சிவகார்த்திகேயனின் 'அமரன்' திரைப்படம் தீபாவளி ரிலீசாக இன்று வெளியாகியிருக்கிறது. ஒரு மாஸ் ஹீரோவுக்கு அவருடைய கரியரில் தீபாவளி ரிலீஸ் என்பது ரொம்பவே முக்கியமானது. கொண்டாட்டமான இந்த விடுமுறை நாட்களில் ஒரு மாபெரும் ஹிட்டை கொடுப்பது அவர்களின் ஓட்டத்தை இன்னும் வேகப்படுத்தும். சிகாவின் அறிமுக படமான 'மெரினா' வெளியாகி 12 ஆண்டுகள் ஆகிவிட்டது. இந்த 12 ஆண்டுகளில் 'அமரன்' அவரது இரண்டாவது தீபாவளி ரிலீஸ்.Amaran
இரண்டாண்டுகளுக்கு முன்பு 'பிரின்ஸ்' திரைப்படம் தீபாவளிக்கு வெளியாகி சரியாக போகவில்லை. இப்போது மீண்டும் தீபாவளிக்கு அமரனாக வருகிறார். இந்த முறை அத்தனை தரப்புக்குமே படத்தின் மீது பெரிய நம்பிக்கை இருக்கிறது. படமும் பலத்த எதிர்பார்ப்பை ஏற்படுத்தியிருக்கிறது.
சரியாக 12 ஆண்டுகளுக்கு முன்பு 2012 ஆம் ஆண்டின் தீபாவளிக்கு 'துப்பாக்கி' படம் வெளியாகியிருந்தது. 'துப்பாக்கி' படத்தின் முதல் நாள் முதல் காட்சிக்கு டிக்கெட் வாங்கிய அனுபவத்தை சிகா அப்போது ட்வீட்டாக பதிவிட்டிருப்பார். அந்த ட்வீட் இன்னமுமே சமூகவலைதளங்களில் வைரலாக ஓடிக்கொண்டேதான் இருக்கிறது. தீபாவளி ரிலீஸ் படத்தை பார்க்க முண்டியத்து டிக்கெட் வாங்கியவர் இப்போது தீபாவளிக்கு ஒரு படத்தை ரிலீஸ் செய்கிறார், அந்த படத்துக்கு டிக்கெட் புக்கிங் வேகமாக போய்க்கொண்டிருக்கிறது. இதெல்லாம் வெறும் 12 ஆண்டுகளில் நடந்திருக்கிறது என்பதுதான் இங்கே ஆச்சர்யம். நகைச்சுவை நாயகனாக அறிமுகமாகி ஒரு மாஸ் ஹீரோவாக அவர் எடுத்திருக்கும் அவதாரம் கோலிவுட்டில் நிகழ்ந்த அசாத்திய மேஜிக். தியேட்டர்க்கு டிக்கெட் எடுத்து படம் பார்க்க ஒவ்வொருவரின் மனதுடனும் தன்னை இணைத்துக் கொள்ளும் காந்த சக்தி படைத்தவர்களால் மட்டுமே இந்த உயரத்தை எட்ட முடியும்.
சினிமாவை தாண்டி சிவகார்த்திகேயனின் பின்னணியும் அவரின் வளர்ச்சியில் பெரிய பங்காக இருந்திருப்பதை மறுக்க முடியாது. 'நான் மெட்ரோ சிட்டியிலிருந்து வரவில்லை. முதலில் பீகாருடன் இருந்து அதன்பின் ஜார்கண்டாக பிரிந்த ஒரு பின் தங்கிய மாநிலத்தின் ராஞ்சி என்கிற சிறிய ஊரிலிருந்துதான் வந்தேன். அதனால்தான் என்னையும் என்னுடைய ஆட்டத்தையும் மக்களால் எளிதில் தொடர்புப்படுத்திக் கொள்ள முடிகிறது என நினைக்கிறேன். என்னுடைய ஆட்டத்தை எடுத்துக் கொள்ளுங்கள். அதில் மேதைமை தன்மை இருப்பதை விட எல்லாராலும் எளிதில் பின்பற்றி ஆடக்கூடிய ஒரு இயல்பான தன்மை இருக்கும். அதனால்தான் ரசிகர்கள் என்னை அவர்களில் ஒருவனாக பார்க்கிறார்கள்.' என தோனி ஒரு முறை பேசியிருந்தார். தோனியின் இந்த வரையறையை நாம் சிவகார்த்திகேயனோடும் ஒப்பிட்டுப் பார்க்கலாம்.
