ஆங்கிலேயரை வென்ற இந்தியாவின் முதல் ராணி வேலு நாச்சியார் - போரில் குயிலி என்ன ஆனார்?
BBC Tamil September 22, 2024 02:48 PM
TWITTER @VERTIGOWARRIOR ஹைதர் அலி உதவியுடன் ஆங்கிலேயர்களை தோற்கடித்தவர் ராணி வேலுநாச்சியார்

வேலு நாச்சியார், ஹைதர் அலியை 18 ஆம் நூற்றாண்டில் திண்டுக்கல் நகரில் சந்தித்தார். பூட்டுகளுக்கும், பிரியாணிக்கும் பெயர் பெற்ற தமிழ்நாட்டின் இந்த நகரம் அப்போது தென்னிந்தியாவின் மைசூர் ராஜ்ஜியத்தின் ஒரு பகுதியாக இருந்தது.

வடக்கில் கிருஷ்ணா நதி, கிழக்கில் கிழக்குத் தொடர்ச்சி மலைகள் மற்றும் மேற்கில் அரபிக் கடல் வரை நீண்டிருந்த மைசூர் ராஜ்ஜியத்தின் ஆட்சியாளராக ஹைதர் அலி இருந்தார். அந்த ராஜ்ஜியத்தின் பெரும்பாலான பகுதிகள் இப்போது தமிழ்நாடு மற்றும் கேரளாவின் அண்டை மாநிலமான கர்நாடகாவில் உள்ளன.

1773 ஆம் ஆண்டு கிழக்கிந்திய கம்பெனியிடம் தனது கணவர் முத்து வடுகநாத பெரியஉடைய தேவர் மற்றும் தங்கள் சமஸ்தானமான சிவகங்கையை இழந்த பின்னர் வேலு நாச்சியார் தனது இளம் மகள் வெள்ளச்சியுடன் அடைக்கலம் மற்றும் ஆதரவைத் தேடிக் கொண்டிருந்தார்.

ஹைதர் அலி மற்றும் வேலு நாச்சியாரின் சந்திப்பு பரஸ்பர மரியாதை நிரம்பிய காலகட்டத்தின் தொடக்கமாக இருந்தது. அதை அடுத்த தலைமுறையில் திப்பு சுல்தானும் பின்பற்றினார்.

வேலு நாச்சியாருக்கு ஹைதர் அலியின் உதவி கிடைத்தபோது, என்றென்றும் மறக்க முடியாததாக மாறிய மதிப்பும் மரியாதையும் அவருக்கு கிடைத்தது.

இந்த மதிப்பு மரியாதை என்ன என்ற கேள்வியை விட்டுவிட்டு, வேலு நாச்சியார் யார், என்னென்ன சவால்களை எதிர்கொண்டார் என்ற தகவலை நாம் முதலில் பெறுவோம்.

PAN MCMILLAN ஷூபேந்திராவின் புத்தகம் 'வாரியர் க்வீன் ஆஃப் சிவகங்கா'. இளவரசியில் இருந்து மகாராணியாக ஆன கதை

வேலு நாச்சியாரின் பெற்றோர், ராமநாதபுரம் ராஜ்ஜியத்தின் ஆட்சியாளர்கள்.

1730 இல் பிறந்த தங்கள் ஒரே குழந்தையான வேலுவுக்கு அவர்கள் குதிரை சவாரி, வில்வித்தை, வளரி மற்றும் சிலம்பம் போன்ற தற்காப்பு கலைகளில் பயிற்சி அளித்தனர்.

ஆங்கிலம், பிரெஞ்சு மற்றும் உருது உட்பட பல மொழிகளில் அவருக்கு ஞானம் இருந்தது. வேலுநாச்சியாருக்கு 16 வயதான போது சிவகங்கை இளவரசருடன் அவருக்கு திருமணம் நடந்தது.

இந்த தம்பதியர் 1750 முதல் 1772 வரை அதாவது இருபதாண்டுகளுக்கும் மேலாக சிவகங்கையை ஆட்சி செய்தனர்.

கணவரின் கொலை மற்றும் ஹைதர் அலியுடன் சந்திப்பு

1772-ஆம் ஆண்டு ஆற்காடு நவாப், ஆங்கிலேயர்களுடன் சேர்ந்து சிவகங்கையைத் தாக்கி 'காளையார் கோவில் போரில்' வேலு நாச்சியாரின் கணவரைக் கொன்றார்.

