சென்னை: அரசுப் பள்ளிகளில் தற்காலிக பராமரிப்பு தேவைப்படும் வகுப்பறைகள் மற்றும் கட்டிடங்களின் விவரங்களை சமர்ப்பிக்க வேண்டுமென தொடக்கக் கல்வித் துறை உத்தரவிட்டுள்ளது.
இதுகுறித்து தொடக்கக் கல்வித் துறை இயக்குநர் நரேஷ், அனைத்து மாவட்ட முதன்மைக் கல்வி அலுவலர்களுக்கும் அனுப்பிய சுற்றறிக்கை விவரம்: தலைமைச் செயலர் ஆய்வுக் கூட்டத்தில் 'அனைத்து அரசுப் பள்ளிகளின் கட்டிடங்களை ஆய்வு செய்து 100 சதவீத உறுதி தன்மையுடன் உள்ளதா என்பதை உறுதிபடுத்த வேண்டும். பராமரிப்புப் பணிகள் தேவைப்பட்டால் பொதுப் பணித் துறை அல்லது தொடர்புடைய உள்ளாட்சி அமைப்பின் ஒத்துழைப்புடன் சீரமைக்க உரிய நடவடிக்கைகள் எடுக்கப்பட வேண்டும்' என்று தமிழக அரசால் அறிவுறுத்தப்பட்டுள்ளது.
இதுதவிர அனைத்து அரசுப் பள்ளிகளிலும் கட்டிடங்களை ஆய்வு செய்து தற்காலிகமாக பராமரிப்புப் பணிகள் தேவைப்படும் பள்ளிகள் குறித்த விவரங்கள் கொண்ட பட்டியலை தமிழக அரசுக்கு 2 வாரத்துக்குள் அனுப்ப வேண்டும் எனவும் அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது. எனவே, அரசு தொடக்க, நடுநிலைப்பள்ளிகளை பார்வையிட வரும் மாவட்ட ஒருங்கிணைந்த பள்ளிக்கல்வி பொறியாளருக்கு உரிய ஒத்துழைப்பு வழங்கிட வேண்டும்.
மேலும், அவர்கள் உதவியுடன் தற்காலிகமாக பராமரிப்புப் பணிகள் தேவைப்படும் பள்ளிகளின் விவரங்களை அறிக்கையாக தொகுத்து ஆகஸ்ட் 28-ம் தேதிக்குள் இயக்குநரகத்துக்கு அந்தந்த மாவட்டக் கல்வி அலுவலர்கள் அனுப்பிவைக்க வேண்டும்.