சிவகார்த்திகேயன்அவரும் ஒரு இரண்டாம் கட்ட நகரிலிருந்து பெரும்பாலான இளைஞர்களைப் போல பிழைப்பு வேண்டி சென்னையை நோக்கி நகர்ந்தவர். நடுத்தர வர்க்கத்தை சேர்ந்தவர். போட்டி நிறைந்த மீடியா உலகில் எந்த பின்புலமும் இல்லாமல் தன் திறமையின் மீது மட்டுமே நம்பிக்கைக் கொண்டு முன்னேறியவர். எடுத்தவுடனே வெற்றியை அணைத்துக் கொள்ளவில்லை. தோனி தனது முதல் போட்டியில் ரன் அவுட் ஆனதைப் போன்றே ஆங்கரிங் செய்ய அவருக்கு கிடைத்த முதல் வாய்ப்பில் தோற்றவர். இப்படியான விஷயங்கள்தான் சிகாவுடன் நம்மை எளிதில் கனெக்ட்டாக வைத்தது. கூடவே அவரின் காமெடி டைமிங்குகளும் நக்கல் நையாண்டிகளும் அவரின் மீது கூடுதல் ஈர்ப்பை ஏற்படுத்தியது. திரையரங்குகளின் வழி தமிழ் சினிமாவில் உருவான கடைசி ஸ்டார் சிகாதான் என சிலர் சொல்வதுண்டு. ஆனால், அதில் பெரிய உண்மையில்லை என்பதே நிதர்சனம்.
அவர் தொலைக்காட்சியில் ஆங்கராக இருக்கும்போதே அவருக்கென ஒரு தனி ரசிகர் பட்டாளம் இருந்தது. பாய்ஸ் Vs கேர்ள்ஸ், ஜோடி, அது இது எது என அவரின் நிகழ்ச்சிகள் அத்தனையும் TRP யில் புதிய உச்சத்தை எட்டியது. ஒரு குடும்பத்தின் வரவேற்பறையில் அமர்ந்து நிகழ்ச்சிகளை காணும் அத்தனை வயதுக்காரர்களும் அவரின் ரசிகர்களாக இருந்தனர். தொலைக்காட்சியிலேயே அவர் ஒரு பெரிய ஸ்டார்தான். அங்கே ஒரு உச்சத்தை எட்டிய பிறகுதான் சினிமாவை நோக்கி வருகிறார். இதனால்தான் அவரின் ஆரம்பகால படங்களே மினிமம் கேரண்டி படங்களாக இருந்தது. 'மெரினா' 'மனம் கொத்திப் பறவை' 'கேடி பில்லா கில்லாடி ரங்கா' என அவர் நடித்த சிறு பட்ஜெட் படங்கள் கூட பாக்ஸ் ஆபிஸில் நல்ல ரிட்டர்னை கொடுத்தது. அதனால்தான் ஒவ்வொரு படத்திலும் அவரின் வளர்ச்சி கண் கூடாக தெரிந்துகொண்டே இருந்தது.
