1965-ஆம் ஆண்டில் இந்தியாவுக்கும் பாகிஸ்தானுக்கும் இடையே 22 நாட்கள் நடந்த போரில் ஒரு நிச்சயமான முடிவு ஏற்படவில்லை.
இந்தியாவின் கை நிச்சயமாக மேலோங்கி இருந்தது. ஆனால் பாகிஸ்தானிடம் எந்த அளவிற்கு ஆயுதங்கள் பற்றாக்குறை உள்ளது என்ற ரகசிய தகவல் இந்தியாவிடம் இல்லை.
உண்மை என்னவென்றால் போர் நிறுத்தம் அறிவிக்கப்பட்ட செப்டம்பர் 22-ஆம் தேதி பாகிஸ்தானிடம் ஏறக்குறைய எல்லா ஆயுதங்களும் தீர்ந்துபோயிருந்தன.
பாகிஸ்தானுக்கு ஆயுதம் வழங்க அமெரிக்கா தடை விதித்திருந்ததால் ஆயுதங்கள் மீண்டும் சப்ளை செய்யப்பட எந்த வாய்ப்பும் இருக்கவில்லை.
முன்னாள் ரா தலைவர் சங்கரன் நாயர், 'இன்சைட் ஐபி அண்ட் ரா: தி ரோலிங் ஸ்டோன் தட் கேதர்ட் மாஸ்' (Inside IB and RAW: The Rolling Stone that Gathered Moss) என்ற புத்தகத்தில், ”அப்போதைய ராணுவ தளபதி ஜெனரல் ஜே.என்.சௌத்ரி, பாதுகாப்பு அமைச்சர் யஷ்வந்த் ராவ் சவானிடம் அறிக்கை சமர்ப்பித்தார். "பாகிஸ்தானுக்கு எதிராக ராணுவம் ஒரு உறுதியான வெற்றியை பெறமுடியவில்லை. எங்களிடம் துல்லியமான உளவுத் தகவல்கள் இருக்கவில்லை. இதற்குக் காரணம் இந்தத் தகவல்களைச் சேகரிக்கும் பொறுப்பு திறமையற்ற ஐ.பி. உளவாளிகளுக்கு கொடுக்கப்பட்டிருந்தது’ என்று சொன்னார்,” என்று எழுதியுள்ளார்.
இந்த குறைபாட்டை களையும் பொருட்டு இந்தியா ஒரு புதிய உளவுத்துறை நிறுவனமான ஆராய்ச்சி மற்றும் பகுப்பாய்வு பிரிவு (RAW) 'ரா'வை நிறுவ முடிவு செய்தது. நாட்டிற்கு வெளியே உளவுத்தகவல்களை சேகரிப்பது இதன் பொறுப்பாகும்.
'ரா' அமைப்பு 1968 செப்டம்பர் 21 ஆம் தேதி நிறுவப்பட்டது. ராமேஷ்வர் நாத் காவ் அதன் முதல் தலைவராக நியமிக்கப்பட்டார். சங்கரன் நாயர் துணை தலைவராக ஆக்கப்பட்டார்.
இவர்கள் இருவரைத் தவிர 250 பேர் புலனாய்வுப் பிரிவில் இருந்து 'ரா' பிரிவுக்கு மாற்றப்பட்டனர்.
1971-க்குப் பிறகு ராம்நாத் காவ், கல்லூரிகள் மற்றும் பல்கலைக் கழகங்களில் இருந்து நேரடியாக ரா ஏஜெண்டுகளைத் தேர்ந்தெடுக்கும் வழக்கத்தைத் தொடங்கினார்.
ராவில் பணிபுரிந்த பலரின் உறவினர்கள் மற்றும் நண்பர்களுக்கு அந்த அமைப்பில் வேலை கிடைத்ததன. இதன் விளைவாக அது ‘உறவினர்கள் மற்றும் கூட்டாளிகள் நலச் சங்கம்’ என்று நகைச்சுவையாக அழைக்கப்பட்டது.
ஆனால், 1973-ஆம் ஆண்டுக்குப் பிறகு இந்த மரபு மாறியது. நேரடியாக பணியமர்த்தப்பட்டவர்கள் கடுமையான போட்டியை எதிர்கொண்டனர் மற்றும் பல்வேறு கடுமையான தேர்வுகளை அவர்கள் எதிர்கொள்ள வேண்டியிருந்தது.
