``மத சட்டங்களால், குழந்தைத் திருமண தடுப்புச் சட்டத்தை மீற முடியாது..'' - உச்ச நீதிமன்றம்
Vikatan October 19, 2024 11:48 PM
குழந்தைத் திருமணம் தடுப்புச் சட்டத்தை எந்தவொரு தனிப்பட்ட சட்டமும் மீற முடியாது என உச்ச நீதிமன்றம் அதிரடியாகத் தெரிவித்திருக்கிறது.

இந்தியாவைப் பொறுத்தவரையில் சட்டப்படி பெண்களின் திருமண வயது 18, ஆண்களின் திருமண வயது 21. இதில், பெண்களின் வயதையும் ஆண்களின் வயதைப் போலவே 21-ஆக உயர்த்த 2021-ல் சட்ட திருத்தம் மேற்கொள்ளப்பட்டபோதும் இன்னும் அது நடைமுறைக்குக் கொண்டுவரப்படாமல் பரிசீலனையிலேயே இருக்கிறது.

குழந்தைத் திருமணம் மாதிரி படம்

அதனால், தற்போது நடைமுறையில் இருக்கும் குழந்தைத் திருமணம் தடுப்புச் சட்டம் (PCMA) 2006-ன்படி, பெண்ணுக்கு 18 வயதுக்குள்ளும், ஆணுக்கு 21 வயதுக்குள்ளும் திருமணம் செய்துவைப்பது தண்டனைக்குரிய குற்றமாகும். சட்டப்படி அத்தகைய திருமணம் செல்லாது. இவ்வாறான சட்டம் இருந்தபோதிலும், குழந்தைத் திருமணங்கள் இந்தியாவில் நடந்தவண்ணமே இருக்கிறது.

UNICEF-ன் 2021 அறிக்கையின்படி, இந்தியாவில் ஆண்டுதோறும் 18 வயதுக்குட்பட்ட 1.5 மில்லியன் பெண்கள், குழந்தைத் திருமண பாதிப்புக்குள்ளாவதாகத் தெரிவிக்கப்பட்டிருக்கிறது. இன்றும் குழந்தைத் திருமணங்கள் தொடர்ச்சியாக நடைபெற்றுக்கொண்டிருப்பதாகத் தரவுகள் தெரிவிக்கின்றன. இவ்வாறிருக்க, குழந்தைத் திருமணங்களுக்கெதிராக நடவடிக்கை எடுப்பதை உறுதிப்படுத்துமாறு உச்ச நீதிமன்றத்தில் தாக்கல்செய்யப்பட்டிருந்த பொதுநல மனு, தலைமை நீதிபதி சந்திரசூட் மற்றும் நீதிபதிகள் ஜே பி. பர்திவாலா, மனோஜ் மிஸ்ரா ஆகியோர் அடங்கிய அமர்வில் நேற்று விசாரணைக்கு வந்தது.

உச்ச நீதிமன்றம்

அப்போது, மனுவை விசாரித்த நீதிமன்ற அமர்வு தனது தீர்ப்பில், ``எந்தவொரு மதத்தின் தனிப்பட்ட சட்டங்களும், குழந்தைத் திருமணம் தடுப்புச் சட்டத்தை மீற முடியாது. குழந்தைத் திருமணங்கள், தங்களின் துணையைத் தேர்ந்தெடுக்கும் தனிநபர் உரிமையை மீறுகிறது. அதுமட்டுமல்லாமல், வாழ்நாள் முழுவதும் உடலளவிலும், மனதளவிலும் இது பாதிப்பை ஏற்படுத்தும். மேலும், குழந்தைத் திருமணம் தடுப்புச் சட்டம் என்பது ஒரு சமூகச் சட்டம். இந்தப் பரந்த சமூகக் கட்டமைப்பில் அனைத்து தரப்பினரின் கூட்டு முயற்சியால் மட்டுமே இந்த சட்டம் வெற்றி பெரும்.

அதோடு, குற்றவாளிகளுக்குத் தண்டனை அளிக்கப்படுவதைக் காட்டிலும் குழந்தைத் திருமணங்களைத் தடுப்பதிலும், சிறார்களின் பாதுகாப்பிலும் அதிகாரிகள் முதன்மையாகக் கவனம் செலுத்த வேண்டும். ஏனெனில், குழந்தைத் திருமண குற்றவாளிகளுக்கு அளிக்கும் தண்டனை, சம்பந்தப்பட்ட குடும்பங்கள் மற்றும் சமூகங்களில் ஏற்படுத்தும் தாக்கத்தை நாங்கள் அறிவோம். அதேசமயம், குழந்தை திருமணம் செய்தவர்கள் மீது வழக்கு தொடரக்கூடாது என்று நாங்கள் சொல்வதாக இதனைத் தவறாகப் புரிந்து கொள்ளக்கூடாது.

குழந்தைத் திருமணம் (Representational Image)

வழக்கு தொடருவதைக் காட்டிலும், குழந்தைத் திருமணங்களைத் தடுப்பதில் அதிக முயற்சிகள் எடுக்க வேண்டும். இந்தச் சட்டத்தில் இருக்கும் தண்டனை விதிகள் முறையாகப் பயன்படுத்தப்படுவதை உறுதிசெய்ய, குழந்தைத் திருமணத்தால் ஏற்படும் சட்ட விளைவுகள் குறித்த பரவலான விழிப்புணர்வு மற்றும் கல்வி அவசியம்" என்று வலியுறுத்தியிருக்கிறது.

Junior Vikatan-ன் பிரத்யேக Whatsapp Group...

 

வணக்கம்,

BIG BREAKINGS முதல்... அரசியல், சமூகம், க்ரைம், சினிமா என அனைத்து ஏரியாக்களின் அசராத அப்டேட்ஸ், ஆழமான கட்டுரைகள்.

ஜூனியர் விகடன் இதழ் மற்றும் டிஜிட்டலில் கவனம் ஈர்க்கும் கட்டுரைகள் இங்கே உடனுக்குடன்... 

© Copyright @2024 LIDEA. All Rights Reserved.