"ஆளுநர் குறித்து பேச திமுகவுக்கு எந்த அருகதையும் இல்லை" : கே.பி. ராமலிங்கம் பேட்டி.
சதீஷ் குமார் October 20, 2024 12:14 AM

சேலம் மாநகர் சூரமங்கலம் இரும்பாலை சாலையில் உள்ள தனியார் மண்டபத்தில் பாஜகவில் இணைந்த 2,000க்கும் மேற்பட்டோருக்கு உறுப்பினர் அட்டை வழங்கும் விழா இன்று நடைபெற்றது. பாஜக மாநில விவசாய அணி தலைவர் பார்த்தசாரதி தலைமையில் நடைபெற்ற விழாவில், புதிய உறுப்பினர்களுக்கான அடையாள அட்டைகளை பாஜக மாநில துணைத் தலைவர் கே.பி. ராமலிங்கம் வழங்கினார். 

தொடர்ந்து விழாவில் பேசிய கே.பி.ராமலிங்கம், "ஏழை எளிய நடுத்தர மக்களுக்கான கட்சியாக பாஜக விளங்கி வருகிறது. ஒடுக்கப்பட்டவர்களுக்கான குரலாக திகழும் பாஜகவில் இணைய ஏராளமானோர் ஆர்வம் காட்டி வருகின்றனர். தமிழகத்தில் பிரதமரின் வீடு கட்டும் திட்டத்துக்காக ரூ229 கோடி மத்திய அரசு ஒதுக்கீடு செய்துள்ளது. இதில் 2.5 லட்சம் ரூபாய் வரை பெற்றுக்கொள்ளலாம்" என்று பேசினார்.

பின்னர் பாஜக மாநில துணை தலைவர் கே.பி.ராமலிங்கம் செய்தியாளர்களை சந்தித்தார். அப்போது அவர் கூறியது, "சேலம் மாநகரில் ஒரே இடத்தில் 2,116 உறுப்பினர்கள் பாஜகவில் இணைந்துள்ளனர். இதன் மூலம் உறுப்பினர் சேர்க்கையில் புதிய பரிணாமம் ஏற்பட்டுள்ளது. அடுத்த 2, 3 நாள்களுக்கு தீவிர உறுப்பினர் சேர்க்கை நடைபெறும். வரும் திங்கள்கிழமை 21 ஆம் தேதி தேசிய தலைவர் நட்டா தலைமையில் கூடி, அடுத்தகட்ட நடவடிக்கை குறித்து தில்லியில் ஆலோசிக்க உள்ளோம். தமிழகத்தில் பாஜக வலிமை பெற வேண்டிய அவசியத்தை அண்மை கால அரசியல் நிகழ்வுகள் உணர்த்தி வருகின்றன. தேச உணர்வும், தெய்வீக பற்றும்கொண்டவர்கள் ஆளும்போது தான், ஊழலற்ற நிர்வாகம் அமையும். அதனை நோக்கி, மக்களுடன் இணைந்து பாஜக பணியாற்றும்,

ஒருங்கிணைந்த சேலம் மாவட்டத்தின் வளர்ச்சிக்கு ஏற்ற வகையில், துணை முதல்வர் உதயநிதி ஸ்டாலின் பயணம் அமையும் என நம்புகிறேன். துணை முதல்வர் வருகைக்காக 30 கிலோ மீட்டர் தொலைவுக்கு கொடி கம்பங்களை திமுகவினர் நடுவது ஏற்புடையதல்ல. தெலங்கானா, ஆந்திரா மாநிலங்களை ஆண்ட முந்தைய முதல்வர்கள் நிலை என்ன ஆனது என துணை முதல்வர் உதயநிதி எண்ணிப் பார்க்க வேண்டும். ஆடம்பரமான முறையில் கொடிகளை நட்டு மக்களை அச்சுறுத்தக் கூடாது என்றார்.  

தமிழுக்கு பிரதமர் உரிய மரியாதை தருவதை உலகமே வியந்து பார்க்கிறது. தமிழ் பண்பாட்டையும், கலாசாரத்தையும் உலக நாடுகள் மத்தியில் எடுத்துச்சென்ற பெருமை பிரதமர் மோடியையே சாரும். திராவிட கட்சிகள் தான் பண்பாட்டையும், நாகரீகத்தையும் கற்றுக் கொடுத்தவர்கள் போல் பேசிவருவது வேடிக்கையானது. தமிழ்த்தாய் வாழ்த்தை பாடியவர்கள், ஒரு வரியை விட்டதற்காக, என்ன நடந்தது என யோசிக்காமல், தமிழக ஆளுநரை முதல்வர் ஸ்டாலின் விமர்சித்தது மலிவான அரசியல்.

ஆளுநர் குறித்து பேச திமுகவுக்கு எந்த அருகதையும் இல்லை, ஆளுநரின் மரபுகளை மீறிய திமுக, தற்போது நியாயம் பேசுவது சரியல்ல. பகல் வேடம் போட கூடாது. ஆளுநரை திமுக எப்படி நடத்தியது என்பதை மக்கள் ஒருபோதும் மறக்கமாட்டார்கள் என்றார்.

மேலும், பாஜக மாநில தலைவர் அண்ணாமலை டிசம்பர் மாதத்தில் தமிழகம் திரும்புவதாக தகவல் வந்துள்ளது. இதற்கு முன்பாக இடையில் ஒரு முறை வருவதாக இருந்ததை கூட ஒத்தி வைத்துவிட்டு படிப்பில் கவனம் செலுத்தினார். டிசம்பர் மாதம் வந்துவிடுவார் என கூறினார்.

© Copyright @2024 LIDEA. All Rights Reserved.