17 ரன்களில் அவுட்டானாலும்.. சச்சினின் முக்கியமான சாதனையை முடித்து விட்ட கோலி.. சேப்பாக்கம் மண்ணிற்கு கிடைத்த பெருமை..
Tamil Minutes September 21, 2024 01:48 AM

2022 ஆம் ஆண்டு ஆசிய கோப்பை தொடருக்கு முன்பாக சுமார் இரண்டரை ஆண்டுகள் விராட் கோலி பேட்டிங்கில் பெரிய அளவில் விமர்சனத்தை சந்தித்திருந்தார். சுமார் 1000 நாட்களுக்கு மேல் ஒரு சதம் கூட சர்வதேச அரங்கில் அடிக்காமல் இருந்த கோலி, தனது பேட்டிங் மூலம் ரன் சேர்க்கவே தடுமாற்றம் கொண்டிருந்தார்.

ஆனால், ஆசிய கோப்பையில் ஆப்கானிஸ்தான் அணிக்கு எதிராக சதமடித்து மீண்டு்ம் ஃபார்முக்கு திரும்பிய கோலி, கடந்த டி20 உலக கோப்பைத் தொடருக்கு முன்பு வரை சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்தி பல தொடர்களில் தனி பேட்ஸ்மேனாக ஆதிக்கம் செய்திருந்தார்.

விமர்சனத்தில் சிக்கிய கோலி

ஆனால், யார் கண் பட்டதோ தெரியவில்லை, டி20 உலக கோப்பைத் தொடரில் இருந்து கோலியின் பேட்டிங்கே அதிகம் விமர்சனத்தை சந்தித்து வருகிறது. டி20 உலக கோப்பைத் தொடரில் இறுதி போட்டியை தவிர லீக் மற்றும் மற்ற நாக் அவுட் போட்டிகளில் ரன் அடிக்கவே முடியாமல் சிரமப்பட்டு மோசமான ஃபார்மை எதிர்கொண்டிருந்தார்.

அதே வேளையில், இறுதி போட்டியில் சிறப்பாக ஆடி இந்திய அணி கோப்பையை வெல்லவும் முக்கிய பங்கு வகித்திருந்த கோலி, அந்த ஒரு போட்டிக்கு பின்னர் மீண்டும் சரிவை நோக்கி பயணிக்க தொடங்கி விட்டார். இலங்கை அணிக்கு எதிரான 3 ஒரு நாள் போட்டிகளிலும் சொதப்பிய கோலி, வங்கதேச அணிக்கு எதிரான முதல் டெஸ்டிலும் 20 ரன்களை கூட தாண்டவில்லை.

தொடரும் சோகம்

முதல் இன்னிங்சில் 6 ரன்கள் அடித்திருந்த கோலி, 2 வது இன்னிங்சில் 17 ரன்களில் அவுட்டாகி இருந்தார். இதில் எல்பிடபுள்யூ முறையில் அவுட்டான கோலி, டிஆர்எஸ் அப்பீல் செய்திருந்தால் அவுட்டாகாமல் தப்பித்திருக்கலாம் என்பதும் குறிப்பிடத்தக்கது.

ஆனாலும் விராட் கோலியின் தற்போதைய ஃபார்ம், அடுத்த ஆண்டு வரவிருக்கும் ஐசிசி தொடர்களில் இந்திய அணிக்கு தலைவலியாக கூட அமையலாம். அது மட்டுமில்லாமல், வங்கதேச அணியை தொடர்ந்து நியூசிலாந்து, ஆஸ்திரேலியா உள்ளிட்ட பல அணிகளுக்கு எதிராகவும் இந்திய அணி கிரிக்கெட் தொடர்களை ஆட இருப்பதால், கோலி ஃபார்முக்கு திரும்பியே ஆக வேண்டுமென்ற கட்டாயத்தில் உள்ளார்.

சச்சினை முந்திய கோலி

ஆனால், கோலி மீதான விமர்சனங்கள் ஒரு பக்கம் இருக்க, சச்சினின் முக்கியமான சாதனையை முந்தி கோலி படைத்த சரித்திரம் பற்றி தற்போது பார்க்கலாம். இந்திய மண்ணில் 12,000 சர்வதேச ரன்களை வங்கதேச அணிக்கு எதிராக 2 வது இன்னிங்சில் பேட்டிங் செய்த போது கடந்திருந்தார் கோலி.

சச்சின், ரிக்கி பாண்டிங், சங்கக்காரா, காலிஸ் உள்ளிட்ட பலரும் சொந்த மண்ணில் 12,000 ரன்களை தொட்டிருந்தாலும் இதில் தனித்துவமான ஒரு இடத்தை தான் கோலி பிடித்துள்ளார். இதற்கு முன்பாக சொந்த மண்ணில் அதி வேகமாக 12,000 ரன்களை தொட்ட வீரர் என்ற பெருமையை சச்சின் சொந்தமாக்கி இருந்தார்.

சச்சின் டெண்டுல்கர் 267 இன்னிங்ஸ்களில் 12,000 ரன்களை கடந்திருந்த நிலையில், அதனை முறியடித்த கோலி, 243 இன்னிங்ஸ்களிலேயே 12,000 ரன்களை கடந்து சாதித்துள்ளது குறிப்பிடத்தக்கது.

© Copyright @2024 LIDEA. All Rights Reserved.