தென்காசி: மாணவ - மாணவியர் உயர் கல்வி பயில்வதற்கு கடந்த ஆண்டு தென்காசி மாவட்டத்தில் கல்விக் கடன் வழங்கும் முகாம்கள் நடத்தப்பட்டு, அதன் மூலம் பலர் பயனடைந்தனர். அதேபோல் இந்த கல்வியாண்டிலும் மாவட்ட நிர்வாகம், தென்காசி மாவட்ட முன்னோடி வங்கி சார்பில் சிறப்பு கல்விக்கடன் முகாம்கள் நடைபெற உள்ளது.
வருகிற 28-ம் தேதி காலை 10 மணி முதல் மதியம் 2 மணி வரை தென்காசி வட்டார வளர்ச்சி அலுவலகத்தில் கல்விக்கடன் முகாம் நடைபெற உள்ளது. இதில் தென்காசி, செங்கோட்டை வட்டார கல்லூரி மாணவ - மாணவியர் பங்கேற்று பயன்பெறலாம். வருகிற 29-ம் தேதி கடையம் வட்டார வளர்ச்சி அலுவலகத்தில் நடைபெறும் முகாமில் கடையம் வட்டார மாணவ - மாணவியர் பங்கேற்கலாம். 30-ம் தேதி கடையநல்லூர் வட்டார வளர்ச்சி அலுவலகத்தில் நடைபெறும் முகாமில் கடையநல்லூர், வாசுதேவநல்லூர் வட்டார மாணவ - மாணவியர் கலந்துகொள்ளலாம்.
செப்டம்பர் 3-ம் தேதி கீழப்பாவூர் வட்டார வளர்ச்சி அலுவலத்தில் நடைபெறும் முகாமில் ஆலங்குளம், கீழப்பாவூர் வட்டார மாணவ - மாணவியர் கலந்துகொள்ளலாம். செப்டம்பர் 4-ம் தேதி சங்கரன்கோவில் வட்டார வளர்ச்சி அலுவலகத்தில் நடைபெறும் முகாமில் சங்கரன்கோவில், குருவிகுளம், மேலநீலிதநல்லூர் வட்டார மாணவ - மாணவியர் கலந்துகொள்ளலாம். அனைத்து கலை, பொறியியல், பட்டய பொறியியல், (பொது, பல், கால்நடை மருத்துவம்), விவசாயம், செவிலியர், சட்டம் மற்றும் அரசு அங்கீகாரம் பெற்ற 3 ஆண்டுக்கு மேற்பட்ட அனைத்து கல்லூரி படிப்புக்கான கல்விக்கடனை எதிர்நோக்கி காத்திருக்கும் மாணவ - மாணவியர் தங்கள் பெற்றோருடன் வந்து இந்த முகாம்களில் கலந்துகொண்டு பயன்பெறலாம்.
தென்காசி மாவட்டத்தில் வசிப்பவர்கள், மற்ற மாவட்டங்களில், மற்ற மாநிலங்களில் மற்றும் வெளி நாடுகளில் தற்போது படித்துக்கொண்டு இருக்கும் மாணவ - மாணவியரும் இந்த வாய்ப்பை பயன்படுத்திக் கொள்ளலாம். தற்போது பல்வேறு கல்லூரிகளில் படித்துக் கொண்டிருக்கும் அனைத்து மாணவ - மாணவியரும் கல்விக்கடன் தேவை எனில் படித்து முடித்த கடந்த கல்வி ஆண்டுக்கான மதிப்பெண் சான்றுடன் வந்து இந்த முகாமில் கலந்துகொள்ளலாம்.