Diwali Exclusive: `தல தீபாவளிய மறக்க முடியாது; ஏன்னா..!' - கலகல பட்டாஸாய் வெடிக்கும் கோபி - சுதாகர்
Vikatan October 31, 2024 01:48 PM

பூமர் அங்கிள்.... பெண் தானே... பெண் சாஃப்டா இருப்பானு நினைக்காத... நான் கொஞ்சம் ரக்கடான ஆளு.... என்னென்ன சொல்றான் பாருங்க, கம்பி கட்ற கதையெல்லாம் சொல்றான்... இந்த வாக்கியங்களைக் கேட்டால் உங்களுக்கு நெருக்கமான நட்புவட்டம் யார் நினைவு வேண்டுமானாலும் வரலாம். ஆனால், இதை உருவாக்கி, வைரலாக்கியவர்கள் பரிதாபங்கள் கோபி சுதாகர் இணை. ஃபைட் வேணுமா ஃபைட் இருக்கு, டான்ஸ் வேணுமா டான்ஸ் இருக்குனு சொல்ற மாதிரி, நம் வாழ்வின் எந்த நிகழ்வுக்கும் பரிதாபங்கள் சேனலில் காமெடி + வழிகாட்டும் வீடியோ ஒன்று இருக்கும். சமீபத்தில் என் அம்மா ' அந்த நாத்தனார் பரிதாபங்கள் வை.... மாமியார் பரிதாபங்கள் வை... அம்மா பரிதாபங்கள் வை..." எனத் தொடர்ந்து மாற்றி மாற்றி பரிதாபங்கள் சேனலின் வீடியோக்களைப் பார்த்து சிரித்துக்கொண்டிருந்தார்.

பரிதாபங்கள்: கோபி - சுதாகர்

இப்படி வயதானவர்கள் முதல் சிறுவர்கள் வரை அனைத்துத் தரப்பு மக்களாலும் ஏற்றுக்கொள்ளப்பட்ட பிரபல சேனல்களில் ஒன்று பரிதாபங்கள். இந்த பரிதாபங்கள் சேனலின் முக்கிய 'தலை'களான கோபி - சுதாகரை தீபாவளி ஸ்பெஷல் ஆக தொடர்புகொண்டு பேசினோம்... 'வணக்கம் ப்ரோ... எப்படி இருக்கீங்க" என வழக்கமான விசாரிப்புகளுக்குப் பிறகு...

"முதல்முறையாக குழந்தைகளுடன் தீபாவளி கொண்டாட்டம்... என்ன பிளான்?"

கோபி: ``இது எங்க குழந்தைகளுக்கு முதல் தீபாவளியில்ல. போன தீபாவளிக்கு சில மாதங்களுக்கு முன்னாடியே பிறந்துட்டாங்க. அதனால் அவங்களுக்கு இது இரண்டாம் தீபாவளி. ஆனால், அவங்களுக்கு கொஞ்சம் விவரம் தெரியிர மாதிரியான முதல் தீபாவளி. வழக்கம் போல நான் சொந்த ஊரு சிவகங்கைக்கு போறேன். அங்க என் குழந்தை கையில மத்தாப்பு மாதிரியான விஷங்களை கொடுத்து கொஞ்சம் எஞ்சாய் பண்ணலாம்னு இருக்கேன்"

சுதாகர்: ``போன தீபாவளிக்கு என் மகன்லாம் வெடி சத்தத்துக்கு பயங்கரமா பயந்துட்டு இருந்தான். ஆனா இந்த தீபாவளிக்கு வான வெடிலாம் காட்டி அவனை கொஞ்சலாம். வெளிச்சத்தை பார்த்து அவங்களும் எஞ்சாய் பண்ணுவாங்கனு நினைக்கிறேன். சிவகாசினாலே வெடிதான் பேமஸ். அதனால இந்த வருஷமும் அங்கபோய்தான் என் தீபாவளி."

"நெருங்கிய நண்பர்களான நீங்க ரெண்டு பேரும் சேர்ந்து தீபாவளி கொண்டாடியிருக்கீங்களா?"

கோபி: ``என்னது நாங்க ரெண்டுபேரும் சேர்ந்து தீபாவளி கொண்டாடுறதா... ஏங்க இப்படி.... ஒவ்வொரு தீபாவளியும் நாங்க ரெண்டுபேரும் தனித் தனியாதான் கொண்டாடிருக்கோம். நான் என் ஊருக்கு போயிடுவேன், சுதாகர் அவர் ஊருக்கு போயிடுவார். நாங்க சேர்ந்து தீபாவளி கொண்டாடுனது இல்லை."

பரிதாபங்கள்: கோபி - சுதாகர்
"உங்களுக்கு மறக்கமுடியாத தீபாவளினா எந்த தீபாவளி?"

