தமிழக மீனவர்களுக்கு ரூ.3.5 கோடி அபராதம்.! இலங்கை நீதிமன்றம் முன் மீனவர்கள் தர்ணா.!!
Webdunia Tamil September 19, 2024 02:48 AM

இலங்கை கடற்படையால் கைதான தூத்துக்குடி தருவைக்குளத்தை சேர்ந்த மீனவர்கள் 10-பேருக்கு ரூ.3.50 கோடி அபராதமும், 6-மாத சிறைத் தண்டனையும் விதிக்கப்பட்டுள்ள சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.

தூத்துக்குடி துறைமுகத்தில் இருந்து வழக்கம் போல் கடந்த மாதம் 5-ஆம் தேதி ஏராளமான மீனவர்கள் விசைப்படகுகளில் மீன்பிடிக்கக் கடலுக்குச் சென்றனர். மன்னார் மேற்கு குதிரைமலை என்ற கடல்பகுதியில் மீனவர்கள் மீன்பிடித்துக் கொண்டிருந்தனர். அப்போது அங்கு ரோந்து வந்த இலங்கை கடற்படையினர் தூத்துக்குடி மீனவர்கள் 22 பேரை எல்லை தாண்டி மீன் பிடித்ததாகக் கூறி கைது செய்தனர்.

அதனைத் தொடர்ந்து 22 மீனவர்களையும் காங்கேசன் துறைமுகத்திற்கு விசாரணைக்காக அழைத்துச் செல்லப்பட்டு நீதிமன்ற காவலில் வைக்கப்பட்டனர். கைது செய்யப்பட்ட தூத்துக்குடி மீனவர்கள் 22 பேரும் கடந்த 3ஆம் தேதி நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்டனர். இதில் 12-பேருக்கு தலா ரூ.1.5 கோடி இலங்கை ரூபாயில் அபராதம் விதிக்கப்பட்டது. இது இந்திய ரூபாய் மதிப்பில் சுமார் ரூ.42 லட்சம் எனக் கூறப்படுகிறது. மேலும் 10 மீனவர்களுக்கு காவலை நீட்டித்து இலங்கை நீதிமன்றம் உத்தரவிட்டிருந்தது.

இந்நிலையில் இலங்கை கடற்படையால் கைதான தூத்துக்குடி தருவைக்குளத்தை சேர்ந்த மீனவர்கள் 10-பேருக்கு ரூ.3.50 கோடி அபராதமும், 6-மாத சிறைத் தண்டனையும் விதிக்கப்பட்டுள்ளது. இதனால் அதிர்ச்சியடைந்த மீனவர்கள் இலங்கை நீதிமன்றம் முன் தர்ணா போராட்டத்தில் ஈடுபட்டனர்.


ALSO READ: பாலியல் தொந்தரவு - ஜானி மாஸ்டர் சஸ்பெண்ட்.! தெலுங்கானா ஃபிலிம் சேம்பர் அதிரடி.!!



கைது நடவடிக்கையால் மீனவர்களின் வாழ்வாதாரம் பாதிக்கப்பட்டுள்ள நிலையில், கோடிக்கணக்கில் அபராதம் விதிப்பது எந்த வகையில் நியாயம் என்றும் இந்த விவாரத்தில் மத்திய மாநில அரசுகள் தலையிட்டு, இலங்கை அரசுக்கு போதிய அழுத்தம் கொடுத்து அந்நாட்டு சிறையில் உள்ள மீனவர்களை மீட்க உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று தூத்துக்குடி மாவட்ட மீனவர்கள் கண்ணீர் மல்க கோரிக்கை விடுத்துள்ளனர்
© Copyright @2024 LIDEA. All Rights Reserved.