“முதல் டெஸ்ட் ஒரு உளவியல் சோதனை. வேட்பாளர்கள் அதிகாலை 3 மணிக்கு ஓரிடத்திற்கு வருமாறு கேட்டுக் கொள்ளப்பட்டனர். அவர்கள் அங்கு சென்றவுடன் அவர்களுக்கு அப்ஜெக்டிவ் டெஸ்ட் (multiple choice questions) நடத்தப்பட்டது. தேர்வில் தேர்ச்சி பெற்றவர்கள் இணைச் செயலாளரால் நடத்தப்பட்ட நேர்காணலுக்கு அழைக்கப்பட்டனர்," என்று நிதின் கோகலே தனது ‘ஆர்என் காவ், ஜென்டில்மேன் ஸ்பைமாஸ்டர்’ புத்தகத்தில் எழுதுகிறார்.
1973 இல் RAWக்கு தேர்ந்தெடுக்கப்பட்டு கூடுதல் செயலாளராக ஓய்வு பெற்ற ஜெய்தேவ் ரானடே “அடுத்த சுற்று நேர்காணலை மூத்த RAW அதிகாரிகள் என்.என். சந்தூக் மற்றும் சங்கரன் நாயர் நடத்தினர். அதன் பிறகு வெளியுறவுச் செயலாளர், ரா தலைவர் ஆர்.என். காவ் மற்றும் ஒரு உளவியலாளர் உட்பட ஆறு பேர் கொண்ட தேர்வுக் குழுவை நாங்கள் எதிர்கொண்டோம். எனது நேர்காணல் 45 நிமிடங்கள் நீடித்தது,” என்று குறிப்பிடுகிறார்.
இரண்டு மாதங்களுக்குப் பிறகு அவர் 'ரா' அமைப்புக்கு தேர்ந்தெடுக்கப்பட்டதாக ரானடேவுக்குத் தெரிவிக்கப்பட்டது. அவருடன் பிரதாப் ஹெப்ளிகர், சக்ரு சின்ஹா மற்றும் பிதான் ராவல் ஆகிய 3 பேரும் தேர்வு செய்யப்பட்டனர்.
“அதன் பிறகு, 1985 மற்றும் 1990-க்கு இடையில் மேலும் சிலர் இந்த வழியில் பணியமர்த்தப்பட்டனர். இது சிறப்பு சேவை உருவாக்கத்திற்கு வழிவகுத்தது. பின்னர் அறியப்படாத காரணங்களால் இந்த தேர்வு முறை நிறுத்தப்பட்டது. இப்போது 95 சதவிகிதத்திற்கும் அதிகமானவர்கள் இந்தியக் காவல் சேவையிலிருந்து தேர்ந்தெடுக்கப்படுகின்றனர். சிலர் சுங்கம் மற்றும் வருமான வரிச் சேவைகளில் இருந்து பொருளாதார நுண்ணறிவுப் பணிகளைக் கவனிக்க இங்கு சேர்க்கப்படுகிறார்கள்,” என்று 'ரா' சிறப்பு செயலாளராக இருந்து ஓய்வு பெற்ற ராணா பானர்ஜி குறிப்பிட்டார்.
இந்த தேர்வு செயல்முறை 'ரா'வின் சில பிரிவுகளில் விமர்சிக்கப்பட்டுள்ளது.
“ஒரு நபர் காவல் துறையில் அதிகாரியாக ஆவதற்குள் அவருக்கு சராசரியாக 27 வயது இருக்கும். மூன்று வருடங்களுக்குப் பிறகு 'ரா'வுக்கு வந்தால், அவருக்கு 30 அல்லது அதற்கு மேற்பட்ட வயது இருக்கும். இந்த வயதில் ஒரு புதிய வேலைக்கு தன்னை மாற்றிக் கொள்வது மிகவும் கடினம். இந்த நேரத்தில் அவர் அதிக ரிஸ்க் எடுக்கும் நிலையில் இருக்கமாட்டார்,” என்று முன்னாள் RAW தலைவர் விக்ரம் சூட் தனது (தி அன்எண்டிங் கேம்' (The Unending Game) என்ற புத்தகத்தில் எழுதுகிறார்.
