``மீண்டும் சிவகார்த்திகேயன், சூரி கூட்டணி... ஒரு ஐடியா இருக்கு!” - இயக்குநர் பொன்ராம் எக்ஸ்க்ளூஸிவ்
Vikatan October 31, 2024 03:48 PM
ஒவ்வொரு காலகட்டத்திலும் ஒவ்வொரு ஜானர் திரைப்படங்கள் கொத்துக் கொத்தாக திரைக்கு வரும். அந்த வகையில் கிராமங்களை கதைக்களங்களாக கொண்ட திரைப்படங்கள் பலவற்றில் வன்முறை காட்சிகள் வரிசைக்கட்டிக் கொண்டிருந்தது. அந்தச் சூழலில், வருத்தப்படாத வாலிபர் சங்கம், ரஜினிமுருகன், சீமராஜா, எம்.ஜி.ஆர் மகன் என அடுத்தடுத்த கிராமத்து படங்களில் சிரிப்பு பட்டாசுகளை கொழுத்தி போட்டு குழந்தை முதல் முதியவர்கள் வரை திரையரங்குகளை நோக்கி கொண்டாட்டமாக வரவைத்த பெருமை இயக்குநர் பொன்ராமை சாரும்.
இயக்குநர் பொன்ராம்

மீண்டும் அதே கிராமத்துக்கு கதைக்களத்தோடு தேனி மாவட்டம் பெரியகுளம் அருகே படப்பிடிப்பை பரப்பரப்பாக நடத்திக் கொண்டிருந்தார் பொன்ராம். டீ பிரேக்கின் போது தீபாவளி ஷ்பெஷல் பேட்டிக்காக வந்திருப்பது குறித்து அவரிடம் தெரிவித்தோம். சிறிது நேரத்தில் மாலை மங்கியதும் அன்றைய படப்பிடிப்புக்கு பேக்கப் சொல்லிவிட்டுவந்தவர் கொஞ்சம் கூட சோர்வின்றி உற்சாகமாக பேசத் தொடங்கினார்.

``உங்களுடைய திரைப்படங்கள் அனைத்தும் கிராமங்களை கதைக்களங்காக கொண்டிருக்க காரணம் என்ன?”

``மதுரை மாவட்டம் உசிலம்பட்டி அருகே பூச்சிப்பட்டி என்ற கிராமம் தான் எனக்கு சொந்த ஊர். பத்தாம் வகுப்பு வரை அந்த ஊரில் தான் படித்தேன். மாலை ஊர் மந்தையில் கூடும் பெரியவர்கள், சிறுவர்கள் கதைகள் பேசிக் கொண்டு அங்கே தூங்கிவிட்டு காலையில் எழுந்து, வயல்வெளிகளுக்கு நடுவே நடந்து சென்று இருக்கும் கிணற்றில் குளித்துவிட்டு பள்ளிக்கு செல்வோம்.

இயக்குநர் பொன்ராம்

பத்தாம் வகுப்புக்கு பிறகு தேனி அல்லிநகரத்தில் உள்ள என் அக்காவீட்டிற்கு வந்துவிட்டேன். தேனியின் தாய்க்கிராமமான அல்லிநகரமும் அழகிய ஊர். சைக்கிளை எடுத்துக் கொண்டு இந்தச் சுற்றுவட்டாரங்களில் சுற்றாத இடமில்லை. இங்கிருந்த மனிதர்களிடம் இருந்தே என் படத்திற்கான கதாபாத்திரங்களை உருவாக்குகிறேன். அதனால் என் படங்களுக்கான கதைக்களமும் அழகிய கிராமங்களை கொண்டதாக இருக்கிறது.”

``கிராமத்தில் சுற்றித்திரிந்த அந்த சிறுவனுக்கு சினிமா ஆசை வந்தது எப்படி?”

``பள்ளிக்காலத்தின் போதே தியேட்டருக்கு சென்று சினிமா பார்க்கும் ஆர்வம் வந்துவிட்டது. பள்ளிப்படிப்பை முடித்துவிட்டு டெக்ஸ்டைல் மில் ஒன்றில் வேலை பார்த்துவந்தேன். அப்போது சுக்குவாடன்பட்டியைச் சேர்ந்த பாஸ்கரன் என்ற நண்பனுடன் சேர்ந்து தினமும் பாத்தும்மா தியேட்டருக்கு படம் பார்க்க சென்றுவிடுவேன். அப்போது இயக்குநர்  இமையம் பாரதிராஜாவின் படங்களை விரும்பி பார்த்தேன்.