சுதாகர்: ``இதுக்கு நான் முதல்ல பதில் சொல்றேன்... எனக்கு மறக்கமுடியாத தீபாவளினா அது தலதீபாவளிதாங்க. தலதீபாவளிக்கு முன்னாடி வரைக்கும் நம்ம வீட்லதான் தீபாவளி. அதெல்லாம் வழக்கமா எப்போவும் போல போகும். ஆனா அந்த தலதீபாவளி இருக்கே... நமக்கு அது மாமனார் வீடு, புது பழக்க வழக்கம், மருமகன்ற கவனிப்பு, காலையில் எழுந்து குளிச்சி, முறையான சாப்டுட்டுனு ஒரு மாதிரி ஜாலியா இருந்துச்சு. ஒவ்வொரு வருஷமும் 1st வெடி நாமதான் போடனும்னு காலேஜ் படிக்கிற வரைக்கும் ஒரு எண்ணம் இருக்கும். ஆனா, மாமனார் ஊர்ல அப்படிலாம் இல்ல. அதுபாட்டுக்கு வெடிச்சிட்டே இருந்தாங்க. படத்துக்கு போனோம், மதியம் எல்லாரும் ஒன்னா சப்பிட்டோம். அதே மாதிரி எங்க மாமனார் வீட்டுக்கு அவருடைய மகன், மகள்னு எல்லாரும் ஒன்னா வந்துருவாங்க. அங்க ஒன்னா சேர்ந்து வெடிவெடிச்சதுலாம் மறக்கமுடியாது. அந்த அனுபவம் எனக்கு புதுசா இருந்துச்சு.

அதேமாதிரி சின்னவயசுல... தீபாவளிக்கு முதல்நாள் அப்பா வெடி கடையில வேலைபார்த்துட்டு திரும்பி வரும்போதுதான் வெடி வாங்கிட்டு வருவாரு. அப்பா வேலை முடிச்சிட்டு கிளம்புறப்ப நேரத்துக்கு ஊருக்குள்ள பஸ் வராது. அப்பா காலையில் 1st பஸ்லதான் வருவாரு. அதனால, தீபாவளி அன்னைக்கு காலையிலேயே குளிச்சிட்டு, அப்பா வரதுக்காக பஸ் ஸ்டாப்புக்கே போய் காத்திருப்போம். அப்பா வந்ததும், 'ஏன்பா இவ்ளோ லேட்டு'னு சண்டை போட்டுட்டு அப்பா கையிலிருந்து வெடிய வாங்கி அங்கேயே ஒரு வெடி வெடிச்சிட்டுதான் அப்பா கூட வீட்டுக்கு வருவோம். இதெல்லாம் மறக்கமுடியாது."

பரிதாபங்கள்: கோபி - சுதாகர்

கோபி: ``எனக்கு நான் கொண்டாடுன சின்னவயது தீபாவளி எதுவும் மறக்க முடியாது. அதுல ரொம்ப ஸ்பெஷல்னா நான் 6 அல்லது 7th படிச்சிட்டு இருக்கும்போது, சிவகங்கையிலிருந்து சிவகாசி போய் வெடி வாங்கிட்டு வந்தோம். வெங்கட்னு என் பிரண்ட் ஒருத்தன் அவனோட அப்பா நான் மூனுபேரும் சேர்ந்து போயிட்டு, வெடி வாங்கிட்டு பஸ்ல வந்தோம். அப்போ பஸ்ல வெடி கொண்டுபோகக்கூடாதுனுலாம் ரூல்ஸ் இல்ல. கலைஞர் டிவி அட்டைப்பெட்டி முழுசா 2000 ரூபாய்க்கு வெடி வாங்கிட்டு வந்தோம். அந்த தீபாவளிக்குதான் நிறைய வெடிவெடிச்சி கொண்டாடுனோம். அது மறக்கவே முடியாது."

"தீபாவளிக்கு திட்டுவாங்குன அனுபவம் இருக்கா? ஏன்?"

கோபி: ``இருக்கே... தீபாவளிக்கு பெரிய வெடிய எடுத்து யாருக்கும் சொல்லாம திடீர்னு வெடிச்சிடுவேன். வீட்ல இருக்குறவங்கலாம் கொஞ்சம் அரண்டுபோயிடுவாங்க. அப்போ வந்து விழும்பாருங்க... அதுதான் சார் திட்டு. யாரும் எதிர்பார்க்காம வெடிக்கிற வெடிதான் கிக்கு..."

சுதாகர்: ``தீபாவளி அன்னைக்கு எங்களைத் தவிர வேற யாராவது வெடி வச்சிட்டா எங்க அப்பா அம்மாவ சீக்கிரம் எழுப்பிவிட வேண்டியதுதானே... ஏன் எழுப்பலனு நாங்க எங்க திட்டுவோம். எங்களுக்கு முழு கவனமும் எப்போடா வெடி வெடிப்போம்னுதான் இருக்கும். அதனால மத்த வேலைலாம் சீக்கிரமே பண்ணிமுடிச்சிடுவோம்."