“உளவு அமைப்புகளுக்கு போலீஸ் சேவையில் இருந்து ஆட்களை எடுப்பது இப்போது அவ்வளவு பயனுள்ளதாக இல்லை. இங்கு மொழியியல் திறன்கள் மற்றும் தகவல்களை சேகரிக்கும் கலை ஆகியவை மிகவும் முக்கியம். இதற்காக காவல்துறையினருக்கு பயிற்சி அளிக்கப்படுவதில்லை. இந்த அமைப்பில் உள்ளவர்கள் பொருளாதாரம், இணையம், அறிவியல் மற்றும் செயல் உத்தி ஆகிய துறைகளில் நிபுணர்களாக இருக்க வேண்டும். இவை ஒரு ஐபிஎஸ் அதிகாரியிடம் இருக்காது,” என்று அவர் குறிப்பிடுகிறார்.
தேர்ந்தெடுக்கப்பட்ட நபர்களுக்கு புலனாய்வுத் தகவல்களைப் பெற அடிப்படைப் பயிற்சி அளிக்கப்படுகிறது. அவர்கள் ஒரு வெளிநாட்டு மொழியில் புலமை பெற்றவர்களாக ஆக்கப்படுகிறார்கள்.
அடிப்படைப் பயிற்சிக்குப் பிறகு, அவர்கள் புலனாய்வுப் பணியகத்தில் பணியமர்த்தப்படுகிறார்கள். அங்கு அவர்களுக்கு கடுமையான குளிரில் எவ்வாறு வேலை செய்வது என்பது கற்பிக்கப்படுகிறது. எப்படி ஊடுருவுவது, பிடிபடாமல் இருப்பது எப்படி, கேள்விகளுக்கு எவ்வாறு பதிலளிப்பது மற்றும் புதிய தொடர்புகளை உருவாக்குவது எப்படி என்பதும் சொல்லித் தரப்படுகிறது.
களத்திற்குச் செல்வதற்கு முன், அவர்களுக்கு ‘கிராவ்மகா’வில் தற்காப்புப் பயிற்சி அளிக்கப்படுகிறது. இது ஒரு வகையான இஸ்ரேலிய தற்காப்புக் கலையாகும். இதில் சண்டையிடும் எதிராளியை வெற்றி கொள்ள பாரம்பரியமான தந்திரோபாயங்கள் கற்பிக்கப்படுகின்றன.
“வெளிநாட்டிற்குச் செல்வதற்கு முன் அவர்களுக்கு இதுபோன்ற விஷயங்கள் கற்பிக்கப்படுகின்றன. அது பின்னர் அவர்களுக்கு பயனுள்ளதாக இருக்கும். ஒரு காலத்தில் 'டெட் லெட்டர் பாக்ஸ்' என்ற பேச்சு இருந்தது. நீங்கள் ஒரு மரத்தின் அடிப்பகுதியில் காகிதத்தை வைப்பீர்கள். மற்றவர்கள் அங்கிருந்து எடுத்துச் செல்வார்கள். வைக்கும் மற்றும் எடுக்கும் செயல்பாட்டில் அடையாளங்கள் வைக்கப்பட வேண்டும். குறியீட்டு மொழியை எழுதுவதும் கற்பிக்கப்படுகிறது," என ராணா பானர்ஜி விளக்குகிறார்.
உலக நாடுகள் அனைத்தும் வெளிநாட்டில் உள்ள தங்கள் தூதரகங்களை உளவாளிகளின் தளமாக பயன்படுத்துகின்றன.
வெளிநாடுகளில் உள்ள இந்திய தூதரகங்களிலும் ரா ஏஜெண்டுகள் அடிக்கடி பணியமர்த்தப்படுகின்றனர். பல சமயங்களில் போலியான பெயர்களில் அவர்கள் அனுப்பப்படுகின்றனர்.