தாக்குதலின் போது ராணி வேலு நாச்சியாரும் அவரது மகளும் அருகில் உள்ள கோவிலில் இருந்ததால் உயிர் தப்பினர். வீரத்துடன் கூடவே விசுவாசமும் நிறைந்த மருது சகோதரர்களான பெரிய மருது மற்றும் சின்ன மருது ஆகிய இருவரும் அவர்களை அங்கிருந்து மீட்டு பாதுகாப்பாக அழைத்துச் சென்றனர். வேலு நாச்சியாரால் தன் கணவரின் உடலைக் கூட பார்க்க முடியவில்லை.

GOSHAIN காடுகளிலும் கிராமங்களிலும் ஆதரவற்று அலைந்து திரிந்தார் ராணி வேலு நாச்சியார்.

பதினெட்டாம் மற்றும் பத்தொன்பதாம் நூற்றாண்டின் ராணுவ வரலாற்றில் நிபுணரான ஷூபேந்திரா, ”வேலு நாச்சியார் பாதுகாப்பாக அங்கிருந்து தப்பிச்செல்ல ஏதுவாக, ராணியின் நம்பிக்கைக்குரிய மெய்க்காப்பாளர் உடையாள் மற்றும் பிற பெண் போராளிகள் அங்கேயே தங்கிவிட்டனர்,” என்று எழுதுகிறார்.

நவாபின் ஆட்கள் உடையாளை பிடித்தனர். அவரை துன்புறுத்திய போதிலும் ராணியின் இருப்பிடத்தை அவர் கூறவேவில்லை. இதனால், அவரது தலை துண்டிக்கப்பட்டது.

காடுகளிலும் கிராமங்களிலும் ஆதரவற்று அலைந்து திரிந்த ராணி வேலு நாச்சியார், சிவகங்கையை ஆங்கிலேயர்களிடம் இருந்து மீட்க ஆதரவாளர்களும் உதவி செய்பவர்களும் தேவை என்பதை உணர்ந்தார்.

மருது சகோதரர்கள் விசுவாசிகளின் படையை உருவாக்கத் தொடங்கினர். ஆனால் ஆங்கிலேயர்களை எதிர்கொள்ள அது போதுமானதாக இருக்கவில்லை.

மைசூர் மன்னர் ஹைதர் அலிக்கு, ஆங்கிலேயர்களுடனோ அல்லது ஆற்காடு நவாபுடனோ நல்லுறவு இருக்கவில்லை. அதனால் ராணி வேலுநாச்சியார் அவரின் உதவியைப் பெற முடிவு செய்து மைசூர் வரை ஆபத்தான பயணத்தை மேற்கொண்டார்.

சிவகங்கையிலிருந்து 100 கிலோமீட்டர் தொலைவில் உள்ள திண்டுக்கல்லில் ஹைதர் அலியைச் சந்தித்தார் வேலு நாச்சியார். அவர் ஹைதர் அலியிடம் உருது மொழியில் பேசி தன்னுடைய தைரியத்தாலும் உறுதியாலும் அவரைக் கவர்ந்தார்.

வேலுநாச்சியாரை திண்டுக்கல் கோட்டையில் தங்கும்படி ஹைதர் அலி கேட்டுக்கொண்டார். அங்கு ராணி போல் அவருக்கு மதிப்பு அளிக்கப்பட்டது. நட்பின் அடையாளமாக ஹைதர் அலி தனது அரண்மனைக்குள் வேலுநாச்சியாருக்காக ஒரு கோவிலையும் கட்டினார்.

திருச்சி கோட்டை முற்றுகை

வேலு நாச்சியாருக்கும் ஹைதர் அலிக்கும் இடையிலான கூட்டணி பரஸ்பர தேவையால் பிறந்தது என்று வரலாற்றாசிரியர் ஆர். மணிகண்டன் குறிப்பிடுகிறார்.

தனது ராஜ்ஜியத்தை மீட்டெடுக்க வேலுநாச்சியாருக்கு ராணுவ உதவி தேவைப்பட்டது. அதேநேரத்தில், அந்தப் பிராந்தியத்தில் பிரிட்டிஷ் காலனித்துவ சக்திக்கு சவால் விடுவதற்கான வாய்ப்பாக ஹைதர் அலி அதைக் கருதினார்.

