சின்னத்திரை ரசிகர்கள் மத்தியில் தனக்கென ஓர் இடத்தை தக்க வைத்துக் கொண்டிருப்பவர் வெற்றி வசந்த். ஆரம்பத்தில் யூடியூபராக அறிமுகமாகி சில ஷார்ட் ஃபிலிம்களில் நடித்திருந்தார். சின்னத்திரையில் முதல்முறையாக சிறகடிக்க ஆசை சீரியலில்தான் கதாநாயகனாக நடிக்க தொடங்கினார். முதல் சீரியலிலேயே தன் திறமையை நிரூபித்து, மக்களிடம் பெரும் வரவேற்பை பெற்றிருக்கிறார். வெற்றி வசந்த் என்பதைவிட முத்து என்ற கதாபாத்திரமாகவே மக்கள் இவரை ஏற்றுக்கொண்டது இவருக்கு கிடைத்திருக்கும் அங்கீகாரமே. சமீபத்தில் இவருக்கும் பொன்னி சீரியலின் கதாநாயகி வைஷ்ணவிக்கும் இருவீட்டார் சம்மதத்துடன் நிச்சியதார்த்தம் நடந்து முடிந்திருக்கிறது.
வெற்றி வசந்த் மறக்கவே முடியாத தீபாவளிவாழ்வின் மற்றொரு பரிமாணத்துக்கு தயாராகும் முத்து எனும் வெற்றி வசந்திடம் திபாவளி கொண்டாட்டம் குறித்து பேசினோம். குறிப்பாக, 'எந்த தீபாவளியை உங்களால மறக்கவே முடியாது' எனக் கேட்டோம்.
அதற்கு அவர், ``மறக்கவே முடியாத தீபாவளினா அது கத்தி படம் ரிலீஸான அந்த தீபாவளிதான் என்றார்..." அப்படியா என நாங்கள் ஆச்சர்யப் பார்வை பார்க்கும்முன்பே, துருதுருவெனப் பேசத் தொடங்கினார். ``ஆமா... எனக்கு கத்தி படம் ரிலீஸான அந்த தீபாவளி மறக்கவே முடியாது. பொதுவா புதுப் படம் ரிலீஸ் ஆச்சுனா நானும் அப்பாவும் சனி - ஞாயிறுல போய் பார்த்துடுவோம். நான் மட்டும் தனியா படத்துக்கு போக எங்க வீட்ல விடவே மாட்டாங்க. அதே மாதிரிதான், தீபாவளி, பொங்கல்னு எந்த பண்டிகைக்கும் எங்க வீட்ல படத்துக்குலாம் போகமாட்டாங்க.
பண்டிகை நாட்களில் வீட்லயே எல்லாரும் ஒன்னா இருக்கணும்னு அப்பா விரும்புவார். என்னையும் படத்துக்கு அனுப்பமாட்டார். அந்த மாதிரி வந்த ஒரு தீபாவளிக்குதான் கத்தி படம் ரிலீஸ் ஆச்சு. அந்தப் படத்துக்கு போகுறதுக்காக அப்பாகிட்ட தயக்கத்தோட பர்மிஷன் கேட்டேன். அப்போதான் அப்பா என்னை நம்பி தனியா முதல்முறையா படத்துக்கு அனுப்பினார். அந்த நாள்ல எனக்கு இருந்த சந்தோஷம் அளவிட முடியாது. தனியா போய் முதல்முறையா கத்தி படம்தான் பார்த்தேன். அதுக்கு அப்புறம் பலமுறை தனியா படம் பார்த்திருக்கேன். ஆனா என்னால மறக்க முடியாத ஒரு தீபாவளினா அதுதான்..!" என்றவர், நமக்கும் `தீபாவளி வாழ்த்துகள் பாஸ்’ என வாழ்த்துகளை பகிர்ந்து கொண்டார்!
சினிமா விகடனின் பிரத்யேக Whatsapp க்ரூப்
சினிமா தொடர்பான எக்ஸ்க்ளூசிவ் அப்டேட், அசத்தல் பேட்டிகள், டி.வி அப்டேட்கள் என எதையும் மிஸ் செய்யாமல் தெரிந்து கொள்ள...
உங்கள் வாட்ஸ் அப் மூலமே இணைந்திருங்கள் சினிமா விகடனுடன்...