தமிழ்ப் பல்கலைக்கழகத்தில் 14வது பட்டமளிப்பு விழா: பங்கேற்காத தமிழக அமைச்சர்  
என்.நாகராஜன் October 21, 2024 03:44 PM

தஞ்சாவூர்: தஞ்சாவூர் தமிழ்ப்பல்கலைக்கழகத்தில் நடந்த 14வது பட்டமளிப்பு விழாவில் மாணவ, மாணவிகளுக்கு தமிழக ஆளுநரும், பல்கலைக்கழக வேந்தருமான ஆர்.என். ரவி பட்டங்கள் வழங்கினார். இந்த விழாவில் தமிழ்ப்பல்கலைக்கழக இணைவேந்தரும், தமிழக அமைச்சருமான மு.பெ.சாமிநாதன் பங்கேற்கவில்லை.

தமிழ்ப்பல்கலைக்கழகத்தில் 14வது பட்டமளிப்பு விழா

தஞ்சாவூர் தமிழ்ப்பல்கலைக்கழகத்தில் 14வது பட்டமளிப்பு விழா நடந்தது. நிகழ்ச்சிக்கு வந்த ஆளுநரும், பல்கலைக்கழக வேந்தருமான ஆர்.என். ரவியை அணிவகுப்பு மரியாதையுடன் வரவேற்றனர். பின்னர் குத்துவிளக்கேற்றி விழாவை தமிழக ஆளுநர் தொடக்கிவைத்தார். இதில் பல்கலைக்கழக துணைவேந்தர் திருவள்ளுவன் வரவேற்புரையாற்றி பேசியதாவது: 

இப்பட்டமளிப்பு விழாவில், 100 மாணவர்கள் முனைவர்ப் பட்டமும், 86 மாணவர்கள் ஆய்வியல் நிறைஞர் பட்டமும், 212 மாணவர்கள் முதுநிலைப் பட்டமும், 2 மாணவர்கள் ஒருங்கிணைந்த முதுகலைப் பட்டமும், 2 மாணவர்கள் கல்வியியல் நிறைஞர்ப் பட்டமும், 190 மாணவர்கள் இளங்கல்வியியல் பட்டமும், 55 மாணவர்கள் ஒருங்கிணைந்த முதுகலைப் படிப்பின் வழியாக இளங்கலைப் பட்டமும், வளர்தமிழ் மையத்தின் வழியாக 8 மாணவர்கள் முதுகலைப் பட்டமும் 13 மாணவர்கள் இளங்கலைப் பட்டமும், 384 மாணவர்கள் தொலைநிலைக் கல்வியின் வழியாக இளநிலை மற்றும் முதுநிலைப் பட்டமும் பெறுகிறார்கள். முன்னாள் மாணவர் சங்க அறக்கட்டளை வழங்கும் தங்கப் பதக்கங்களை 8 மாணவர்கள் பெறுகிறார்கள். பட்டம் பெறும் அனைத்து மாணவர்களையும் பாராட்டி, வாழ்த்தி வரவேற்கிறேன் என்றார். 


மொழிக்கு என்று தனித்துவமாக உருவாக்கப்பட்ட பல்கலைக்கழகம்

பின்னர் சிறப்பு விருந்தினராக பங்கேற்ற திண்டுக்கல் காந்திகிராம கிராமிய நிகர்நிலைப் பல்கலைக்கழக துணைவேந்தர் பஞ்சநதம் பேசியதாவது: இந்த தமிழ்ப் பல்கலைக்கழகம் இந்தியாவிலேயே ஏன் உலகிலேயே ஒரு மொழிக்கு என்று தனித்துவமாக உருவாக்கப்பட்ட பல்கலைக்கழகம் ஆகும். தமிழ் மொழி மட்டுமல்ல, தமிழ் இனமே பண்பாட்டின் அடையாளமாகத் தான் தன்னை நிலைநிறுத்திக் கொண்டுள்ளது. இயல், இசை, நாடகம் என்ற முத்தமிழோடு வீறுநடை இட்டுப் பயணப்பட்ட தமிழ்மொழி, இன்று அறிவியல் தமிழ், கணினித்தமிழ் என்று ஐந்தமிழாக வளர்ந்து காலத்திற்கேற்பத் தன்னைப் புதுப்பித்துக் கொண்டு, உலகமொழிகளுக்கு முன்னோடியாக வலம் வந்து கொண்டிருக்கின்றது.

தஞ்சையின் மண் மட்டுமல்ல, தரணியெங்கும் செழிக்கச் செய்யும் நோக்கில் பாய்ந்துவரும் பொய்யாக் காவிரி, பசுமை போர்த்திய நெல்வயல்கள், பெருவுடையார் கோயில், எண்ணற்ற நூல்களின் கருவூலமான சரஸ்வதி மஹால் நூலகம் என்று தஞ்சைத் தரணிக்குப் பல சிறப்புகள் உண்டு. இவை அனைத்தையும் எவ்வாறு பாதுகாக்க வேண்டும் என்று கற்றுத்தரும் தமிழ் அறிவுத் திருக்கோயிலாக, பல்துறை ஆய்வுகளை வளர்த்தெடுக்கும் களமாக, உயர்தனிச் செம்மொழிக்கு மகுடமாகத் தமிழ்ப் பல்கலைக்கழகம் தஞ்சைத் தரணியிலே அமைந்திருப்பது மிகமிகப் பொருத்தமான ஒன்றாகும்.

