ஹைதராபாத் பார்வையற்றவர்களுக்கான காலனியில் ஒரு தம்பதி வசித்து வருகின்றனர். தங்களது முப்பது வயதுடைய இளைய மகனின் துணையுடன் தான் இருவருமே வாழ்க்கையை நடத்தி வந்தனர். கடந்த சில நாட்களாகவே வீட்டில் இருந்து துர்நாற்றம் வீசியதால் அக்கம் பக்கத்தினர் போலீசுக்கு தகவல் தெரிவித்தனர். அதன்படி சம்பவ இடத்திற்கு சென்ற போலீசார் வீட்டுக்குள் நுழைந்த போது அந்த தம்பதியின் 30 வயது மகன் இறந்து கிடந்ததை கண்டு அதிர்ச்சி அடைந்தனர். நான்கு நாட்களுக்கு முன்னரே இரவில் தூங்கிக் கொண்டிருந்தபோது அவரது உயிர் பிரிந்ததாக தெரிகிறது.
இதனால் போலீசார் வாலிபரின் உடலை கைப்பற்றி அரசு மருத்துவமனைக்கு பிரேத பரிசோதனைக்காக அனுப்பி வைத்தனர். தங்களது மகன் உயிரிழந்தது பற்றி அந்த தம்பதிக்கு எதுவும் தெரியவில்லை. இருவரும் நான்கு நாட்களாக மகனிடம் சாப்பாடும் தண்ணீரும் கேட்டுக் கொண்டே இருந்துள்ளனர். மகனின் பெயரைச் சொல்லி கூப்பிட்டுக்கொண்டே இருந்துள்ளனர். மகன் இறந்ததால் எந்தவித பதிலும் வரவில்லை. சாப்பாடு தண்ணீர் இல்லாமல் வயதான தம்பதியினர் அரை மயக்கத்திலேயே இருந்துள்ளனர். போலீசார் அவர்களை மீட்டு உணவும் தண்ணீரும் கொடுத்துள்ளனர். இப்போது இருவரும் மூத்த மகன் பிரதீப் பராமரிப்பில் ஒப்படைக்கப்பட்டனர். இந்த சம்பவம் அப்பகுதியில் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.