”EPS தலைமையை ஏற்க முடிவு செய்த வைத்திலிங்கம்?” அவரது வீட்டில் அமலாக்கத்துறை சோதனை..!
இராஜா சண்முகசுந்தரம் October 23, 2024 12:14 PM

அதிமுக முன்னாள் அமைச்சரும் ஓபிஎஸ் ஆதரவாளருமாக அறியப்படுபவருமான தஞ்சாவூர் மாவட்டத்தை சேர்ந்த வைத்திலிங்கம் வீடு, சென்னையில் எம்.எல்.ஏ விடுதியில் உள்ள அவரது அறை உள்ளிட்ட இடங்களில் அமலாக்கத்துறை அதிகாரிகள் திடீரென சோதனை நடத்தி வருகின்றனர்.

ஏன் சோதனை.. ?

2011 – 16 கால கட்ட அதிமுக ஆட்சியில் வீட்டு வசதி துறை அமைச்சராக இருந்தபோது அதிகாரத்தை தவறாக பயன்படுத்தி வருமானத்திற்கு அதிகமாக சொத்து சேர்த்ததாகவும் தனியார் அடுக்குமாடி குடியிருப்பு கட்ட பல கோடி ரூபாய் லஞ்சமாக அவர் பெற்றதாகவும் கூறி தமிழக லஞ்ச ஒழிப்புத்துறை வைத்திலிங்கம் மீது வழக்கு பதிவு செய்தது. அந்த முகாந்திரத்தை வைத்து, மத்திய அரசின் புலனாய்வு அமைப்பான அமலாக்கத்துறை அதிகாரிகள் வைத்திலிங்கம் வீடு மற்றும் அவருக்கு தொடர்புடைய இடங்களில் காலை முதல் சோதனை நடத்தி வருகின்றனர். துப்பாக்கி ஏந்திய மத்திய பாதுகாப்பு படையினர் உதவியுடன் தஞ்சை அருகேயுள்ள அவரது சொந்த ஊரான உறந்தரையன் குடிக்காட்டில் உள்ள வீட்டில் அதிரடி சோதனை நடத்தி வருகின்றனர்.

ஓபிஎஸ் தலைமையில் அதிருப்தி ? எடப்பாடியுடன் இணைந்து செயல்பட முடிவு ?

எடப்பாடி பழனிசாமி தலைமையை ஏற்காமல் ஓபிஎஸ் தலைமையை ஏற்று ஆயிரக்கணக்கான நபர்கள் பங்கேற்ற அதிமுக பொதுக்குழு மேடையிலே சண்டமாருதம் செய்த வைத்திலிங்கம், நாளடைவில் ஓபிஎஸ் தலைமை மீது நம்பிக்கை இழந்ததோடு, அவரது செயல்பாடுகளிலும் அதிருப்தி அடைந்ததாக கூறப்படுகிறது. அதனால், இருவருக்கும் இடையே நெருக்கம் குறைந்து ஓபிஎஸ் வீட்டிற்கு செல்வதையே வைத்திலிங்கம் முழுமையாக தவிர்த்து வந்துள்ளார். அவர் மட்டுமின்றி, ஓபிஎஸ் உடன் சென்ற மற்றொரு முன்னாள் அமைச்சர் கு.ப.கிருஷ்ணனும் ஓபிஎஸ்-சை விட்டு விலகி வந்துவிட்டார்.

 

இந்நிலையில், எடப்பாடி பழனிசாமியோடு இணைந்து செயல்பட வைத்திலிங்கம் முடிவு எடுத்ததாகவும் அது குறித்த தகவல் எடப்பாடி பழனிசாமிக்கும் தெரிவிக்கப்பட்டதாகவும் கூறப்படுகிறது. இதனை விரும்பாத ஓபிஎஸ், வைத்திலிங்கத்திற்கு நெருக்கடி கொடுக்கும் விதமாகவும் எடப்பாடி பழனிசாமியோடு அவர் செல்வதை தடுக்கும் விதமாகவும் சில விஷயங்களை செய்து வந்ததாகவும் தகவல் வந்த வண்ணம் இருந்ததன. இதனையடுத்தே அவரது வீட்டில்  10 வருட முந்தைய வழக்கிற்காக அமலாகத்துறை தற்போது சோதனை நடத்தி வருவதாக கூறப்படுகிறது.

தஞ்சையின் தவிர்க்க முடியாத சக்தி வைத்திலிங்கம்

தஞ்சாவூர் மாவட்டத்தை பொறுத்தவரை திமுக அங்கு இன்று வரை அசைக்க முடியாத சக்தியாக இருந்து வருகிறது. அதற்கு காரணமாக அந்த மாவட்டதை சேர்ந்த முன்னாள் எம்.பி. எஸ்.எஸ்.பழனிமாணிக்கம் மிக முக்கிய காரணமாக இருந்து வந்தார். அவர் மட்டுமின்றி, திருவையாறு எம்.எ.ஏ துரை சந்திரசேகர் உள்ளிட்டோரும் தஞ்சையை திமுக கோட்டையாக வைக்கும் அளவிற்கான பலத்தை பெற்றவர்களாக இருந்து வருகின்றனர். அதே நேரத்தில், தஞ்சை அதிமுக என்றாலே கடந்த காலங்களில் அது வைத்திலிங்கம் மட்டும்தான் என்ற நிலை இருந்தது.

அதிமுகவை திமுகவிற்கு நிகரான சக்தியாக தஞ்சையில் வளர்த்தெடுத்தவர் வைத்திலிங்கம் என்பதும் அவரை தாண்டி தஞ்சை அதிமுகவில் எதுவும் செய்ய முடியாத என்ற கட்டமைப்பையும் அவர் உருவாக்கி வைத்திருந்தார். எடப்பாடி பழனிசாமி வசம் அதிமுக சென்றபோது தஞ்சை மாவட்டத்தில் வேறு ஒருவரை வைத்து அரசியல் செய்ய எஸ்.பி.வேலுமணி முயற்சித்த நிலையில், அவருக்கும் வைத்திலிங்கத்திற்கும் இடையே மோதல் ஏற்பட காரணமாக அமைந்தது.

இப்போது எஸ்.பி.வேலுமணிக்கும் – எடப்பாடி பழனிசாமிக்கும் இடையே கருத்து வேறுபாடுகள் உருவாகிக்கொண்டிருப்பதாக தகவல் வெளியாகிக்கொண்டிருக்கும் சூழலில் வைத்திலிங்கமும் எடப்பாடி பழனிசாமியோடு இணைந்து செயல்பட முடிவெடுத்துள்ளதாக கூறப்படுகிறது. இதனை விரைவில் எடப்பாடி பழனிசாமி ஏற்றுக்கொள்ள தயார் ஆகிக்கொண்டிருந்த சூழலில்தான் இந்த அமலாக்கத்துறை ரெய்டு வைத்திலிங்கத்தை நோக்கி பாய்ந்திருப்பதாக தெரிகிறது.

© Copyright @2024 LIDEA. All Rights Reserved.