சென்னை: "கால்பந்து விளையாட 120 ரூபாயா? ஏழை மாணவர்களுக்கு ஆபத்து" - மாநகராட்சிக்கு அன்புமணி எதிர்ப்பு
Vikatan October 30, 2024 07:48 PM

கால்பந்து விளையாட்டுத் திடல்களைத் தனியாரிடம் ஒப்படைக்கும் சென்னை மாநகராட்சியின் முடிவுக்குக் கடுமையான எதிர்ப்புகள் கிளம்பியிருக்கின்றன.

நேற்று (அக்டோபர் 29) சென்னை மாநகராட்சி சார்பில் ரிப்பன் மாளிகையில் நடைபெற்ற மாதாந்திர மாமன்ற கூட்டத்தில் 79 தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன. அதில் ஒன்றாகச் சென்னையில் அமைந்துள்ள 9 கால்பந்து திடல்களைத் தனியாரிடம் ஒப்படைக்கும் தீர்மானமும் நிறைவேற்றப்பட்டது. இதற்கு அந்த திடல்களில் பயிற்சி பெற்றுவந்த இளைஞர்கள் எதிர்ப்பு தெரிவித்துள்ளனர்.

இது குறித்து பா.ம.க தலைவர் அன்புமணி ராமதாஸ் தனது டிவிட்டர் பதிவில், "கால்பந்து திடல்களைத் தனியாரிடம் ஒப்படைப்பது விளையாட்டு வளர்ச்சியைக் கடுமையாகப் பாதிக்கும். இம்முடிவை உடனடியாகத் திரும்பப் பெற வேண்டும்!

இளைஞர்கள் எதிர்ப்பு

சென்னையில் சைதாப்பேட்டை, வியாசர்பாடி , திரு.வி.க நகர் உள்ளிட்ட 9 இடங்களில் உள்ள மாநகராட்சிக்குச் சொந்தமான செயற்கை புல்தரை கால்பந்து விளையாட்டுத் திடல்கள் தனியாருக்கு ஒப்படைக்கப்படும் என்றும், இனி அங்கு விளையாடச் செல்லும் இளைஞர்களுக்கு ஒரு மணி நேரத்திற்கு ஒரு நபருக்கு 120 ரூபாய் வீதம் கட்டணம் வசூலிக்கப்படும் என்றும் சென்னை மாநகராட்சிக் கூட்டத்தில் தீர்மானம் நிறைவேற்றப்பட்டிருக்கிறது. இது கடுமையாகக் கண்டிக்கத்தக்கது.

விளையாட்டுத் திடல்கள் மிக மிகக் குறைவு

சென்னையில் மக்கள்தொகையுடன் ஒப்பிடும்போது விளையாட்டுத் திடல்களின் எண்ணிக்கை மிக மிகக் குறைவு ஆகும். அவற்றின் எண்ணிக்கையை அதிகரித்து பொதுப் பயன்பாட்டுக்குக் கொண்டு வருவதன் மூலம்தான் விளையாட்டை வளர்க்க முடியும். விளையாட்டுத் திடல்களைத் தனியாரிடம் ஒப்படைத்து அங்கு விளையாடுவதற்குக் கட்டணம் வசூலிக்கப்பட்டால், ஏழை மாணவர்கள் மற்றும் இளைஞர்களால் விளையாட முடியாது. அது விளையாட்டுகளின் வீழ்ச்சிக்குத்தான் வழிவகுக்கும்.

அன்புமணி

சென்னை மாநகராட்சிக்குச் சொந்தமான டென்னிஸ் திடல், பேட்மிண்டன் திடல், ஸ்கேட்டிங் மைதானம், டேபிள் டென்னிஸ் மைதானங்கள் போன்றவை தனியாருக்குத் தாரை வார்க்கப்பட்டு விட்டதால், அங்குச் சென்று விளையாடுவோரின் எண்ணிக்கை குறைந்து விட்டது. அதேபோன்ற நிலை கால்பந்துக்கும் ஏற்பட்டு விடக்கூடாது. எனவே, தனியாரிடம் ஒப்படைக்கப்பட்டு விட்ட, ஒப்படைக்கப்படவுள்ள அனைத்து விளையாட்டுத் திடல்களையும் சென்னை மாநகராட்சியே மீண்டும் எடுத்து நடத்த வேண்டும்.

சர்.பிட்டி தியாகராயர் அரங்கம்

அதேபோல், கல்வி, இலக்கியம் சார்ந்த நிகழ்ச்சிகளை ஓரளவு குறைந்த வாடகையில் நடத்துவதற்கு இடமளித்து வந்த தியாகராய நகர் சர்.பிட்டி தியாகராயர் அரங்கம், செனாய் நகர் அம்மா அரங்கம் ஆகியவற்றைத் தனியாருக்குக் குத்தகைக்கு விடச் சென்னை மாமன்ற கூட்டத்தில் தீர்மானம் நிறைவேற்றப்பட்டிருப்பதும் ஆபத்தானது. இந்த அரங்குகள் தனியாரிடம் சென்றால் சாதாரணமான அமைப்புகளால் இனி சென்னையில் நிகழ்ச்சி நடத்த முடியாத நிலை உருவாகி விடும். எனவே, இரு அரங்கங்களையும் தனியாருக்குத் தாரை வார்க்கும் முடிவையும் மாநகராட்சி திரும்பப் பெற வேண்டும்." என்று வலியுறுத்தியுள்ளார்.

Junior Vikatan-ன் பிரத்யேக Whatsapp Group...

வணக்கம்,

BIG BREAKINGS முதல்... அரசியல், சமூகம், க்ரைம், சினிமா என அனைத்து ஏரியாக்களின் அசராத அப்டேட்ஸ், ஆழமான கட்டுரைகள்.

ஜூனியர் விகடன் இதழ் மற்றும் டிஜிட்டலில் கவனம் ஈர்க்கும் கட்டுரைகள் இங்கே உடனுக்குடன்...

© Copyright @2024 LIDEA. All Rights Reserved.