`கிழக்கு சீமையிலே’ படத்தில்

குறிப்பாக அவருடைய கிழக்கு சீமை, இயக்குநர் மணிரத்னத்தின் ரோஜா ஆகிய படங்கள் எனக்கு சினிமா மீது தீவிர காதல் ஏற்பட காரணமாக அமைந்தது. பள்ளியில் படிக்கும் போது கவிதை, கட்டுரை எழுதும் திறமை இருந்தது. மேலும் மாணவர்களாக சேர்ந்து நாடகங்களையும் நடத்தியதில் பாராட்டு கிடைத்தது. என்னைச் சுற்றியிருந்தவர்கள் என்னை சினிமா இயக்குநர் எனக் கூறி வந்தனர். இதெல்லாம் சேர்ந்து தான் ஆனந்த் என்ற நண்பரின் உதவியோடு சினிமா இயக்குநராகும் கனவோடு சென்னைக்கு புறப்பட்டேன்.”

``சினிமா கனவை நிறைவேற்ற எதிர்கொண்ட சவால்கள் என்ன?“

``மேற்கு தொடர்ச்சி மலை அடிவாரத்தில் உள்ள தேனி மாவட்டத்தில் இருந்து தமிழ் சினிமாவில் பாரதிராஜா, இளையராஜா, வைரமுத்து என எத்தனையோ ஜாம்பவான்கள் உருவாகியிருக்கிறார்கள். இந்த ஊரின் இயற்கை சூழலே படைப்பாளிகளை உருவாக்கிறதா எனத் தெரியவில்லை.

இயக்குநர் பொன்ராம்

அந்த இயற்கை தான் எனக்கும் சினிமா கனவை உருவாக்கியது என நினைக்கிறேன். ஆனால் சென்னைக்கு வந்தபிறகு தான் எனக்கு சினிமாவுக்கான திறமை தகுதி 5 சதவிகிதம் கூட இல்லை கனவு மட்டும் போதாது எனத் தெரிந்தது. அந்த திறமைகளை கொஞ்சம் கொஞ்சமாக வளர்த்துக் கொண்டதே சவாலாக தான் இருந்தது.”

``உங்கள் சினிமா பயணத்தில் முதல் பட வாய்ப்பு குறித்து கூறுங்கள்?”


``எஸ்.ஏ.சி., சாரிடம் உதவியாளராக சேர்ந்து சினிமா பயணத்தை தொடங்கினேன். பத்து ஆண்டுகளுக்கு பிறகு திருத்தம் என்ற படத்தை இயக்கும் வாய்ப்பு கிடைத்தது. படம் சரியாக போகவில்லை. அதன்பிறகு 7 ஆண்டுகள் மிகவும் கஷ்ட காலமாக இருந்தது. அப்போது சிலர் உன் சினிமா வாழ்க்கை அவ்வளவு தான் என்றனர்.  இனிமேல் சினிமாவில் ஜெயிக்க முடியாது என்ற விரக்தி ஏற்பட்டு சொந்த ஊருக்கும் திரும்ப முடியாமல் இருந்தேன்.

சிவா மனசுல சக்தி

எஸ்.ஏ.சி., சாரிடம் உதவியாளராக இருந்த காலத்தில் இருந்து நண்பராக இருந்த இயக்குநர் ராஜேஷ் படங்களில் இணை இயக்குநராக பணியாற்றத் தொடங்கினேன். கிராமச் சூழலில் வளர்ந்த நான் சீரியஸ் கதைகளாக வைத்திருத்தேன். அப்போது ராஜேஷ் தான் உனக்கு காமெடி கதைகள் தான் சரியாக வரும். காமெடி கதைகளை எழுது என்றார். அதன்பிறகு தான் ஆணவக் கொலையை மையமாக வைத்து எழுதியிருந்த கிராமத்து கதையை 'வருத்தப்படாத வாலிபர் சங்கம்' என்ற தலைப்பில் காமெடி கதையாக மாற்றி வெற்றி பெற்றேன்.”

``அந்த பட வெற்றியின் சென்டிமென்ட்டால் தான் உங்களின் அடுத்தடுத்த படங்களின் படப்பிடிப்பை தேனியில் நடத்துகிறீர்களா?”

``ஆமாம். சிறுவயதில் மேற்கு தொடர்ச்சி மலை அடிவாரத்தில் உள்ள வீரப்ப அய்யனார் கோயிலுக்கு அடிக்கடி செல்வேன். அங்கு மரத்தடியில் படுத்து கொண்டு தான் கதைகளை யோசித்து கொண்டிருப்பேன்.

வைகை அணை

இதனால் தான் சென்டிமென்டாக என்னுடைய அனைத்து படங்களுக்கும் ஏதாவது ஒரு காட்சியை வீரப்ப அய்யனார் கோயிலில் வைத்து எடுத்துவிடுவேன். அதேபோல எனக்கு வைகை அணை மற்றும் சுற்றியுள்ள பகுதிகள் மிகவும் பிடிக்கும் அப்பகுதிகளிலும் படப்படிப்பை நடத்துவேன். இங்குள்ள இயற்கையான சூழல், பழைமையான கிராமங்கள் கிராமத்து கதைக்களங்களுக்கு தேவையானதாக இருக்கிறது.”

``காமெடி படங்கள் எடுப்பதால் உங்களுக்கு உரிய அங்கீகாரம் கிடைக்கவில்லை என நினைக்கிறீர்களா?”

