சென்னை: முதுநிலை மருத்துவப் படிப்புகளுக்கான நீட் தேர்வு நடந்து முடிந்த இரண்டு வாரத்தில், அதன் முடிவுகளை தேசிய மருத்துவ அறிவியல் தேர்வுகள் வாரியம் வெளியிட்டுள்ளது. சில தினங்களில் கலந்தாய்வு குறித்த அறிவிப்பு வெளியாகவுள்ளன.
இந்தியா முழுவதும் அரசு, தனியார் மருத்துவக் கல்லூரிகள், நிகர்நிலைப் பல்கலைக்கழகங்கள், மத்திய அரசின் கல்வி நிறுவனங்களில் மருத்துவப் பட்டமேற்படிப்புகளான எம்டி, எம்எஸ், முதுநிலை டிப்ளமோ படிப்புகளுக்கான இடங்கள் நீட் தேர்வில் தகுதிப் பெறுவர்களைக் கொண்டு நிரப்பப்பட்டு வருகிறது. இந்த நீட் தேர்வை தேசிய மருத்துவ அறிவியல் தேர்வுகள் வாரியம் (என்பிஇஎம்எஸ்) நடத்துகிறது.
அதன்படி, எம்டி, எம்எஸ், முதுநிலை டிப்ளமோ படிப்புகளுக்கு 2024-25-ம் கல்வி ஆண்டு மாணவர் சேர்க்கைக்கான நீட் தேர்வு நாடு முழுவதும் 185 நகரங்களில் 500 மையங்களில் கடந்த 11-ம் தேதி நடைபெற்றது. தமிழகத்தில் எம்பிபிஎஸ் முடித்த சுமார் 25 ஆயிரம் கள் உட்பட நாடு முழுவதும் 2.3 லட்சம் பேர் தேர்வில் பங்கேற்றனர். முறைகேடுகளை தடுக்க ஏற்கெனவே திட்டமிட்டப்படி காலை, மாலை என இரு பிரிவுகளாக தேர்வுகள் நடைபெற்றது.
அதன்படி, 9 மணி முதல் நண்பகல் 12 மணி வரை மூன்றரை மணி நேரம் நடந்த தேர்வில் 50 சதவீதம் பேரும், பிற்பகல் 3.30 மணி முதல் இரவு 7 மணி வரை மூன்றரை மணி நேரம் நடந்த தேர்வில் மீதமுள்ள 50 சதவீத பேரும் பங்கேற்றனர். காலை மற்றும் மாலையில் தேர்வு எழுதிய இருதரப்பினருக்கும் மாறுபட்ட வினாத்தாள்கள் வழங்கப்பட்டன. மொத்தம் 800 மதிப்பெண்களுக்கு கம்ப்யூட்டர் மூலம் ஆங்கிலத்தில் நடத்தப்பட்ட தேர்வில் பயோகெமிஸ்ட்ரி, அனாடமி, காது மூக்கு தொண்டை (இஎன்டி), மகப்பேறு - மகளிர் நலம், குழந்தை மருத்துவம், கண் மருத்துவம் உள்ளிட்ட பல்வேறு பாடப்பிரிவுகளில் 200 கேள்விகள் கேட்கப்பட்டன.