CSIR CASE 2023: மத்திய அரசின் CSIR CASE தேர்வில் மோசடி? அதிகாரிகளின் குழந்தைகள் பெயர் மட்டுமே இருப்பதாகக் குற்றச்சாட்டு
க.சே.ரமணி பிரபா தேவி October 19, 2024 07:44 PM

CSIR CASE தேர்வில் நேர்முகத் தேர்வுக்குத் தகுதி பெற்ற மாணவர்களில் பெரும்பாலானோர், தற்போது CSIR நிறுவனத்தில் பணிபுரியும் அதிகாரிகளின் குழந்தைகள் மற்றும் உறவினர்கள் என்று மாணவர்கள் சிலர் பரபரப்புக் குற்றச்சாட்டுகளை முன்வைத்துள்ளனர்.

மத்திய அரசின் அறிவியல் மற்றும் தொழில்நுட்ப அமைச்சகத்தின்கீழ் சிஎஸ்ஐஆர் எனப்படும் அறிவியல் மற்றும் தொழில்துறை ஆராய்ச்சி கவுன்சில் (Council of Scientific and Industrial Research) இயங்கி வருகின்றது. இதில், Section Officer என்னும் பிரிவு அதிகாரி, Assistant Section Officer என்னும் உதவி பிரிவு அதிகாரி ஆகிய பணியிடங்களுக்கான அறிவிப்பு 2023ஆம் ஆண்டு வெளியானது. முறையே 76 மற்றும் 368 பணியிடங்களுக்கு அறிவிப்பு வெளியிடப்பட்டது.

தேர்வு எப்போது? எப்படி?

மொத்தம் 444 இடங்களுக்கு தேர்வு நடத்தப்படும் என்று அறிவிக்கப்பட்டது. தேர்வு மூன்று கட்டங்களாக நடத்தப்படும் நிலையில், முதல் கட்டமாக முதல் நிலைத் தேர்வு தாள் 1, தாள் 2 எனவும் இரண்டாவது கட்டமாக முதன்மைத் தேர்வு தாள் 1 எழுத்துத் தேர்வு நடைபெற்றது. நேர்முகத் தேர்வு வரும் அக்டோபர் 25 முதல் 29ஆம் தேதி வரை நடைபெற உள்ளது.

இந்த நிலையில், முதல்நிலைத் தேர்வில் 350-க்கு 290 மதிப்பெண்களுக்கு மேல் பெற்ற தாங்கள், 150 மதிப்பெண்கள் கொண்ட முதன்மைத் தேர்வில் 35 சதவீத மதிப்பெண்கள்கூடப் பெற முடியவில்லை என்று புகார் தெரிவித்துள்ளனர்.

ஊழியர்களின் குழந்தைகளுக்கே முன்னுரிமை?

யூபிஎஸ்சி தேர்வில் நேர்காணல் வரை தேர்ச்சி பெற்ற பல மாணவர்களாலும் CSIR CASE தேர்வில் தேர்ச்சி பெற முடியவில்லை, அதாவது 35 சதவீத மதிப்பெண்களைக் கூடப் பெற முடியவில்லை என்றும் அதேநேரத்தில், CSIR-ல் பணிபுரியும் ஊழியர்களின் குழந்தைகள் தகுதி பெற்றுள்ளதாகவும் மாணவர்கள் குற்றம் சாட்டியுள்ளனர்.

நேர்முகத் தேர்வில் தேர்ச்சி பெற்ற மாணவர்களின் குடும்பப் பெயர்களும் (Surname) CSIR வெளியிட்ட பட்டியலில் விடுபட்டுள்ளதாகவும் புகார் எழுந்துள்ளது. எனினும் இதற்கு அரசுத் தரப்பில் விளக்கம் எதுவும் அளிக்கப்படவில்லை. 

மாணவர்கள் https://www.csir.res.in/sites/default/files/2024-10/annexurei_csir_so_interview.pdf என்ற இணைப்பை க்ளிக் செய்து, பட்டியலைக் காணலாம்.

https://www.csir.res.in/sites/default/files/2023-12/Abridge%20Advt.%20-%2008.12.2023.pdf என்ற இணைப்பில் அறிவிக்கையின் முழு விவரம் வெளியிடப்பட்டுள்ளது.

முன்னதாக பூஜா கேத்கர் என்னும் பயிற்சி ஐஏஎஸ் அதிகாரி, முறைகேடாக அரசுப் பணியில் சேர்ந்தது அதிர்ச்சியை ஏற்படுத்தியது. விசாரணைக்குப் பிறகு அவரின் நியமனம் ரத்து செய்யப்பட்டது. அதேபோல நீட் தேர்வு, யுஜிசி நெட் தேர்வு உள்ளிட்ட மத்திய அரசின் பல்வேறு தேர்வுகளில் முறைகேடுகள், குளறுபடிகள் நடந்தது குறிப்பிடத்தக்கது. 

© Copyright @2024 LIDEA. All Rights Reserved.