பைக்கில் மோதுவது போல் சென்ற பேருந்து…. ஆத்திரத்தில் ஓட்டுநர் மடியில் ஏறி அமர்ந்த வாலிபர்… திருப்பூரில் அதிர்ச்சி…!!
SeithiSolai Tamil October 26, 2024 04:48 PM

திருப்பூர் நகரத்தில் நடந்த பரபரப்பான சம்பவம், சோளிபாளையத்தைச் சேர்ந்த பிரதீப் என்பவர் பஸ் டிரைவரின் மீது ஆத்திரம் கொண்டு ரகளை செய்ததால் ஏற்பட்டது. கோவை அரசு போக்குவரத்து கழகத்தில் பணியாற்றும் ரகுராம் என்ற டிரைவர் கோவை-திருப்பூர் வழித்தடத்தில் பஸ் இயக்கிக் கொண்டு வந்தார். அவிநாசி ரோட்டில் பெரியார் காலனிக்குள் பஸ் வந்தபோது, பைக்கில் வந்த பிரதீப் மீது பஸ் மோதியது போல் தோன்றியதால் ஆத்திரமடைந்தார்.

பஸ்சை துரத்தி காந்தி நகர் சிக்னலில் பஸ்ஸை மறைத்த பிரதீப், மது போதையில் பஸ்சுக்குள் ஏறினார். பின்னர் டிரைவரின் இருக்கை அருகே சென்று தகராறு செய்ததுடன், டிரைவரின் மடியில் அமர்ந்து பஸ்சை இயக்க விடாமல் தடுக்க முற்பட்டார். இந்த செயல் பஸ்சில் பயணிக்கும் மற்ற பயணிகளிடமும், சுற்று வட்டார மக்களிடமும் பரபரப்பை ஏற்படுத்தியது. அப்போது அந்த பகுதியில் போக்குவரத்து முடங்கியது.

சம்பவ இடத்தில் பாதுகாப்புப் பணியில் இருந்த போலீசார் விரைந்து வந்தனர். தகராறில் ஈடுபட்ட பிரதீப்பை பஸ்சிலிருந்து வெளியேற்றிய போலீசார், போக்குவரத்தை மீண்டும் சரிசெய்தனர். இந்த சம்பவத்தின் போது, சிலர் எடுத்த வீடியோ சமூக வலைதளங்களில் பகிரப்பட்டு, வைரலாகி வருகிறது.

பஸ் டிரைவர் ரகுராம் அனுப்பர்பாளையம் போலீஸ் நிலையத்தில் புகார் அளித்ததின் பேரில், போலீசார் பிரதீப்பை கைது செய்து விசாரித்தனர். விசாரணையில் அவர் திருப்பூர் சோளிபாளையம் பகுதியைச் சேர்ந்தவர் என்பதும், பனியன் தொழிற்சாலையில் பணியாற்றி வருபவர் என்பதும் தெரியவந்தது.

© Copyright @2024 LIDEA. All Rights Reserved.