தமிழகம் முழுவதும் பாதுகாப்பு பணியில் 48 ஆயிரம் போலீசார்..!
Top Tamil News October 31, 2024 12:48 PM

தீபாவளி பண்டிகை இன்று கோலாகலமாக கொண்டாடப்பட உள்ளது. பண்டிகை வியாழக்கிழமை வருவதால், அதற்கடுத்த நாளான வெள்ளிக்கிழமை அரசு விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது. இதனால் சனி, ஞாயிற்றுக் கிழமைகள் சேர்த்து தொடர்ச்சியாக 4 நாட்கள் தொடர் விடுமுறை வந்திருக்கிறது. 

இதையொட்டி மக்கள் சொந்த ஊர்களுக்கு சென்று தீபாவளி பண்டிகையை உற்சாகமாக கொண்டாட முடிவு செய்து பலரும் கடந்த 28-ம் தேதியில் இருந்தே பயணம் செய்ய தொடங்கி விட்டனர். அதன் தொடர்ச்சியாக நேற்று முன்தினமும் சென்னையில் இருந்து பலர் சொந்த ஊர்களுக்கு படையெடுத்தனர். 

இதனால் பஸ்கள், ரயில்களில் வழக்கத்தைவிட கூட்டம் அலைமோதியதை பார்க்க முடிந்தது. தமிழ்நாடு அரசு போக்குவரத்துக்கழகம் சார்பில் தீபாவளி பண்டிகையையொட்டி 14 ஆயிரம் சிறப்பு பஸ்கள் அறிவிக்கப்பட்டன. அதன்படி, கடந்த 28-ம் தேதி முதல் சிறப்பு பஸ்கள் இயக்கப்ப ட்டு வருகின்றன. இதேபோல், ரயில்களிலும் நேற்று முன்தினம் கூட்டம் அதிகமாகவே காணப்பட்டது. 

தீபாவளி பண்டிகையையொட்டி 4 மாதங்களுக்கு முன்பே திட்டமிட்டு முன்பதிவு செய்திருந்த பயணிகள், சென்னை சென்டிரல், எழும்பூர் ரயில் நிலையங்களில் இருந்து புறப்பட்ட ரயில்களில் அவர்களுக்கான முன்பதிவில் ஏறி பயணித்தனர். 

மேலும் சொந்த காரிலும் ஏராளமானோர்  சென்னையில் இருந்து சொந்த ஊர்களுக்கு புறப்பட்டு சென்றனர்.  நேற்று முன்தினம் சுமார் 2.5 லட்சம் முதல் 4 லட்சம் பேர் பஸ்கள், ரயில்கள், கார்களில் புறப்பட்டு சென்றதாக தெரியவருகிறது. 

இந்நிலையில் தீபாவளியை முன்னிட்டு தமிழகம் முழுவதும் 48 ஆயிரம் போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபட உள்ளதாக தமிழக காவல்துறை தகவல் தெரிவித்துள்ளது. இதன்படி பஸ் நிலையங்கள், ரயில் நிலையங்கள், மார்க்கெட் பகுதிகளில் போலீசார் தீவிரமாக கண்காணிக்க உள்ளனர். மேலும் போக்குவரத்து நெரிசலை தவிர்க்கும் வகையில்  பாதுகாப்பு ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளதாக தமிழக காவல்துறை தெரிவித்துள்ளது.  

© Copyright @2024 LIDEA. All Rights Reserved.