பழிக்கு பழி.. இஸ்ரேல் பிரதமர் நெதன்யாகு உயிருக்கு ஆபத்து.. அவரது வீட்டுக்கு குறிவைத்த ட்ரோன்!
சுதர்சன் October 19, 2024 06:14 PM

ஹமாஸ் அமைப்பின் முக்கிய தலைவரான யாஹ்யா சின்வார் கொல்லப்பட்டதை தொடர்ந்து இஸ்ரேலை பழி வாங்கும் நோக்கில் அந்நாட்டு பிரதமர் நெதன்யாகுவை கொலை செய்ய ஹமாஸ் அமைப்பு திட்டமிட்டது.  அந்த வகையில், அவரது வீட்டை நோக்கி ட்ரோன் குறி வைத்து தாக்கியதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.

மேற்காசியா முழுவதும் போரால் பற்றி எரிந்து வருகிறது. காசாவில் தொடங்கிய போர் ஈரான் வரை விரிவடைந்துள்ளது. இதற்கு எல்லாம் தொடக்கப்புள்ளியாக அமைந்தது கடந்தாண்டு அக்டோபர் மாதம் 7ஆம் தேதி, இஸ்ரேல் மீது பாலஸ்தீனத்தை சேர்ந்த ஹமாஸ் அமைப்பு நடத்திய தாக்குதல்.

பதில் தாக்குதல் நடத்துகிறோம் என சொல்லி போரில் இறங்கிய இஸ்ரேல், பிரச்னையை மத்திய கிழுக்கு நாடுகள் முழுவதும் பரவ செய்துள்ளது. காசா போர் தொடங்கியதில் இருந்து பாலஸ்தீனியர்களுக்கு ஆதரவாக இஸ்ரேல் மீது சிறிய சிறிய தாக்குதலை நடத்தி வந்தது லெபனானில் இயங்கும் ஈரான் ஆதரவு இயக்கமான ஹிஸ்புல்லா. 

காசாவில் ஏற்கனவே 40,000க்கும் மேற்பட்டோரை கொன்று குவித்த இஸ்ரேல் ராணுவம், லெபனானில் தாக்குதலை தொடங்கியது. இதையடுத்து, லெபனானில் இஸ்ரேல் பாதுகாப்பு படைகள் தாக்குதலை தீவிரப்படுத்தின. அதன் தொடர்ச்சியாக, தற்போது ஈரான், இஸ்ரேல் நாடுகள் இரண்டும் நேரடியாக போரில் குதித்துள்ளது.

இப்படிப்பட்ட சூழலில், அக்டோபர் 7ஆம் தேதி நடத்தப்பட்ட தாக்குதலுக்கு மூளையாக செயல்பட்ட யாஹ்யா சின்வாரை இஸ்ரேல் பாதுகாப்பு படை கொலை செய்தது. இதனால், உச்சக்கட்ட கோபத்தில் இருக்கும் ஹமாஸ் அமைப்பு பழிக்கு பழி வாங்க துடித்தது.

அந்த வகையில், இஸ்ரேல் பிரதமர் நெதன்யாகுவை கொல்ல அவரது வீட்டுக்கு ட்ரோன் அனுப்பப்பட்டுள்ளது. லெபனானில் இருந்து சிசேரியா நகருக்கு சென்ற ட்ரோன், நெதன்யாகுவின் வீட்டை குறிவைத்ததாகக் கூறப்படுகிறது.

சிசேரியா நகரில் உள்ள ஒரு கட்டிடத்தை ட்ரோன் தாக்கியதாகவும் ஆனால், இதில் எந்த உயிர் சேதமும் நிகழவில்லை என்றும் இஸ்ரேல் ராணுவம் விளக்கம் அளித்துள்ளது. நெதன்யாகு பாதுகாப்பாக இருப்பதாக அவரது செய்தித் தொடர்பாளர் தகவல் வெளியிட்டுள்ளார்.

இதுகுறித்து அவரது செய்தித் தொடர்பாளர் விரிவாக கூறுகையில், "தாக்குதல் நடத்தப்பட்டபோது அந்த பகுதியின் அருகில் நெதன்யாகு இல்லை" என்றார். இதுதொடர்பாக இஸ்ரேல் பாதுகாப்பு படை வெளியிட்ட தகவலில், "மற்ற இரண்டு ட்ரோன்கள் தடுத்து நிறுத்தப்பட்டன. இந்த சம்பவத்தின் விளைவாக டெல் அவிவின் வடக்கே உள்ள கிளிலோட்டில் எச்சரிக்கை சைரன்கள் ஒலித்தன" என குறிப்பிடப்பட்டுள்ளது.

© Copyright @2024 LIDEA. All Rights Reserved.