யாதும் ஊரே யாவரும் கேளிர்

பிரதமர் நரேந்திர மோடி எந்த நாட்டிற்குச் சென்றாலும் அங்கெல்லாம் 'யாதும் ஊரே யாவரும் கேளிர்" என்பதைத் தவறாமல் முழங்கி, தமிழ்ச் சிந்தனையை இந்தியச் சிந்தனையாக மதித்து உலக மக்களிடம் பெருமிதத்தோடு எடுத்துக்கூறி வருகிறார். தேசத்தந்தை மகாத்மா காந்தியடிகள் தமிழகம் வரும்போதெல்லாம் "நான் மறுபிறவி எடுத்தால் தமிழனாகப் பிறந்து தமிழ்மொழியைக் கற்றுத் திருக்குறள் பயில்வேன். அதன் ஆழ அகலங்களை, உயரிய ஒழுக்கங்களைக் கற்றுத் தேர்வேன்" என்று பல மேடைகளில் தொடர்ந்து பேசியிருக்கின்றார். இதுதான் தமிழ் மொழிக்கும், தமிழ் இலக்கியத்திற்கும், தமிழ் மக்களுக்கும் கிடைத்த ஆகச்சிறந்த பெருமை.

மத்திய அரசால் அதிகாரப் பூர்வ மொழிகளாக அறிவிக்கப்பட்டுள்ள 22 மொழிகளிலும், அங்கீகாரம் பெறாத 66 இந்திய மொழிகளிலும், 58 பழங்குடிகள் மொழிகளிலும், 43 உலக மொழிகளிலும் திருக்குறளை மொழிபெயர்த்துத் தரமான நூல்களாகத் தொடர்ந்து வெளியிட்டு வருகின்றது. 


திருக்குறளை உலகப் பொதுமறையாக அறிவிக்க முயற்சி

திருக்குறளை உலகப் பொதுமறையாக அறிவிக்க யுனஸ்கோ அமைப்போடு சேர்ந்து, தொடர் முயற்சியும் மேற்கொள்ளப்பட்டு வருகின்றது. திருக்குறளை உலகப் பொதுமறையாக உலக மக்களின் ஆதரவோடு விரைவில் அறிவிக்கும் காலம் கனிந்து கொண்டிருக்கின்றது என்பதே நிதர்சனமான உண்மை,

சீன மாணவிகள், ஜப்பான் மாணவர்கள், ரஷ்ய நாட்டைச் சேர்ந்த மாணவர்கள் மிக அருமையாகத் தமிழ் பேசுவதைச் சமூக ஊடகங்களிலே நான் பார்த்து வியந்து வருகிறேன். அப்படியென்றால் நமது தமிழ்மொழியை அனைத்து நாட்டவர்களும் விரும்புகின்றார்கள், ஆர்வத்தோடு கற்கின்றார்கள் என்றுதானே பொருள். அதுபோல் நாமும் ஏன் பிறமொழிகளைக் கற்றுக்கொள்ள முன்வரக்கூடாது?.

நான் 63 நாடுகளுக்குக் கல்விப் பயணம் மேற்கொண்டிருக்கின்றேன். அங்கெல்லாம் என்னை வரவேற்று உபசரித்து வழியனுப்பியவர்கள் எல்லாம் நம் தமிழ்ச் சொந்தங்கள்தான். தமிழர்கள் உலகமெல்லாம் பரவித் தங்களின் வாழ்வாதாரத்தோடு, தமிழ்ப் பண்பாட்டை தமிழை நவீனத் தொழில்நுட்பத்தோடு வளர்த்து வருவதைக் கண்டு பூரித்துப்போனேன். கண்களை இழந்துவிடாமல் அதாவது நாம், நம் தாய்மொழியை மறந்துவிடாமல் மொழிகள் என்ற வண்ணக் கண்ணாடிகளை அணிந்துகொண்டு இந்தியாவை, உலகை வலம் வரலாம். நம் வாழ்வில் வளம் பெறலாம். பிற மொழிகளைக் கற்பதில் தயக்கம் காட்டக் கூடாது என்பதே எனது கருத்து. இவ்வாறு அவர் தெரிவித்தார்.

விழாவில் பங்கேற்காத தமிழக அமைச்சர்
 
இதையடுத்து சிறப்பிடம் பெற்ற மாணவ, மாணவிகளுக்கு தங்கப்பதக்கம் மற்றும் பட்டங்களை ஆளுநர் ஆர்.என்.ரவி வழங்கினார். இந்த விழாவில் தமிழ்ப்பல்கலைக்கழக இணைவேந்தரும் தமிழக அமைச்சருமான மு.பெ.சாமிநாதன் பங்கேற்பார் என்று அறிவிக்கப்பட்டு இருந்தது. ஆனால் அவர் பங்கேற்கவில்லை. இதற்கு சென்னையில் நடந்த நிகழ்ச்சியில் தமிழ்த்தாய் வாழ்த்தில் திராவிடம் என்ற சொல் நீக்கப்பட்டதால் ஏற்பட்ட பிரச்னையால் அமைச்சர் பங்கேற்காமல் இருந்து இருக்கலாம் என்று கூறப்படுகிறது. இருப்பினும் அமைச்சரை வரவேற்று தமிழ்ப் பல்கலைகழகத்தில் பேனர் வைக்கப்பட்டு இருந்தது என்பதும் குறிப்பிடத்தக்கது.

© Copyright @2024 LIDEA. All Rights Reserved.