“இதற்குப் பின்னால் உள்ள காரணம் அவர்களின் உண்மையான பெயர்கள் சிவில் சர்வீசஸ் பட்டியலில் இருப்பதுதான். ஒருமுறை 'ரா'வில் பணிபுரிந்த விக்ரம் சிங், விஷால் பண்டிட் என்ற போலி பெயரில் மாஸ்கோ செல்ல வேண்டியிருந்தது. அவரது குடும்ப உறுப்பினர்களும் தங்கள் பெயர்களை மாற்ற வேண்டி இருந்தது. ஒரு வெளிநாட்டு பணியின்போது அவர்களுக்கு குழந்தை பிறந்தால் குழந்தையின் குடும்பப் பெயரும் போலியாக வைக்கப்படுகிறது. அது அவர்களது வாழ்நாள் முழுவதும் கூடவே இருக்கும்,” என்று புலனாய்வு பத்திரிக்கையாளர் யதீஷ் யாதவ் தனது 'ரா எ ஹிஸ்டரி ஆஃப் இந்தியா'ஸ் கோவர்ட் ஆபரேஷன்ஸ்' என்ற புத்தகத்தில் எழுதுகிறார்.
ரா முன்னாள் தலைவர் அமர்ஜித் சிங் துலத் ஒரு சுவாரஸ்யமான கதையைச் சொல்கிறார், “எனக்கு ஒரு காஷ்மீரி நண்பர் இருக்கிறார். அவர் பெயர் ஹஷிம் குரேஷி. அவர் என்னை ஏதோ ஒரு வெளிநாட்டில் சந்தித்தார். நாங்கள் கைகுலுக்கியபோது என் பெயர் துலத் என்றேன். அது பரவாயில்லை, தயவுசெய்து உங்கள் உண்மையான பெயரைச் சொல்லுங்கள் என்றார். நான் சிரித்துக்கொண்டே எங்கிருந்து கொண்டுவருவது? இதுதான் என் உண்மையான பெயர் என்று சொன்னேன். உண்மையான பெயரைச் சொன்னது நீங்கள் ஒருவர்தான் என்று அவர் கூறினார்,” என்று குறிப்பிட்டார்.
இதையெல்லாம் மீறி அடையாளம் காணப்படும் பயம் எப்போதும் இருந்து கொண்டே இருக்கிறது. தொழில்முறை உளவாளிகள் மிக விரைவாக அடையாளம் காணப்படுகிறார்கள்.
“இந்தியாவுக்கும் பாகிஸ்தானுக்கும் இடையே ஒரு தூதாண்மை நெறிமுறை உள்ளது. உளவுத்தொழிலில் உள்ளவர்களின் பெயர்கள் பரஸ்பரம் அனுப்பப்படும். அந்த நாட்டிற்கு முன்கூட்டியே பெயர்கள் தெரிவிக்கப்படும். ஒருவருக்கொருவர் தவறாக நடந்து கொள்வதில்லை என்று முடிவு செய்யப்பட்டது. யாராவது வரம்பு மீறி வேலை செய்தால், அவர் திரும்ப அழைக்கப்படுவார்,” என்று ராணா பானர்ஜி விளக்கினார்.
“பணி நீக்கம் செய்யப்படுவோமோ என்ற பயம் எப்போதும் உள்ளது. யாரேனும் மூன்று வருட போஸ்டிங்கில் போனால் பிள்ளைகளின் படிப்புக்கு அவர் ஏற்பாடு செய்கிறார். ஆனால் ஆறு மாதம் கழித்து நாட்டை விட்டு வெளியேறச் சொன்னால் சிரமமான சூழல் உருவாகிவிடும்” என்று அவர் மேலும் கூறினார்.
'ரா' மற்றும் ஐஎஸ்ஐ இன் ஒப்பீடுஐஎஸ்ஐ பாகிஸ்தானின் உளவு அமைப்பாகும். எனவே 'ரா'வை அதனுடன் ஒப்பிடுவது இயற்கையான ஒன்றே.
“இரண்டு அமைப்புகளையும் ஒப்பிட்டுப் பார்த்தால், எந்த ஒரு கைதும் செய்ய 'ரா'வுக்கு உரிமை இல்லை. நள்ளிரவில் சென்று கதவை தட்டுவதில்லை. 'ரா' அமைப்பு நாட்டிற்குள்ளும் உளவு பார்ப்பதில்லை. அதேசமயம், ISI இதையெல்லாம் செய்கிறது. 'ரா' நாட்டின் பிரதமருக்கு பதில் சொல்ல கடமைப்பட்டுள்ளது. அதே வேளையில் ஐஎஸ்ஐ, ராணுவ தளபதியிடம் அறிக்கை சமர்ப்பிக்கிறது. ஆனால் அந்த அமைப்பு பிரதமரிடம் அறிக்கை அளிக்கிறது என்று காகிதத்தில் காட்டப்படுகிறது," என்று முன்னாள் RAW தலைவர் விக்ரம் சூட் தனது ‘The Unending Game’ என்ற புத்தகத்தில் எழுதுகிறார்.