``பெண் கல்வியின் தேவை, குழந்தை திருமண விழிப்புணர்வை மையப்படுத்தி தான் வருத்தப்படாத வாலிபர் சங்கம் எடுத்தேன். உறவுகளின் மேன்மையை பேசும் வகையில் ரஜினிமுருகன் எடுத்தேன். கார்ப்பரேட் சதியால் விவசாய நிலம் பறிபோவது குறித்து சீமராஜாவில் பேசினேன். பாரம்பரிய வைத்திய முறை, சித்த மருத்துவம் குறித்து எம்.ஜி.ஆர் மகனில் சொல்லியிருந்தேன். ஆனால் காமெடி பட இயக்குநர் என்ற அடையாளம் மட்டுமே கிடைத்தது. க்ளைமேக்ஸ் காட்சியில் தலையை துண்டாக்கும் காட்சிகளை வைத்தால் தான் அங்கீகாரம் கிடைக்குமா எனத்தெரியவில்லை. பெரிய ஹிரோக்களும் காமெடி படங்களுக்கு முக்கியத்துவம் கொடுப்பதில்லை.

வருத்தப்படாத வாலிபர் சங்கம் பார்ட் - 2?

அவர்கள் தலையை துண்டாக்கும் காட்சியில் நடிப்பதை குழந்தைகள் பார்க்கின்றனர் என்பதை கவனத்தில் கொள்ள வேணடும். தியேட்டருக்குள் வந்தால் மனஅழுத்தம் நீங்க சிரித்து மகிழ்ச்சியாக செல்ல வேண்டும் என்பதே எனது நோக்கம். எனக்கும் ஆக்ஷன், சிட்டி படங்கள் எடுக்க வேண்டும் என்ற எண்ணம் இருக்கிறது. அதற்காக இவ்வளவு வன்முறை தேவையில்லை. கிராமங்கள் என்றாலே வெட்டு, குத்து, சாதி பிரச்னை என காட்ட வேண்டியது இல்லை. கிராமத்தில் பயங்கர ஹியூமர் உள்ளது. நான் அந்த மக்களின் ஹியூமரை எடுத்துக் கொண்டு தான் காட்சிகளை அமைக்கிறேன்.”

``சினிமா பயணத்தில் நடிகர்கள் சிவகார்த்திகேயன், சூரி ஆகியோருக்கு உங்களின் அடுத்தடுத்த 3 படங்களும் பெரும் திருப்புமுனையாக மாறியது. அவர்களின் வளர்ச்சி குறித்து?”

``அர்ப்பணிப்போடு உழைக்கக் கூடியவர்கள். சிவா அவருக்கான பாதையில் சிறப்பாக சென்றுவிடுவார் என்பது எல்லோருக்கும் தெரியும். சூரியின் உழைப்பினால் அவர் அடைந்துள்ள வளர்ச்சி முக்கியமானது.

வருத்தப்படாத வாலிபர் சங்கம்

கருடன் படத்திற்கு முன்பாகவே அவரை நாயகனாக வைத்து படம் எடுக்கவும் பேசியிருக்கிறோம். அவரே ஒரு கதையை கூறி எடுக்கலாமா என ஆலோசித்திருக்கிறார். அதேபோல மீண்டும் சிவா, சூரி கூட்டணியில் ஒரு படம் எடுப்பதற்கான ஐடியாவும் இருக்கிறது. அது எல்லோருடைய எதிர்பார்ப்பாகவும் இருக்கிறது. அதற்குரிய சூழல் வந்தால் விரைவில் வேலை தொடங்கும்.”

``தொடர்ச்சியாக காமெடி ஜானரில் வெற்றி படங்கள் எடுத்துவந்த உங்களுக்கும், உங்கள் நண்பர் ராஜேஷுக்கும் திடீர் சறுக்கல் ஏற்பட்டுள்ளதாக நினைக்கிறீர்களா?”


``சறுக்கல் இல்லை. மொத்தமாக க்ளோஸ் ஆகிட்டோம். இப்போ அப்டேட்  ஆகி மீண்டும் முதலில் இருந்து தொடங்கியிருக்கிறோம்.

இயக்குநர் பொன்ராம்

ஆக்ஷன் படங்களை கூட எளிதாக எடுத்துவிடலாம். ஆனால் காமெடி படங்களை எடுப்பது என்பது பெரும் சவாலானது. எல்லாம் சரியாக அமைய வேண்டும்” என்றார்.

சினிமா விகடனின் பிரத்யேக Whatsapp க்ரூப்

சினிமா தொடர்பான எக்ஸ்க்ளூசிவ் அப்டேட், அசத்தல் பேட்டிகள், டி.வி அப்டேட்கள் என எதையும் மிஸ் செய்யாமல் தெரிந்து கொள்ள...

உங்கள் வாட்ஸ் அப் மூலமே இணைந்திருங்கள் சினிமா விகடனுடன்...

© Copyright @2024 LIDEA. All Rights Reserved.