சாய் பல்லவி, சிவகார்த்திகேயன்அத்தனை தரப்பும் ரசித்து பார்க்கக்கூடிய காமெடி படங்களில் தன்னுடைய நகைச்சுவை பாணியை தூக்கலாக வைத்துக் கொள்வதுதான் சிகாவின் வழக்கமாக இருந்தது. அதுதான் 'எதிர் நீச்சல்' 'வருத்தப்படாத வாலிபர் சங்கம்' போன்ற பெரிய வெற்றிப் படங்களை அவருக்குக் கொடுத்தது. ஒரு கட்டத்தில் அவரின் படங்களின் மீதும் விமர்சனங்கள் வரத் தொடங்கியது. ஒன்றுக்கும் உதவாத நாயக பாத்திரங்களில் மட்டுமே நடிக்கிறார். பெண்களை துரத்தி துரத்தி காதல் செய்வதை இயல்பாக்குகிறார் என கடுமையாக வறுத்தெடுத்தனர். ஒரு கட்டம் வரைக்கும் அடித்ததெல்லாம் சிக்சர் என்றிருந்த சிகா இந்தக் கட்டத்தில்தான் சறுக்கவும் தொடங்கினார். மிஸ்டர் லோக்கல், பிரின்ஸ் மாதிரியான படங்கள் பெருத்த அடி வாங்கியது. மினிமம் கேரண்டி ஹீரோ என்கிற அவரின் மீதான நம்பிக்கையையே குலைக்கும் வகையில் அந்த படங்கள் அமைத்தது. One Season Wonder என்கிற விமர்சனங்களெல்லாம் சிகா மீது விழத் தொடங்கியது. ஆனால், அத்தனை வயதுக்காரர்களையும் குறிப்பாக இளம் பட்டாளத்தை கவர்ந்து வைத்திருக்கும் ஒரு மாஸ் ஹீரோவை அப்படி ஒன்றிரண்டு தோல்விகளை வைத்தெல்லாம் மதிப்பிட்டு விட முடியாது.
மேலும், தனிப்பட்ட முறையில் விழுந்து விழுந்து வெறுமென உழைப்பையும் முயற்சியையும் மட்டுமே நம்பி இந்த இடத்துக்கு வந்து சேர்ந்தவர் என்பதால் சிகாவும் அத்தனை எளிதாக விட்டுக் கொடுக்கவில்லை. சூப்பர் ஸ்டார் சொன்னதைப் போல குதிரையாக டக்கென்று எழுந்து நின்றார். தன்னுடைய பாணியை மாற்றி 'மாவீரன்' என்ற படத்தில் நடித்தார். அதுவரை இல்லாத வகையில் சிகா இந்தப் படத்தில் நடிப்பில் பிரமாதப்படுத்தினார். நேர்மையான கதையையும் திரைக்கதையையும் மட்டுமே நம்பி இறங்கி ஒரு பெரிய வெற்றியின் மூலம் மீண்டும் தான் ஒரு மாஸ் ஹீரோதான் என்பதை நிரூபித்தார். 'அமரன்' க்குப் பிறகு அவர் அடுத்தடுத்து வைத்திருக்கும் லைன் அப்களும் நம்பிக்கையளிக்கக் கூடியதாக இருக்கிறது.
Sivakarthikeyan |சிவகார்த்திகேயன்சினிமா ஒரு 'கனவு தொழிற்சாலை'. இங்கே எல்லாராலும் இலக்கை எட்டிவிட முடியாது. அப்படி இலக்கை எட்டும் பெரும்பாலானவர்களின் வெற்றியை நாம் அண்ணாந்துதான் பார்க்க முடியும். நம்மாலும் போராட முடியும், உழைப்பை மட்டுமே நம்பி நம்மாலும் வெல்ல முடியும் என்கிற நம்பிக்கையை ஒரு சிலரால் மட்டுமே கொடுக்க முடியும். தீபாவளிக்கு துப்பாக்கி ஏந்தி அமரனாக வந்து நிற்கும் சிவகார்த்திகேயனின் வெற்றி அப்படிப்பட்டது. அவர் நம்மிலிருந்து புறப்பட்டு நமக்கான நம்பிக்கையாக திரையில் ஜொலித்துக் கொண்டிருப்பவர். காலம் அவர் கையில் திணிக்கும் துப்பாக்கிகள் அவரின் உழைப்புக்கும் திறமைக்குமான பரிசுகளே!