ஐஎஸ்ஐயின் வரலாறு 'ரா'வை விட மிகவும் பழமையானது. இது 1948 இல் பிரிட்டிஷ் ராணுவத்தில் பணிபுரிந்த ஆஸ்திரேலிய அதிகாரியான மேஜர் ஜெனரல் வால்டர் ஜோசப் என்பவரால் நிறுவப்பட்டது.
“உங்கள் 'ரா' ஆட்கள் எங்களை விட புத்திசாலிகள் என்று ஐஎஸ்ஐயின் முன்னாள் தலைவர் அசத் துரானி கூறுவார். எங்கள் அமைப்புக்கு வருபவர்கள் பெரும்பாலும் ராணுவ வீரர்கள். அதிகமாக கூச்சல் எழுப்புவார்கள். ஐ.எஸ்.ஐ.யை விட நாங்கள் குறைந்தவர்கள் அல்ல என்று நானும் கருதுகிறேன். பாகிஸ்தானிலும் இதே கேள்வி என்னிடம் கேட்கப்பட்டது. நாங்கள் சிறந்தவர்கள் என்று துரானி அவர்கள் சொன்னால் நான் அதை ஏற்றுக்கொள்கிறேன் என்று பதிலளித்தேன். ஆனால் ஐஎஸ்ஐ மிகப் பெரிய ஏஜென்சி, இவ்வளவு பெரிய ஏஜென்சிக்கு நான் தலைவனாக இருந்திருந்தால் நன்றாக இருந்திருக்கும் என்றும் நான் சொன்னேன். அதைக்கேட்டு அனைவரும் சிரித்தார்கள்,” என்று ராவின் முன்னாள் தலைவர் ஏ.எஸ்.துலத் குறிப்பிட்டார்.
ரா மற்றும் ஐஎஸ்ஐ இடையேயான போட்டியில் பல கதைகள் பிரபலமானவை. “நான் 1984 முதல் 1988 வரை பாகிஸ்தானில் பணியமர்த்தப்பட்டேன். ஐஎஸ்ஐ ஆட்கள் எப்போதும் எங்களுடன் இருப்பார்கள். எங்கள் வீட்டின் முன் அவர்கள் உட்காருவது வழக்கம். அவர்களது ஷிப்ட் காலை 7:30 முதல் இரவு 8 மணி வரை இருக்கும்,” என்று ராணா பானர்ஜி நினைவு கூர்ந்தார்,
“உங்களை கண்காணிப்பவர்களிடையே உள்ள குறைகளைப் பார்த்து அதற்கேற்ப உங்கள் வேலையைச் செய்ய வேண்டும் என்று எங்களுக்குப் பயிற்சி அளிக்கப்படுகிறது. அவர்கள் ஒரு முறை என்னை பின்தொடர்ந்தனர். நான் மற்றொரு பாதையில் சென்று எனது காரை நிறுத்தினேன். என் கார் தெரியவில்லை என்று பார்த்ததும் காரை என் வீட்டை நோக்கி அவர்கள் ஓட்டினார்கள். நான் அங்கு இல்லை என்று தெரிந்தது. அவர்கள் திரும்பிச் சென்று கொண்டிருந்தபோது எதிரில் நான் என் காரில் வருவதை அவர்கள் கண்டனர். அவர்களை கிண்டல் செய்வதற்காக நான் கையை அசைத்தேன். இதைப் பார்த்து அவர்கள் வெட்கத்துடன் தலைகுனிந்தனர்,” என்று அவர் மேலும் தெரிவித்தார்.
