TVK Vijay: 'மகாராஷ்டிரா, கர்நாடகா, பாமக... இப்போ த.வெ.க ஆலோசகர்?' - யார் இந்த ஜான் ஆரோக்கியசாமி?
Vikatan October 26, 2024 11:48 PM
2026 சட்டமன்ற தேர்தலை குறி வைத்து அரசியலில் களம் இறங்கி இருக்கும் விஜய், தமிழக வெற்றி கழகம் என்ற கட்சியைத் தொடங்கி அதன் முதல் மாநாட்டிற்கான பணிகளில் இறங்கி இருக்கிறார்.

விஜய்யின் அரசியல் ஆலோசகர் யார்? அவருக்கு அரசியல் ஆலோசனைகளைக் கொடுப்பது யார்? என்ற கேள்வி எழுந்திருக்கிறது. எப்படி பிரசாந்த் கிஷோர் அரசியல் கட்சிக்களுக்கு ஒரு பெரிய ஆலோசகராக இருந்தாரோ, அதுபோல விஜய்யின் தவெக கட்சிக்கு ஜான் ஆரோக்கியசாமி என்பவர்தான் அரசியல் ஆலோசகராக இருக்கிறார் என்று தகவல்கள் வெளியாகி இருக்கிறது. அதிகாரப்பூர்வமாக சொல்லப்படவில்லை என்றாலும், அவர் தான் அந்த பொறுப்பில் இருக்கிறார் என்கிறார்கள்.

சரி, யார் இந்த ஜான் ஆரோக்கியசாமி? TVK| Vijay

தேர்தல் வியூக வகுப்பாளர் என்றதும் நமக்கு முதலில் நினைவுக்கு வரும் பிரசாந்த் கிஷோர் பீகாரைப் பூர்விகமாகக் கொண்டவர். சுனில் கனகோலு கர்நாடகாவின் பெல்லாரியைச் சேர்ந்தவர். அந்தவகையில் பார்த்தால், ஜான் ஆரோக்கியசாமி தமிழ்நாட்டைப் பூர்விகமாகக் கொண்டவர்.

திருச்சியைச் சேர்ந்த ஆரோக்கிய சாமி வெளிநாடுகளில் உயர் பதவிகளில் பணிபுரிந்திருக்கிறார். இப்போது 'பெர்சனா டிஜிட்' என்ற பெயரில் மும்பையில் மார்க்கெட்டிங் நிறுவனம் ஒன்றை நடத்தி வருகிறார்.

கடந்த 2016 சட்டமன்றத் தேர்தலில் அன்புமணி மேற்கொண்ட 'மாற்றம், முன்னேற்றம் அன்புமணி' என்ற பிரச்சாரத்திற்கு பின்னணியில் இவர் இருந்ததும் இவரே. 2016 சட்டமன்றத் தேர்தலின்போது, `மாற்றம் முன்னேற்றம் அன்புமணி’ என்கிற பிராண்டிங், பா.ம.க-வை திராவிடக் கட்சிகளுக்கு மாற்றாக முன்னிலைப்படுத்தியது. திறந்தவெளி மேடையில், பிரமாண்ட எல்.இ.டி. திரையில் செயல்திட்டங்கள் விரிய, மார்டன் லுக்கில் அன்புமணி பேசும் ஒவ்வொரு கூட்டமும் இளைஞர்களைக் கவர்ந்தது. இதன்மூலம், அன்புமணியை முதல்வர் வேட்பாளராகப் பட்டிதொட்டியெங்கும் பிரபலப்படுத்தியவர்தான், இந்த ஜான்.

பிரசாந்த் கிஷோரின் ஐ-பேக் நிறுவனத்தை போல் ஜான் ஆரோக்கியசாமியின் 'பெர்சனா டிஜிட்' நிறுவனத்துக்கும் வட இந்திய அரசியல் தலைவர்கள் மத்தியில் நல்ல வரவேற்பு இருக்கிறது.
ஜான் ஆரோக்கியசாமி

2019-ல் நடந்த மகாராஷ்டிரா சட்டமன்றத் தேர்தலில் சரத் பவாரின் தேசியவாத காங்கிரஸ் கட்சிக்கு வியூக வகுப்பாளராகச் செயல்பட்டிருக்கிறார். அந்தத் தேர்தலில் தேசியவாத காங்கிரஸ் வெற்றியும் பெற்றது.

ஆப்பிள் நிறுவனத்தின் இந்திய புரமோஷன் அதிகாரியாகவும், ஐ.நா-வின் பருவநிலை மாற்றத்திற்கான குழுவின் பிரசார ஆலோசகராகவும் பணிபுரிந்த அனுபவம் ஜானுக்கு உண்டு. மகாராஷ்டிராவின் சிவசேனா கட்சியில் தொடங்கி, கர்நாடகாவின் சித்தராமய்யா வரையில் பல ஆளுமைகளுடனும் பணியாற்றியுள்ளார்.

தற்போது விஜய்யின் தமிழக வெற்றிக் கழகத்திற்கு ஆலோசகராகச் செயல்பட்டு வருகிறார் என்கிறார்கள். ஜான் ஆரோக்கிய சாமி, இதுவரை பிரசாந்த் கிஷோரை மட்டுமே அறிந்த தமிழக அரசியல்வாதிகள் இனி ஜான் ஆரோக்கியசாமி பற்றியும் அறிந்துகொள்ளளலாம், என்கிறார்கள்.

Junior Vikatan-ன் பிரத்யேக Whatsapp Group...

வணக்கம்,

BIG BREAKINGS முதல்... அரசியல், சமூகம், க்ரைம், சினிமா என அனைத்து ஏரியாக்களின் அசராத அப்டேட்ஸ், ஆழமான கட்டுரைகள்.

ஜூனியர் விகடன் இதழ் மற்றும் டிஜிட்டலில் கவனம் ஈர்க்கும் கட்டுரைகள் இங்கே உடனுக்குடன்...

© Copyright @2024 LIDEA. All Rights Reserved.