ஆங்கிலேயர்களுக்கு எதிரான வேலுநாச்சியாரின் போரில் கூட்டாளியாக மாற ஹைதர் அலி தீர்மானித்தார். அவர் வேலுநாச்சியாருக்கு மாதாந்திர உதவித்தொகையாக 400 பவுண்டுகள் மற்றும் ஆயுதங்களையும் கூடவே சையத் கர்க்கியின் தலைமையின் கீழ் 5,000 காலாட்படை மற்றும் குதிரைப்படையின் ஆதரவையும் வழங்கினார்.

"ராணி வேலு நாச்சியார், இந்தப் படையின் உதவியுடன் சிவகங்கையின் பல்வேறு பகுதிகளை கைப்பற்றத் தொடங்கினார். ஆங்கிலேயர்களின் கட்டுப்பாட்டில் இருந்த திருச்சிராப்பள்ளி கோட்டையை 1781-இல் அவர் அடைந்தார்," என்று ஷூபேந்திரா எழுதுகிறார்.

"ஆங்கிலேயர்களுக்கு கூடுதல் ராணுவ உதவி கிடைக்காமல் ஹைதர் அலி தடுத்தார். ஆனால் ராணி வேலுநாச்சியாருக்கு கோட்டைக்குள் நுழைய வழி இருக்கவில்லை. உடையாளின் தியாகத்தின் நினைவாக, ராணி வேலுநாச்சியார் அவர் பெயரில் ஒரு மகளிர் படையை உருவாக்கினார். இந்த படையின் தளபதி குயிலி, கோட்டைக் கதவுகளைத் திறக்க ஒரு திட்டத்தை முன்வைத்தார்." என்கிறார் அவர்.

"விஜயதசமி பண்டிகைக்கு இன்னும் சில நாட்களே உள்ளன. அருகில் உள்ள ஊர் பெண்கள் அனைவரும் கோவிலுக்கு செல்வார்கள். அவர்களுடன் கலந்து நாங்களும் உள்ளே செல்கிறோம். நான் ஆயுதங்களை மறைத்து வைத்தபடி உடையாள் படையின் சிறிய பிரிவுக்கு தலைமையேற்று கோட்டைக்குள் நுழைவேன். பிறகு நாங்கள் கோட்டையின் கதவை உங்களுக்காக திறந்துவிடுகிறோம் என்று குயிலி சொன்னார்.” என்று அவர் குறிப்பிடுகிறார்.

ராணிவேலுவின் முகத்தில் புன்னகை பரவியது.

"குயிலி, நீ எப்பொழுதும் ஏதோ ஒரு வழியை கண்டுபிடித்து விடுகிறாய். நீ உடையாளுக்கு பெருமை சேர்த்திருக்கிறாய் என்று வேலு நாச்சியார் கூறினார்."

HISTORY LUST உடையாளின் நினைவாக மகளிர் படை ஒன்றை அவருடைய பெயரில் உருவாக்கினார் போரில் குயிலி என்ன ஆனார்?

விஜயதசமி நாள் வந்ததும் குயிலியும், அவருடைய குழுவும் சுற்றுவட்டார ஊர் பெண்களுடன் உள்ளே சென்று பெரிய கோவிலில் திரண்டனர்.

சடங்கு ஆரம்பித்தது. குறித்த நேரத்தில் குயிலி “சகோதரிகளே! எழுந்திருங்கள்” என்று குரல் எழுப்பினார்.

'உடையாள்' பெண்கள் உடனே எழுந்து வாள்களை உருவி காவலுக்கு நின்றிருந்த ஆங்கிலேயர்களை கீழ்படிய வைத்து வாயிலை நோக்கி நகர்ந்தனர்.

வாயிலில் வைக்கப்பட்டிருந்த தீ பந்தத்தை எடுத்து தங்களுக்கு தாங்களே தீ வைத்துக்கொண்டு, வீரர்களைப் பிடித்தவாறு வெடிமருந்து கிடங்கிற்குள் நுழைந்தார்கள்.

திடீரென கோட்டையில் இருந்து பெரிய வெடிச் சத்தம் கேட்டது. சில நிமிடங்களில் கோட்டையின் கதவுகள் திறக்கப்பட்டன. இரண்டு 'உடையாள்' பெண்கள் குதிரைகளில் ஏறி ராணி வேலுநாச்சியாரின் படை மறைந்திருந்த இடத்தை அடைந்தனர்.

