போலீஸ் ஸ்டேஷனை ஸ்டூடியோவாக்கி சேனலுக்கு பேட்டி கொடுத்த லாரன்ஸ் பிஷ்னோய்; உயர் நீதிமன்றம் கண்டனம்!
Vikatan October 31, 2024 03:48 PM

பாலிவுட் நடிகர் சல்மான் கானுக்கு தொடர்ந்து கொலை மிரட்டல் விடுத்து வரும் மாஃபியா கும்பல் தலைவன் லாரன்ஸ் பிஷ்னோய் தற்போது குஜராத் சிறையில் அடைக்கப்பட்டு இருக்கிறார். அவர் பஞ்சாப் பாடகர் சித்து மூஸ்வாலா படுகொலையில் முக்கிய குற்றவாளியாக சேர்க்கப்பட்டுள்ளார். இக்குற்றத்திற்காக பஞ்சாப் போலீஸார் லாரன்ஸ் பிஷ்னோயை பஞ்சாப்பிற்கு அழைத்துச் சென்றனர். பஞ்சாப் சிறையில் அடைக்கப்பட்டு இருந்தபோது கடந்த ஆண்டு டி.வி சேனல் ஒன்றுக்கு லாரன்ஸ் பிஷ்னோய் பேட்டி கொடுத்திருந்தார். அந்த பேட்டி நேரடியாக ஒளிபரப்பு செய்யப்பட்டது.

அப்பேட்டியில், சித்து மூஸ்வாலா படுகொலை தொடர்பாக தனக்கு முன்கூட்டியே தெரியும் என்று லாரன்ஸ் பிஷ்னோய் தெரிவித்திருந்தார். பஞ்சாப் சிறையில் மொபைல் போன் உட்பட எலக்ட்ரானிக்ஸ் பொருட்கள் பயன்படுத்தப்படுவதாக வந்த குற்றச்சாட்டை தொடர்ந்து இது குறித்து பஞ்சாப் மற்றும் ஹரியானா உயர் நீதிமன்றம் தாமாக முன்வந்து விசாரிக்க ஆரம்பித்தது. நீதிபதிகள் அனுபிந்தர் சிங், லபிதா பானர்ஜி ஆகியோர் அடங்கிய அமர்வு முன்பு இது விசாரணைக்கு வந்தது. இதில் கருத்து தெரிவித்த நீதிபதிகள், ``போலீஸ் அதிகாரிகள் கிரிமினல்கள் மொபைல் போன் போன்ற எலக்ட்ரானிக் பொருட்களை பயன்படுத்த அனுமதி கொடுத்துள்ளனர்.

குற்றவாளிகளும், அவர்களது கூட்டாளிகளும் மிரட்டி பணம் பறித்தல் போன்ற குற்றத்தை செய்ய போலீஸ் அதிகாரிகள் காவல் நிலையத்தில் ஸ்டூடியோ வசதியை ஏற்படுத்திக்கொடுத்துள்ளனர். கிரிமினல்கள் மற்றும் அவர்களது கூட்டாளிகளிடமிருந்து லஞ்சம் வாங்கிக்கொண்டு இது போன்று செய்ய போலீஸ் அதிகாரிகள் உடந்தையாக இருந்துள்ளனர். எனவே இது குறித்து மேற்கொண்டு விசாரிக்கப்படவேண்டியது அவசியம். இது குறித்து புதிய சிறப்பு விசாரணைக்கு குழு விசாரிக்க வேண்டும்" என்று நீதிபதிகள் உத்தரவிட்டனர். லாரன்ஸ் பிஷ்னோய் காவல் நிலைய வளாகத்தை பேட்டி எடுக்க பயன்படுத்தி இருப்பது தெளிவாக தெரிய வந்துள்ளது.

காவல் நிலைய அதிகாரி தனது அலுவலகத்தை ஸ்டூடியோவாக பயன்படுத்தி லாரன்ஸ் பிஷ்னோய் பேட்டி கொடுக்க வாய்ப்பு ஏற்படுத்திக்கொடுத்துள்ளார். காவல் நிலைய வைஃபை வசதி இதற்கு பயன்படுத்தப்பட்டுள்ளது. இது குறித்து லஞ்ச ஒழிப்பு தடுப்பு சட்டத்தின் கீழ் விசாரிக்கப்படவேண்டியது அவசியம். பஞ்சாப் மனித உரிமை கமிஷன் தலைவர் டி.ஜி.பி. தரப்பில் தாக்கல் செய்யப்பட்ட அறிக்கையில், லஞ்ச ஒழிப்பு தடுப்பு சட்டத்தின் கீழ் சிறப்பு விசாரணைக்குழு விசாரிக்க அதிகாரம் இல்லை என்று வாதிட்டார். ஆனால் அதனை நீதிபதிகள் ஏற்றுக்கொள்ள நீதிபதிகள் மறுத்துவிட்டனர்.

© Copyright @2024 LIDEA. All Rights Reserved.