அண்ணாமலைக்கு நன்றி சொன்ன நந்தன் பட நடிகர்..!
Newstm Tamil October 21, 2024 02:48 PM

இரா. சரவணன், இயக்கத்தில் சசிகுமார் நடிப்பில் வெளியான திரைப்படம் நந்தன். சாதி ரீதியாகப் பட்டியலின மக்கள் அனுபவித்து வரும் வலிகளைப் பேசும் படங்களின் வரிசையில் இடம் பிடித்து இருக்கும் நந்தன் திரைப்படம் ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்றுள்ளது.

கடந்த செப்டம்பர் மாதம் 20 ஆம் தேதி இந்த திரைப்படம் திரைக்கு வந்தது. நந்தன் திரைப்படம் வெளியானதில் இருந்தே சமூக வலைத்தளங்களில் பலரும் பாராட்டியிருந்தனர். சசிகுமாரின் நடிப்பும் இந்த படத்தில் பெரிதும் பேசப்பட்டது. ஓடிடியில் இந்த படம் வெளியாகியிருக்கும் நிலையில், திரையுலகை சேர்ந்தவர்கள், அரசியல் தலைவர்களும் இந்த படத்தை பார்த்துவிட்டு பாராட்டி பதிவிட்டு வருகிறார்கள்.

பாமக தலைவர் அன்புமணி ராமதாஸ், நாம் தமிழர் கட்சியின் ஒருங்கிணைப்பாளர் சீமான் உள்ளிட்டோரும் நந்தன் திரைப்படத்தை பாராட்டியிருந்தனர். அரசியல் மேற்படிப்புக்காக லண்டன் சென்றுள்ள தமிழக பாஜக தலைவர் அண்ணாமலையும் நேற்று ஓடிடி தளத்தில் நந்தன் திரைப் படத்தை பார்த்துவிட்டு, இது தொடர்பாக தனது கருத்தினை எக்ஸ் தளத்தில் பதிவிட்டு இருந்தார். அண்ணாமலை வெளியிட்ட பதிவில், "OTT தளத்தில் 'நந்தன்' திரைப்படத்தைப் பார்த்தேன்.

பட்டியலின மக்களை முன்னேற்றுகிறோம் என்ற பெயரில் தங்கள் சுயலாபத்திற்காகப் பட்டியலின மக்களைச் சுரண்டி ஆட்சி செய்யும் சர்வாதிகார அரசியல் வாதிகளைத் தோலுரித்துக் காட்டியிருக்கிறது இத்திரைப்படம். தனது தேர்ந்த நடிப்பின் மூலம் பட்டியலின ஊராட்சி மன்ற தலைவர்கள் படும் இன்னல்களை நம் கண்முன் கொண்டு வந்த சசிகுமாருக்கு வாழ்த்துக்கள்.

பட்டியலின மக்களுக்காக ஒதுக்கப்பட்ட ஊராட்சிகளில் நடக்கும் அவல அரசியலை உள்ளபடியே காட்சிப்படுத்தியிருக்கும் இயக்குனர் இரா.சரவணனுக்கும் எனது மனமார்ந்த வாழ்த்துக்கள். பல ஆழமான கருத்துக்கள் நிறைந்த 'நந்தன்' திரைப்படம் காலத்திற்கும் மக்கள் மனதில் இடம் பெற்றிருக்கும் என்பதில் சந்தேகமில்லை" என்று கூறியிருந்தார். நந்தன் திரைப்படத்தை பார்த்துவிட்டு பாராட்டியிருந்த அண்ணாமலைக்கு நன்றி தெரிவித்துள்ள, படத்தின் இயக்குநர் இரா. சரவணன் தனது எக்ஸ் தளத்தில் கூறியிருப்பதாவது:- உங்கள் குரலுக்கு எப்போதுமே சக்தி அதிகம் சார்... 'நந்தன்' படம் பார்த்து நீங்கள் பதிவிட்ட கருத்து, பட்டியலினப் பஞ்சாயத்து தலைவர்கள் மீதான அக்கறையைப் பெரிதாக்கி இருக்கிறது.

ஒடுக்குமுறைகள் குறித்த விவாதங்களை தீவிரமாக்கி இருக்கிறது. 'நந்தன்' படத்தை பெரிய அளவில் பேசுபொருளாக்கி இருக்கிறது. பயணம், அரசியல், படிப்பு உள்ளிட்ட பணிகளுக்கு மத்தியில் 'நந்தன்' படம் பார்த்து கருத்துச் சொன்னதற்கும், சமூக நீதிக்கான குரலைப் பெரிதாக்கியதற்கும் மனமார்ந்த நன்றி சார்" என்று கூறியிருக்கிறார்.

© Copyright @2024 LIDEA. All Rights Reserved.