“1960கள் மற்றும் 70களில் கான் அப்துல் கஃபர் கானின் மகன் வலி கான் நாடு கடந்து லண்டனில் வாழ்ந்து வந்தார். அவர் பாகிஸ்தானின் புதிய பிரதமராகப் பதவியேற்ற பூட்டோவின் தீவிர எதிர்ப்பாளர் ஆவார். அரசியல் மற்றும் தார்மீக ஆதரவுக்காக இந்திரா காந்திக்கு ஒரு செய்தி அனுப்ப அவர் விரும்பினார். அவரை சந்திக்கும்படி கேட்டுக் கொள்ளப்பட்டேன்,” என்று முன்னாள் 'ரா' தலைவர் சங்கரன் நாயர் தனது ‘Inside IB and RAW, The Rolling Stone that Gathered Moss’ புத்தகத்தில் எழுதுகிறார்.
“லண்டனில் உள்ள பாகிஸ்தான் தூதரகமும் அவர்களை கண்காணித்ததால் இந்த சந்திப்பு வேறொரு நாட்டில் நடக்க நேர்ந்தது. முதலில் லண்டனுக்கும், அங்கிருந்து டென்மார்க் தலைநகர் கோபன்ஹேகனுக்கு சென்றேன். நான் காலை உணவை சாப்பிட்டுக் கொண்டிருக்கும் போது, எனக்குப் பின்னால் இருந்த மேஜையில் சிலர் உருது பேசுவதைக் கேட்டேன். அந்த நபர்கள் ஐஎஸ்ஐ ஏஜெண்டுகள் என்று சந்தேகப்பட்டேன். அவர்கள் உணவை விட்டுவிட்டு என்னையும் வலிகானையும் தெருக்களில் தேட ஆரம்பித்ததும் என் சந்தேகம் உறுதியானது,” என்று அவர் குறிப்பிட்டுள்ளார்.
நாயர் உடனடியாக சந்திப்புக்கான இடத்தை மாற்றினார். வலி கானுக்கு கே.சி.தாஸின் ரஸகுல்லா டின்னை பரிசாக அளித்தார். அது அவருக்கு மிகவும் மகிழ்ச்சியைத் தந்தது.
இந்தியா திரும்பிய பிறகு பிரதமர் இந்திரா காந்தியிடம் வலிகானின் செய்தியை நாயர் வழங்கினார்.
பாகிஸ்தானில் 'ரா' உளவாளிகளின் போன்கள் எப்போதும் ஒட்டு கேட்கப்படுகின்றன. அவர்களுக்கும் அவர்களின் குடும்பத்தினருக்கும் இடையே தொலைபேசியில் நடக்கும் ஒவ்வொரு உரையாடலும் ஒட்டு கேட்கப்பட்டது.
ராணா பானர்ஜி மற்றொரு கதையைச் சொல்கிறார். “எங்களுக்கு இஸ்லாமாபாத்தில் ஒரு பணியாளர் இருந்தார். அவர் ஒரு ஆங்கிலோ-இந்திய கிறிஸ்தவர். அவருக்கு ஒரு பலவீனம் இருந்தது. அவர் மதுபானங்களை பரிமாறும் போதெல்லாம், அவற்றை பரிமாறும் முன் சிறிதளவு அவரும் அருந்துவார். அதைத் தடுக்க ’விருந்து முடிந்ததும், உங்கள் வீட்டிற்கு எடுத்துச் செல்ல நாங்கள் பாட்டில் தருகிறோம் என்று நாங்கள் கூறுவோம், ஆனால் அவர் சம்மதிக்க மாட்டார்,” என்றார்.
இதன் காரணமாக பானர்ஜி அவர் மீது ஒரு கண் வைத்திருந்தார். “ஒருமுறை அவர் வித்தியாசமான முறையில் நின்றுகொண்டு மேசைக்கு அடியில் எதையோ கால்களால் தள்ளிக்கொண்டிருந்ததை நான் பார்த்தேன். ஏதோ சிறிய தீப்பெட்டி போல இருந்ததை பார்த்தேன். உண்மையில், அவர் சாப்பாட்டு அறையில் ஒரு 'ஹியரிங் டிவைஸ்' பொருத்திக் கொண்டிருந்தார். நான் அந்த சாதனத்தை அணைத்துவிட்டேன். எதுவும் நடக்காதது போல் பார்ட்டி தொடர்ந்து நடந்தது. மறுநாள் நமது தூதர் இது குறித்து பாகிஸ்தான் வெளியுறவு அமைச்சகத்திடம் புகார் அளித்தார்.” என்று அவர் கூறினார்.