பரிதாபங்கள்: கோபி - சுதாகர்
"தீபாவளி - பரிதாபங்கள் மக்கள் என்னலாம் சொல்லிருக்காங்க?"

கோபி: ``எங்க பரிதாபங்கள் வீடியோவுக்கு நெகட்டிவ் கமெண்டை விட பாஸிடிவ் கமெண்ட் தான் அதிகம். நிறையபேரு 'இப்போதாங்க இதைப் பத்தி நினைச்சேன் நீங்க வீடியோ போட்டிருக்கீங்க..." 'என்னங்க எங்க வீட்ல நடக்குறதுலாம் திரையில தெரிது..." இந்த மாதிரியான கமெண்ட் அதிகம். நெகட்டிவ் கமெண்ட் எப்போ வரும்னா நாங்க ஒரு விஷயத்தை ஒருமாதிரி பார்த்திருப்போம். ஆனா அதுக்கு இன்னொரு பக்கம் இருக்கும் அந்த மாதிரியான விஷயங்கள்ல எங்களை அன்பா கண்டிச்சி அதை சரி செய்ய வச்சிருக்காங்க. மக்களை சந்தோஷப்படுத்திட்டு இருக்கோம். அதை தொடர்ந்து செய்வோம்."

"தீபாவளிக்கு அம்மா ஸ்பெஷல்னா என்ன?"

கோபி: ``எங்க வீட்ல தீபாவளி அன்னைக்கு மட்டும் பண்ற ரவை பலகாரம். அது ஸ்வீட் மாதிரி இருக்கும். எங்க அம்மா ஸ்பெஷல்னா அதுதான். வேறலெவல்ல இருக்கும். நானே அதை அவ்ளோ சப்பிடுவேன்."

சுதாகர்: ``வடை மாதிரியே சின்ன சின்ன போண்டா ஒன்னு பண்ணுவாங்க அம்மா... அதுவும், பாயாசமும் அல்டிமெட்டா இருக்கும். இது எங்கவீட்டு தீபாவளி ஸ்பெஷல். தீபாவளி வெடி வெடிச்சிட்டு, போர் அடிக்கும்போது வீட்டுக்கு வந்து பலகாரத்தை சாப்பிட்டுகிட்டே பட்டிமன்றம், எதாவது புதுப்படம் பார்த்துட்டு தூங்குறதுனு அதெல்லாம் தனி சுகம்..."

பரிதாபங்கள் கோபி மனைவியுடன்
"இந்த தீபாவளிக்கு யாருக்கு ஸ்பெஷல் வாழ்த்து? ஏன்?"

கோபி: ``இந்த வருஷ தீபாவளிக்கு ஸ்பெஷல் விஷ்னா அது என் மனைவிக்குதான்... என்னையும், என் குழந்தையையும் நல்லா பார்த்துக்குறாங்க. இது ஒன்னுகாகவே அவருக்கு ஸ்பெஷல் விஷ் பண்ணிடலாம்."

சுதாகர்: ``என் அண்ணன் ராகவனுக்கு ஸ்பெஷல் விஷ் பண்ணலாம். நாங்க ரெண்டுபேரும் சேர்ந்து தீபாவளி கொண்டாடி ரொம்ப வருஷம் ஆகிருச்சி. இப்போ எங்கவீட்ல எல்லாரும் தீபாவளிக்காக வந்திருக்காங்க. அதனால, என் அண்ணனுக்கு ஸ்பெஷல் விஷ் பார்சல் பண்ணிடலாம்."

"வெள்ளித்திரையில் எப்போது?"
பரிதாபங்கள்: கோபி - சுதாகர்

``அதற்கான எல்லா ஏற்பாடுகள் நடந்துட்டு இருக்கு. இந்த வருஷமே எங்களோட படத்தை ரிலீஸ் பண்ணிடலாம்னு நினைச்சோம். ஆனா கொஞ்சம் வேலை இருக்கு. அதனால அடுத்த வருஷம் நிச்சயமாக எங்களை தியேட்டர்ல பார்க்கலாம். அதற்கான எல்லா நடவடிக்கையும் ஏறத்தாழ முடிஞ்சிருச்சி! விகடன் வாசகர்களுக்கு எங்களின் தீபாவளி வாழ்த்துகள்!"

சினிமா விகடனின் பிரத்யேக Whatsapp க்ரூப்

சினிமா தொடர்பான எக்ஸ்க்ளூசிவ் அப்டேட், அசத்தல் பேட்டிகள், டி.வி அப்டேட்கள் என எதையும் மிஸ் செய்யாமல் தெரிந்து கொள்ள...

உங்கள் வாட்ஸ் அப் மூலமே இணைந்திருங்கள் சினிமா விகடனுடன்...

© Copyright @2024 LIDEA. All Rights Reserved.