"ராணி! கதவுகள் திறந்திருக்கின்றன. பிரிட்டிஷ் வெடிமருந்து கிடங்கு தகர்க்கப்பட்டுவிட்டது. தாக்குவதற்கு இதுவே சரியான நேரம்,” என்று ஒரு பெண் வேலுநாச்சியாரிடம் சொன்னாள்.

"அது சரி, என் மகள் குயிலி எங்கே?" என்று வேலு நாச்சியார் கேட்டார்.

'உடையாள்' பெண்கள் கண்களைத் தாழ்த்தினர்.

"எங்கள் தளபதி பிரிட்டிஷ் வெடிமருந்துகளை அழிக்க உயிர் தியாகம் செய்துவிட்டார்," என்று அவர்கள் பதில் அளித்தனர்.

குதிரையில் அமர்ந்திருந்த ராணி வேலு நாச்சியார் இந்த செய்தியைக் கேட்டதும் உறைந்து போனார். அப்போது சையத் கர்க்கி அவரிடம், "அவரின் தியாகத்தை நாம் வீணடிக்க முடியாது. இப்போது தாக்குவதற்கான நேரம் வந்துவிட்டது. உங்கள் உத்தரவுக்காக காத்திருக்கிறோம்" என்று கூறினார்.

ஆங்கிலேயரை வென்ற இந்தியாவின் முதல் ராணி

ராணி வேலுநாச்சியார் மனதை திடப்படுத்திக் கொண்டு தாக்குதலுக்கு உத்தரவிட்டார். கோட்டையின் உள்ளே கர்னல் வில்லியம்ஸ் ஃப்ளேட்டர்டன் தலைமையிலான பிரிட்டிஷ் ராணுவம், பொருட்கள் மற்றும் வெடிமருந்துகள் பற்றாக்குறையை எதிர்கொண்டது.

1781 ஆகஸ்ட் மாதம் வேலு நாச்சியார் மற்றும் ஹைதர் அலியின் கூட்டுப் படைகள் இறுதியாக கோட்டையைக் கைப்பற்றியதாக எழுத்தாளர் சுரேஷ் குமார் குறிப்பிடுகிறார்.

முதல் இந்திய சுதந்திரப் போருக்கு 77 ஆண்டுகளுக்கு முன்பே, ஆங்கிலேய ஆதிக்கத்தை எதிர்த்து போரில் வெற்றி பெற்ற இந்தியாவின் முதல் ராணி என்ற பெருமையை வேலு நாச்சியார் இதன் மூலம் பெற்றார்.

அடுத்த 10 ஆண்டுகள் சிவகங்கையை ஆண்ட அவர் தனது மகள் வெள்ளச்சியிடம் ராஜ்ஜியத்தை ஒப்படைத்தார்.

வேலு நாச்சியார், எதிரிகளின் பலவீனங்களைப் பயன்படுத்திக் கொள்வதில் வல்லவராக இருந்தார் என்று வரலாற்று ஆய்வாளர் மணிகண்டன் கூறுகிறார். ஹைதர் அலி மற்றும் திப்பு சுல்தானுடன் கூட்டு சேர்ந்து பிராந்தியத்தில் பிரிட்டிஷ் காலனித்துவ சக்திக்கு சவால் விட்டது அவரது உத்திக்கு ஒரு எடுத்துக்காட்டு.

வேலுநாச்சியார் ஒரு உக்கிரமான போர் வீரராக புகழ் பெற்றிருந்தாலும் தனது குடிமக்களிடம் அவர் அளவுகடந்த அன்பு கொண்டிருந்தார்.

அவர் தனது மக்களை நேசித்த ஒரு நேர்மையான மற்றும் நியாயமான ஆட்சியாளர் என்று வரலாற்றாசிரியர் வி.பத்மாவதி குறிப்பிடுகிறார்.

ஆளும் வர்க்கத்தால் துன்புறுத்தப்பட்ட தலித்துகளுக்கு அடைக்கலம் கொடுக்க அவர் எடுத்த முடிவு அவரது இரக்க குணத்திற்கு ஒரு எடுத்துக்காட்டு.

"பிறப்பிலேயே அவர் ஒரு நாயகி" என்கிறார் ஆர்.மணிகண்டன்.

போருக்குப் பிறகு என்ன நடந்தது?

