மாணவர் சேர்க்கைக்கான முதல் சுற்று கலந்தாய்வு https://mcc.nic.in/என்ற கடந்த 14-ம் தேதி தொடங்கி நடைபெற்று வருகிறது. இடஒதுக்கீடு பெற்றவர்களின் விவரங்கள் ஆகஸ்ட் 23-ம் தேதி வெளியிடப்படும் என அறிவிக்கப்பட்டிருந்தது. ஆனால், சில நிர்வாக காரணங்களால் இடஒதுக்கீடு பெற்றவர்களின் விவரங்கள் ஆகஸ்ட் 24-ம் தேதி (இன்று) வெள்யிடப்படும் என்று மருத்துவக் கலந்தாய்வு குழு தெரிவித்துள்ளது.