லடாக் ஆதரவாளர்கள் 15 நாள்களாக டெல்லியில் உண்ணாவிரதம்!
Top Tamil News October 21, 2024 12:48 PM

லடாக் பகுதியைச் சேர்ந்த உள்ளூர் மக்களின் மேம்பாட்டுக்காக, அரசமைப்பு ரீதியாக லடாக் மக்களுக்கு பாதுகாப்பு அளிக்கபட வேண்டுமென்ற முக்கிய கோரிக்கையை மத்திய அரசிடம் சோனம் வாங்க்சக்கும் லடாக்கைச் சேர்ந்த மக்களும் வலியுறுத்தியுள்ளனர். இதன்மூலம், அங்குள்ள மக்கள் தங்கள் நிலத்தையும், கலாசாரா அடையாளத்தையும் பாதுகாக்க முடியுமென்பதே அவர்களின் கோரிகையாக உள்ளது. இந்த கோரிக்கைக்கு லடாக் பிராந்தியத்தில் பரவலாக ஆதரவும் இருந்து வருகிறது.

இந்த நிலையில், லடாக் விவகாரத்தில் பிரதமர் உள்பட அமைச்சர்களை சந்தித்து முறையிட தஙக்ளுகு அனுமதி மறுக்கப்படுவதாக சோனம் வாங்க்சக் குற்றச்சாட்டை முன்வைத்துள்ளார். இதனைத் தொடர்ந்து, இந்தியாவின் வட எல்லையில் அமைந்துள்ள மலைப்பிரதேசமன லடாக்கின் ‘லே’ பகுதியிலிருந்து தலைநகர் புதுடெல்லிக்கு, நடைபயணமாகச் சென்றடைந்த சோனம் வாங்க்சக், கடந்த மாதம் அவரது ஆதரவாளர்களுடன் சேர்த்து கைது செய்யப்பட்டு சிறையிலடைக்கப்பட்டார், அதன்பின் விடுதலையும் செய்யப்பட்டார்.

இந்த நிலையில், தனக்கெதிரான கைது நடவடிக்கைக்கு பின், கடந்த 5-ஆம் தேதி முதல் காலவரையறையற்ற உண்ணாவிரதப் போராட்டத்தில் ஈடுபட்டுள்ளார். டெல்லி லடாக் பவனில் தனது ஆதரவாளர்கள் சுமார் 25 பேருடன் உண்ணாவிரதம் மேற்கொண்டு வரும் அவர், நாட்டின் தலைமைப் பதவியில் இருப்பவரை(பிரதமர்) சந்தித்து தங்கள் தரப்பு கோரிக்கைகளை முன்வைக்க நேரம் கேட்டுள்ளதும் குறிப்பிடத்தக்கது.

இந்திய அரசமைப்பின் 6-ஆவது பிரிவில் லடாக் இணைக்கப்பட வேண்டுமென்பதே போராடும் மக்களின் முக்கிய கோரிக்கையாக உள்ளது. அரசமைப்பின் 6-ஆவது தொகுதியில், அஸ்ஸாம், மேகாலயா, திரிபுரா, மிஸோரம் ஆகிய வடகிழக்கு மாநிலங்களில், பழங்குடியினப் பகுதிகளை நிர்வகிப்பதற்கான தன்னாட்சி அதிகாரத்தை அப்பகுதி மக்களுக்கு வழங்கும் சட்டப்பிரிவாக உள்ளது. அதன்படி, தன்னாட்சி சங்கங்கள் மூலம், (அவற்றில் சட்ட அவை, நீதிவியல், செயலாக்கத் துறை, நிதித்துறை அடங்கும்) சம்பந்தப்பட்ட பழங்குடியினப் பகுதிகளை நிர்வகிக்கும் அதிகாரம் வழங்க வழிவகை செய்கிறது.

இந்த கோரிக்கை மட்டுமல்லாது, லடாக்குக்கும் மாநில அந்தஸ்து வழங்கப்பட வேண்டும் என்ற கோரிக்கையும் அரசிடம் முன்வைக்கப்பட்டுள்ளது. (ஜம்மு-காஷ்மீருக்கு சிறப்பு அந்தஸ்து அளித்துவந்த அரசமைப்புச் சட்டத்தின் 370 மற்றும் 35 (ஏ) பிரிவுகள் ரத்து செய்யப்பட்டபின், ஜம்மு-காஷ்மீரும் லடாக்கும் இரு வேறு யூனியன் பிரதேசங்களாக அறிவிக்கப்பட்டுள்ளன). லடாக்குக்கென பொதுத்துறை பணியாளர் சேர்க்கைக்கான ஆணையம் அமைக்கவும் வலியுறுத்தி வருகின்றனர். லே மற்றும் கார்கில் மாவட்டங்களுக்கு தனி மக்களவை தொகுதிகளாக அறிவிக்க வேண்டும் உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகளும் முன் வைக்கப்பட்டுள்ளன.

இந்த நிலையில், டெல்லியில் உண்ணாவிரதமிருந்து வரும் வாங்சக் கூறியதாவது:-

மூத்த குடிமக்கள், பெண்கள், ஓய்வுபெற்ற ராணுவத்தினர் உள்பட 150 பேர், நாட்டின் ஒரு மூலையிலிருந்து புறப்பட்டு டெல்லிக்கு வந்தடைந்துள்ளனர். டெல்லி வந்ததும், அவர்கள் கைது செய்யப்பட்டுள்ளனர். அதன்பின் உண்ணாவிரதப் போராட்டத்தில் ஈடுபட வேண்டிய நிலைக்கு தள்ளப்பட்டுள்ளனர். ஜனநாயகத்துக்கு சோகமான தருணம் இது. இவற்றுக்கெல்லாம் மத்தியில், அரசு செவிசாய்க்கக்கூட நேரம் ஒதுக்கவில்லை. இந்த நிலையில், இதை ஜனநாயகமென எப்படி அழைப்பது? தேர்தல்கள் மட்டுமே ஒரு நாட்டை ஜனநாயகமாக மாற்றிவிடாது. நீங்கள் மக்களுக்கும் மக்களின் குரலுக்கும் மதிப்பளிக்க வேண்டும்.

தேசப்பற்றாளர்கள் ’தேச விரோதிகள்’ என சமூக வலைதளங்களில் அழைக்கப்படுவது துரதிருஷ்டவசமானது. சமூக வலைதளப் பயன்பாட்டாளர்கள் தேச விரோதிகளை தேசப்பற்றாளர்களாக மாற்ற உழைக்க வேண்டுமே தவிர இப்படி நடந்துகொள்ளக்கூடாது. இவ்வாறு அவர் கூறினார்.

இந்த நிலையில், சோனம் வாங்சக்குக்கு ஆதரவாக அனைத்து இந்திய மாணவர்கள் கூட்டமைப்பை(ஏஐஎஸ்ஏ) சேர்ந்த மாணவர்கள் ஏராளமானோர் அணிதிரண்டு, டெல்லியில் உள்ள லடாக் பவன் வெளியே போராட்டம் நடத்தியதால் பெரும் பரபரப்பு ஏற்பட்டது. இதையடுத்து மாணவர்களை அங்கிருந்து குண்டுக்கட்டாக காவல்துறை கைது செய்து அழைத்துச் சென்றுள்ளது.

© Copyright @2024 LIDEA. All Rights Reserved.