வெற்றிக்குப் பிறகு வேலு நாச்சியார் ஒரு தசாப்தம் ஆட்சி செய்தார். இக்கட்டான காலத்தில் உறுதுணையாக இருந்த தனது தோழர்களுக்கு ராஜ்ஜியத்தில் முக்கிய பதவிகளை வழங்கினார். வேலு நாச்சியார் ஹைதர் அலியின் வரம்பற்ற உதவியை கெளரவிக்கும் விதமாக சார்கானியில் ஒரு மசூதியைக் கட்டினார்.

ஆங்கிலேயர்களுக்கு எதிரான இரண்டாம் மைசூர் போரில் வேலு நாச்சியார் ஹைதர் அலியை ஆதரித்து அவருக்கு உதவியாக தனது ராணுவத்தை அனுப்பியதாக ஜே.ஹெச்.ரைஸ் 'தி மைசூர் ஸ்டேட் கெஃசட்டியர்' இதழில் எழுதியுள்ளார்.

ஹைதர் அலியின் மரணத்திற்குப் பிறகு வேலுநாச்சியார் அவரது மகன் திப்பு சுல்தானுடன் நட்புறவைப் பேணி, அவரை ஒரு சகோதரனைப் போல நேசித்தார். வேலு நாச்சியார் திப்பு சுல்தானுக்கு ஒரு சிங்கத்தை அன்பளிப்பாக அனுப்பினார்.

ஹைதர் அலி மற்றும் திப்பு சுல்தான் குறித்த தனது புத்தகத்தில் முஹிப்புல் ஹசன், ”படையை வலுப்படுத்த திப்பு சுல்தான் ஆயுதங்களையும் வெடிபொருட்களையும் வேலு நாச்சியாருக்கு கொடுத்தார்,” என்று எழுதியுள்ளார்.

திப்பு சுல்தான் வேலு நாச்சியாருக்கு ஒரு வாளை அனுப்பினார். அதை அவர் பல போர்களில் பயன்படுத்தினார்.

வேலு நாச்சியாரின் மகள் வெள்ளச்சி 1790 முதல் 1793 வரை ஆட்சி செய்தார். வேலு நாச்சியார் 1796 ஆம் ஆண்டு சிவகங்கையில் காலமானார்.

WIKIMEDIA COMMONS தமிழ் கலாச்சாரத்தில் வேலு நாச்சியார் ’வீர மங்கை’ என்று அழைக்கப்படுகிறார் என்று ஹம்சத்வனி அழகர்சாமி எழுதுகிறார்

தமிழ் கலாசாரத்தில் வேலு நாச்சியார் ’வீர மங்கை’ என்று அழைக்கப்படுகிறார் என்று ஹம்சத்வனி அழகர்சாமி எழுதுகிறார்.

2008 ஆம் ஆண்டில் அவரது நினைவாக ஒரு தபால்தலை வெளியிடப்பட்டது. 2014 ஆம் ஆண்டு சிவகங்கையில் வீர மங்கை வேலு நாச்சியார் நினைவிடத்தை அப்போதைய தமிழக முதலமைச்சர் ஜெயலலிதா திறந்து வைத்தார். ராணியின் 6 அடி வெண்கலச் சிலையும் அங்கு நிறுவப்பட்டது.

ஹைதர் அலி மற்றும் திப்பு சுல்தான் ஆகியோரின் வீரத்தை போற்றும் வகையில் ஜெயலலிதா ஆட்சியில், மணி மண்டபம் கட்டும் பணி தொடங்கப்பட்டது.

இந்த நினைவுச்சின்னம் கடந்த 5 ஆண்டுகளாக திண்டுக்கல் நகரில் ஒரு பிரபல சுற்றுலா மையமாக இருந்து வருகிறது. இதே திண்டுக்கல்லில்தான் ஹைதர் அலிக்கும் வேலு நாச்சியாரும் இடையிலான நீண்டகால நட்பு துளிர் விட்டது.

- இது, பிபிசிக்காக கலெக்டிவ் நியூஸ்ரூம் வெளியீடு.

(சமூக ஊடகங்களில் பிபிசி தமிழ் ஃபேஸ்புக், இன்ஸ்டாகிராம், எக்ஸ் (டிவிட்டர்) மற்றும் யூட்யூப் பக்கங்கள் மூலம் எங்களுடன் இணைந்திருங்கள்.)

© Copyright @2024 LIDEA. All Rights Reserved.