காவல்துறை கேள்விகளுக்கு த.வெ.க. சார்பில் பதில் கடிதம்..!
Newstm Tamil September 22, 2024 11:48 AM

நடிகர் விஜய் 'தமிழக வெற்றிக் கழகம்' என்ற புதிய கட்சியை தொடங்கியுள்ளார். கட்சி தொடங்கிய அறிவிப்பை கடந்த பிப்ரவரி மாதம் 2-ம் தேதி விஜய் அதிகாரபூர்வமாக அறிவித்தார். இதையடுத்து கடந்த ஆகஸ்ட் 22-ந்தேதி விஜய் தனது கட்சியின் கொடி மற்றும் கொடிப்பாடலை அறிமுகப்படுத்தினார். இதனை தொடர்ந்து, கட்சியின் முதல் மாநாட்டை நடத்துவது தொடர்பாக விஜய் சில பிரச்சினைகளை எதிர்கொண்டார். பின்னர் விழுப்புரம் மாவட்டம் விக்கிரவாண்டி பகுதியில் மாநாடு நடத்த முடிவு செய்யப்பட்டு, தற்போது அதற்கான ஏற்பாடுகள் தீவிரமாக நடைபெற்று வருகின்றன.

அடுத்த மாதம் 27-ந்தேதி தமிழக வெற்றிக் கழகத்தின் முதல் மாநாடு நடைபெறும் என்று விஜய் அதிகாரபூர்வமாக நேற்று முன்தினம் அறிவித்தார். முன்னதாக செப்டம்பர் 23-ந்தேதி மாநாடு நடத்த அனுமதி கோரி விழுப்புரம் மாவட்ட காவல்துறையிடம் த.வெ.க. பொதுச்செயலாளர் புஸ்ஸி ஆனந்த் மனு கொடுத்திருந்தார். அப்போது காவல்துறை தரப்பில் 32 நிபந்தனைகள் விதிக்கப்பட்டு அனுமதி வழங்கப்பட்டது.

இருப்பினும் குறிப்பிட்ட தேதியில் மாநாட்டை நடத்த இயலாத சூழலில், தற்போது புதிய தேதியை விஜய் அறிவித்துள்ளார். இந்த நிலையில், மாநாடு நடத்துவதற்கு காவல்துறை விதித்த 32 நிபந்தனைகள் மற்றும் கேள்விகளுக்கான பதில் கடிதத்தை விழுப்புரம் மாவட்ட எஸ்.பி.யிடம் நேற்று புஸ்ஸி ஆனந்த் வழங்கினார். மாநாட்டின் தேதி மாற்றம் செய்யப்பட்டது தொடர்பான கடிதத்தையும் காவல்துறையிடம் த.வெ.க. வழங்கியுள்ளது. மாநாடு நடைபெறும் திடலுக்கு எதிரே வாகனம் நிறுத்தும் இடத்தை அமைக்க காவல்துறை வலியுறுத்திய நிலையில், த.வெ.க. மாநாடு நடக்கவுள்ள பகுதியிலேயே வாகன நிறுத்தத்திற்காக புதிதாக 27 ஏக்கர் நிலம் ஒப்பந்தம் செய்யப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. 

© Copyright @2024 LIDEA. All Rights Reserved.