அரசியலுக்காகக் கடவுள் பெயரைப் பயன்படுத்துவது - ஜெகன் மோகன் பதிலடி..!
Newstm Tamil September 21, 2024 01:48 AM

ஆந்திர மாநில முதலமைச்சர் சந்திரபாபு நாயுடுவின் குற்றச்சாட்டுகளுக்கு முன்னாள் முதலமைச்சர் ஜெகன் மோகன் ரெட்டி பதிலடி அளித்துள்ளார்.

திருப்பதி லட்டில் மாடு உள்ளிட்ட விலங்குக் கொழுப்பு சேர்க்கப்பட்டதாக வெளியான ஆய்வுத் தகவல்கள் ஆந்திர அரசியலில் புயலை கிளப்பியுள்ளது. சந்திரபாபு குற்றச்சாட்டுகளுக்கு ஜெகன் மோகன் பதிலடி அளித்துள்ளார்.

“சான்றிதழ் பெற்ற பொருள்களை வைத்து மட்டுமே லட்டு செய்யப்படுகிறது”

செய்தியாளர் சந்திப்பில் இதுகுறித்து விரிவாகப் பேசிய ஜெகன் மோகன், “இவை சந்திரபாபு நாயுடுவின் திசை திருப்பும் உத்திகள். யாராவது இப்படிச் செய்ய முடியும் என்று நினைக்கிறீர்களா? இதற்கான டெண்டர் ஒவ்வொரு ஆறு மாதங்களுக்கும் விடப்படுகிறது.

யாருக்கு விட வேண்டும் யாருக்கு விடக் கூடாது என்ற தகுதி அளவுகோல் பல ஆண்டுகளாக மாறவில்லை. NABL சான்றிதழ் மற்றும் தயாரிப்பு தரச் சான்றிதழைச் சப்ளையர்கள் வழங்க வேண்டும். நெய்யிலிருந்து மாதிரிகளைத் திருமலை திருப்பதி தேவஸ்தானம் சேகரிக்கிறது.

தரச் சான்றிதழ் பெற்ற பொருள்களை வைத்து மட்டுமே லட்டு செய்யப்படுகிறது. தெலுங்கு தேசம் மத விஷயங்களில் அரசியல் செய்கிறது. எங்கள் ஆட்சியில் 18 முறை பொருள்களை நிராகரித்துள்ளோம். தேவையற்ற சர்ச்சைகள். எனது அரசாங்கம் எந்த மீறலிலும் ஈடுபடவில்லை. அரசியலுக்காகக் கடவுள் பெயரைப் பயன்படுத்துவது கீழ்த்தரமான செயல்” என்றார்.

© Copyright @2024 LIDEA. All Rights Reserved.