கஜானாவை கொள்ளையடிப்பது குறித்து தான் ஜெகன் மோகன் ரெட்டிக்கு தெரியும்..! விளாசிய பாஜக தலைவர்..!
Newstm Tamil September 22, 2024 11:48 AM

திருப்பதியில் உள்ள ஸ்ரீ வெங்கடேஸ்வரா கோயிலில் பக்தர்களுக்குப் பிரசாதமாக வழங்கப்படும் லட்டுகளைத் தயாரிக்க விலங்குகளின் கொழுப்பை பயன்படுத்தியதாக ஆந்திர முதல்வர் சந்திரபாபு கூறியதில் இருந்து இப்பிரச்னை நாடு முழுவதும் கடும் விவாதத்தை ஏற்படுத்தியுள்ளது. இந்துக்களின் மத உணர்வுளைப் புண்படுத்துவதாக பலரும் கருத்து தெரிவித்து வருகின்றனர்.

ஆந்திர மாநில முதல்வர் சந்திரபாபு நாயுடு, ஜெகன் மோகன் ரெட்டி ஆட்சியில் திருமலையின் புனிதத்தைக் கெடுத்துவிட்டதாகவும், புனிதமான திருப்பதி லட்டில் நெய்க்குப் பதிலாக விலங்குகளின் கொழுப்பைப் பயன்படுத்தி அசுத்தப்படுத்தியதாகவும் குற்றச்சாட்டு வைத்தார். முதல்வர் சந்திரபாபு நாயுடுவின் இந்தக் குற்றச்சாட்டை ஒய்.எஸ்.ஆர் காங்கிரஸ் கட்சி மறுத்தது. ஒய்.எஸ்.ஆர் காங்கிரஸ் கட்சி எம்.பி. சுப்பா ரெட்டி, திருப்பதி ஏழுமலையான் கோவிலின் புனிதம் மற்றும் பல நூறு கோடி இந்துக்களின் நம்பிக்கையை சந்திரபாபு நாயுடு காயப்படுத்தி உள்ளார். சந்திரபாபு அரசியலுக்காக எந்த மோசமான செயலையும் செய்யத் தயங்கமாட்டார் என்பது மீண்டும் நிரூபணம் ஆகியுள்ளது என்று கூறியிருந்தார்.

இதற்கிடையே, திருப்பதி ஏழுமைலையான் கோவிலில் பிரசாதமாக வழங்கப்படும் லட்டுகளில் பயன்படுத்தப்பட்ட நெய்யை குஜராத்தில் உள்ள தனியார் ஆய்வகம் ஒன்றுக்கு சோதனைக்காக அனுப்பி வைக்கப்பட்டது. அந்த சோதனையில், லட்டில் மாட்டுக் கொழுப்பு மற்றும் மீன் எண்ணெய் உள்ளிட்டவை இருப்பது உறுதி செய்யப்பட்டுள்ள அதிர்ச்சி தகவல் வெளியாகியுள்ளது.

இந்நிலையில், இந்து மதச் சடங்குகள், மரபுகள், பழக்கவழக்கங்கள் குறித்து அறியாதவர் ஜெகன்மோகன் ரெட்டி என்றும் பாஜக தலைவர் எல்.தினகரன் குற்றம் சாட்டியுள்ளார். இதுகுறித்து, பாஜக தலைவர் தினகர் கூறியுள்ளதாவது: இந்து மதச் சடங்குகள், மரபுகள், இந்துக்களின் பழக்க வழக்கங்களுக்கு களங்கம் விளைவிப்பது, கஜானாவை கொள்ளையடிப்பது குறித்து தான் ஜகன் மோகன் ரெட்டிக்கு தெரியும். அதுதவிர ஆட்சி மற்றும் சமூகத்தில் உள்ள அமைப்புகள் குறித்தான அறிவு அவருக்கு கிடையாது.

திருப்பதி ஸ்ரீ வெங்கடேஸ்வரா கோயிலில் பக்தர்களுக்கு பிரசாதமாக வழங்கப்படும் லட்டுகளில் கலப்படம் செய்யப்பட்டதாக குற்றச்சாட்டு கூறப்படுவதற்கு பதில் அளிக்காமல், பாஜக தலைவர்களை அரைகுறையான அறிவு உள்ளவர்கள் என்று முன்னாள் முதல்வர் கூறி வருகிறார் என்று தெரிவித்துள்ளார்.

© Copyright @2024 LIDEA. All Rights Reserved.