'விமர்சனம் உண்டு, பாராட்டு இல்லை'1999-ஆம் ஆண்டில் காந்தஹார் விமானக் கடத்தலுக்குப் பிறகு இந்தியா மூன்று தீவிரவாதிகளை விடுவிக்க வேண்டியிருந்த போது 'ரா' மீது பெரும் விமர்சனம் எழுந்தது. மசூத் அசார் மற்றும் முஷ்டாக் அகமது சர்கர் ஆகியோரை அப்போதைய 'ரா' தலைவர் ஏ.எஸ்.துலத், ஸ்ரீநகரில் இருந்து டெல்லிக்கு விமானத்தில் அழைத்து வந்தார். அங்கிருந்து அப்போதைய வெளியுறவு அமைச்சர் ஜஸ்வந்த் சிங் அவர்களை காந்தஹாருக்கு அழைத்துச் சென்றார்.
கடத்தப்பட்ட ஐசி-814 விமானம் அமிர்தசரஸில் இருந்து லாகூருக்கு பறக்க அனுமதிக்கப்பட்ட விதமும் நிறைய விமர்சிக்கப்பட்டது.
'ரா' உளவாளிகளின் மார்பில் பதக்கங்கள் குத்தப்படுவதில்லை. கார்கில் போரின் போது, பாகிஸ்தானில் இருந்து ஊடுருவியவர்களுக்கு எதிரான முதல் வெற்றிகரமான நடவடிக்கை, எல்லையில் நிறுத்தப்பட்டிருந்த 'ரா'வின் 80 பேரால் நடத்தப்பட்டது என்பது மிகச் சிலருக்குத் தெரியும்.
இவர்களில் சிலர் உயிருடன் திரும்பவில்லை. ஆனால் அவர்களின் பெயர்கள் வெளியிடப்படவில்லை.
“கார்கில் போருக்குப் பிறகு, இந்த போரில் தங்கள் நண்பர்களையும் தோழர்களையும் இழந்த 'ரா' அமைப்பினர் அமைதியாக நின்றனர். 'ரெஹ்மான்' என்ற குறியீட்டுப் பெயர் கொண்ட உளவாளி ஒருவர், நாட்டிற்காக உயிர் தியாகம் செய்தவர்களின் தியாகத்தை பகிரங்கமாக ஒப்புக்கொள்ளுமாறு 'ரா'வின் உயர்மட்ட அதிகாரிகளை கேட்டுக் கொண்டார், அப்போது தேசிய பாதுகாப்பு ஆலோசகரும் பிரதமரின் முதன்மை செயலாளருமான பிரஜேஷ் மிஷ்ராவிடம் இந்த முன்மொழிவு வந்தபோது, அவர் அதை எதிர்த்தார்," என்று யதீஷ் யாதவ் தனது ‘RAW A History of Covert Operations’ என்ற புத்தகத்தில் எழுதுகிறார்.
“எப்படியோ இந்தச் செய்தி அப்போதைய பிரதமர் வாஜ்பாயின் காதுகளை எட்டியது. அந்த 18 'ரா'அதிகாரிகளின் பெயர்கள் மற்றும் கார்கில் போரில் அவர்கள் செய்த சாதனைகள் பிரதமர் இல்லத்தின் மூடிய மண்டபத்தில் உரக்க வாசிக்கப்பட்டன. 'ரா' வரலாற்றில் முதன்முறையாக, இந்த வீரர்களுக்கு சிறப்பு பதக்கங்கள் வழங்கப்பட்டன. வாஜ்பாய், 'ரா' உயர் அதிகாரிகளுடன் கைகுலுக்கி, இந்த புகழ் பெற்ற நாயகர்களின் தியாகத்திற்கு தனது நன்றியைத் தெரிவித்தார். இந்த விழா குறித்து எந்த பதிவும் வைக்கப்படவில்லை. மறுநாள் செய்தித்தாள்களிலும் அது பற்றிய விவரங்கள் எதுவும் வெளியிடப்படவில்லை,” என்று யதீஷ் யாதவ் எழுதுகிறார்.
- இது, பிபிசிக்காக கலெக்டிவ் நியூஸ்ரூம் வெளியீடு.